Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் நூலமாக மாறிய முடி திருத்தகம் | பாண்டியன் சுந்தரம்

நூலமாக மாறிய முடி திருத்தகம் | பாண்டியன் சுந்தரம்

3 minutes read

முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்! வருகிறவர் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூபாய் 30 தள்ளுபடி தந்து, அசத்துகிறார் முடிதிருத்தும் கலைஞர் பொன் மாரியப்பன்!

வழக்கமான முடி திருத்தகங்களில் காணப்படும் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நட்சத்திரப் படங்கள் என்ன, எந்த நட்சத்திரப் படங்களும் இந்தக் கடையில் இல்லை. மாறாக, மர அலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்க முடி திருத்த வந்தோர் அமைதியாக அந்தப் புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்..

தன் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, கடைக்குள் சிறிய நூலகத்தை அமைத்துள்ளார் தூத்துக்குடி மில்லர்புரத்தில் ‘சுசில்குமார் பியூட்டி கேர்’ என்ற பெயரில் முடி திருத்தகம் நடத்திவரும் பொன்.மாரியப்பன். அதை முடிதிருத்தும் கடை என்பதைவிட மூளையை புதுப்பிக்கும் கடை என்று தாராளமாகச் சொல்லலாம்.

வழக்கமாக முடி திருத்தும் கடைக்குச் செல்கிறவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் பொன் மாரியப்பன் கடைக்குச் செல்கிறவர்கள் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை கண்டிப்பாகக் காண முடிகிறது.

பொன் மாரியப்பன்‌ கடைக்கு நாளிதழ்கள், வார இதழ்களும் வருகின்றன. அத்தோடு கதை, சிறுகதை, கவிதை, வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், நாவல்… என சுமார் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மர அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பேச்சு, திரைப்படப் பாடல்கள் என எந்த சப்தமுமின்றி, முடிவெட்டும் கத்தரிக்கோல் சப்தம் மட்டுமே இங்கே கேட்கிறது.

சின்ன வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் மாரியப்பனுக்கு உண்டு. 8-ஆம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருக்கிறார். சில ஆண்டுகள் ஒரு வக்கீலிடம் சிப்பந்தியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு, அப்பா செய்துவந்த இந்த முடி திருத்தும் தொழிலைத் தொடர கடை ஆரம்பித்தார். முடிவெட்ட ஆள் வராத நேரத்தில் புத்தகம் வாசிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படி, முழுமையாகப் படித்து முடித்த புத்தகங்களை அலமாரியில அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறார். அது இன்று 400க்கும் மேற்பட்ட ஒரு நூலகமாக உருவெடுத்திருக்கிறது.

இந்தக் கடையைத் துவங்கி ஆறு வருஷம் ஆகிறது.

“புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தணும், குறைந்தபட்சம் முடிவெட்ட வந்திருக்கும் நேரத்துலயாவது புத்தகங்களைப் படிக்க வைக்கணும்னு நினைச்சேன். தனியா புத்தக அலமாரி ஒண்ணு வாங்கி, அதுல என் கைவசம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் வரிசையா அடுக்கிவெச்சேன். முடிவெட்ட காத்திருப்பவர்களிடம், பிடிச்ச புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னேன். முதலில் தயக்கம்காட்டியவர்கள், பிறகு எடுத்து மேலோட்டமாகப் புரட்ட ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. செல்பேசியில் மூழ்கிக் கிடக்கக்கூடாது, அடிக்கடி செல்பேசி பார்ப்பதால் ஏற்படும் தீமைகள். குறித்து நாளிதழ்களில் வெளியான தகவல்கள், கட்டுரைகளையும் அனைவரின் பார்வையில் படுறமாதிரி ஒட்டி வச்சிருக்கேன்”என்கிறார் பொன் மாரியப்பன்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரையில் இவருக்கு ’புத்தகர் விருது’ கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரது சேவையைப் பாராட்டி தூத்துக்குடியில் உள்ள பலரும் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி இவரது கடைக்கு வந்து நூலகத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் 50 புத்தகங்களை அன்பளிப்பாகவும் வழங்கியிருக்கிறார்.

இப்போது கடைக்கு முடிவெட்ட வருகிறவர்கள் யாரும் செல்பேசிப் பார்ப்பதில்லை. முடிவெட்டிய பிறகும் சில நிமிடங்கள் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்துவிட்டு, பொறுமையாக வீட்டுக்குப் போகிறவர்களும் நிறைய உண்டு.

முடிதிருத்தும் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டு செல்லும்போதும், இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு ரூபாய்கூட கட்டணத்தை உயர்த்தியதில்லை மாரியப்பன். இந்த ஆண்டு உயர்த்தச் சொல்லி மற்ற கடைக்காரர்கள் வற்புறுத்தியபோதிலும், 50 ரூபாயாக இருந்த கட்டணத்தை, 80 ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கிறார், நீண்ட யோசனைக்குப் பிறகு.

இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை பொன் மாரியப்பன் வெளியிட்டுள்ளார். அதாவது வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முடி வெட்டும் கட்டணம் ரூபாய் 80 ஆக உயர்த்தப்படுகிறது முடிவெட்ட வருகிறவர்கள் இங்குள்ள ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு 30 ரூபாய் கட்டண சலுகை வழங்கப்படும். இதுதான் அந்த அறிவிப்பு.

“கட்டணத்தைக் கூட்டிச் சொல்லி, புத்தகம் வாசிச்சா 30 ரூபாய் குறைப்புன்னு சொல்றது… எப்படிப் பார்த்தாலும் அதே 50 ரூபாய் கட்டணம்தானே உனக்கு கிடைக்குது” என்று மாரியப்பனிடம் மற்ற கடைக்காரர்கள் இப்போது கேட்கிறார்கள்

“மத்த கடைக்காரர்களுக்காக கட்டணத்தைக் கூட்டினேன். இதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால், புத்தகத்தை வாசிக்கச் சொல்லி குறைச்சிட்டேன். இதுல எனக்கு ஒரு மன நிறைவு” மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் பொன். மாரியப்பன்.

புத்தக வாசிப்பே அருகி வரும் இந்தக் காலத்தில் பொன் மாரியப்பனின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதே! முடி குறையட்டும்; அறிவு வளரட்டும்!

பாண்டியன் சுந்தரம்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More