June 7, 2023 6:38 am

‘செங்களம்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகர் கலையரசனும், நடிகை வாணி போஜனும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘செங்களம்’ எனும் இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் இணையத் தொடர் ‘செங்களம்’. இதில்  கலையரசன், வாணி போஜன், பிரேம், டேனியல் போப், கஜராஜ், விஜி சந்திரசேகர், ஷாலி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு தரண் குமார் இசையமைத்திருக்கிறார்.

அரசியல் பின்னணியில் ஒன்பது அத்தியாயங்களாக உருவாகி இருக்கும் இந்த இணையத் தொடரை அபி அண்ட் அபி எண்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் தயாரித்திருக்கிறார்.

எதிர் வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் வெளியாகவிருக்கும் இந்த இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் பங்குபற்றி இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசுகையில், “நான் இயக்கம் முதல் இணைய தொடர் செங்களம். விருதுநகர் நகராட்சியின் தலைவராக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய அரசியல்வாதி ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும் சுவராசியமாகவும் விவரிக்கும் தொடர் இது. அரசியல் தளத்தில் ஒரு பதவியில் இருக்கும் அரசியல்வாதியின் நடவடிக்கையும், செயல்பாடுகளும் எப்படி இருக்கும் என்பதனை மிகவும் நுணுக்கமான முறையில் விவரித்திருக்கிறேன். அரசியலில் துரோகங்கள், வலிகள், வேதனைகள் ஆகியவை பற்றியும், கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியலும் இந்தத் தொடரில் ஏதேனும் ஒரு வடிவத்தில் இடம் பிடித்திருக்கிறது. கிரைம் கலந்த பொலிட்டிக்கல் திரில்லர் ஜேனரில் ஒன்பது அத்தியாயங்களாக இந்த இணைய தொடர் உருவாகி இருக்கிறது.” என்றார்.

இதனிடையே ‘விலங்கு’, ‘அயலி’ ஆகிய இணையத்தொடர்களின் வெற்றியைத் தொடர்ந்து ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும் ‘செங்களம்’ தொடருக்கும் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்