
எதேச்சையாக
ஒரு முறை தம் அந்தரங்க ரகசியத்தை
என்னிடம் சொன்னவர்கள்
அதற்குப்பின்
என்னை சந்திப்பதே இல்லை
ஒருமுறை என்னால்
தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள்
அதற்குப்பின்
எனது ஒரு பிறந்த நாளிலும்
எனக்கு வாழ்த்துச் சொன்னதே இல்லை
ஒருமுறை தாளமாட்டாமல்
என்னிடம் காதலைவெளிப்படுத்தியவர்கள்
மறுநாளிலிருந்து
என் கண்களை
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
ஒருமுறை உதவிகேட்டு வந்தவர்கள்
மறுமுறை என்னைக் காணும்போது
ஒரு புன்னகைகூட புரிவதில்லை
அவர்களின் வீழ்ச்சியின் கணத்தின்
ஆடை விலகியதை
நான் ஒரு கணம் கண்டுவிட்டதை நினைத்து
அவ்வளவு கூசிப்போகிறார்கள்.
அவர்கள் வழியிலிருந்து
நான் ஒரு பனித்துளிபோல
உலர்ந்துவிடவேண்டும் என
ஆசைப்படுகிறார்கள்
தம் இருளின் சாட்சிகளைக்காண
யார்தான் விரும்புவார்கள்?
24.12.2021
காலை 9.34
மனுஷ்ய புத்திரன்