கிளிநொச்சியின் கல்வி வளர்ச்சிக்காக ஐந்தாண்டுத் திட்டம்
கிளி மக்கள் அமைப்பு முன்முயற்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, கிளி மக்கள் அமைப்பினால் “கிளிநொச்சி கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்” (Kilinochchi Educational Development Program) என்ற பெயரில் ஐந்தாண்டுக் கல்வித் திட்டமொன்றை உருவாக்குவதற்கான முன்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கல்வித்துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருடனும் இலண்டனில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
முன்மொழியப்படவுள்ள ஐந்தாண்டுக் கல்வித் திட்டத்தைத் திட்டமிடும் நோக்கில், கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலைமைகள், தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்திக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் விரிவான புலமைசார் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிளிநொச்சியில் உள்ள இரண்டு வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மூன்று பீடங்களின் பீடாதிபதிகள், மாவட்டச் செயலாளர், நான்கு பிரதேசச் செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளின் ஆலோசனைகளும் பெறப்படவுள்ளன. பல்வேறு துறைகளின் அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் ஒன்றிணைத்து, மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்கான நடைமுறைச் சாத்தியமான திட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் மாவட்டத்தின் நீண்டகாலக் கல்வி வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குதல் போன்ற இலக்குகளை முன்னிறுத்தி இத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
பல்வேறு கல்வி மற்றும் நிர்வாகத் தரப்பினரின் பங்கேற்புடனும் புலமைசார் ஆலோசனைகளின் அடிப்படையிலும் உருவாக்கப்படவுள்ள இந்த ஐந்தாண்டுத் திட்டம், கிளிநொச்சியின் கல்வி அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த செயற்பாட்டு வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.