
நா.மு❤️
நா.முத்துக்குமார் எனும் மகாகவிஞனை எண்ணி வியந்துகொண்டே இருக்கலாம். அவனின் பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப கேட்டுக்கோண்டே இருக்கலாம். அவரின் வரிகள், நமது நாளாந்த வாழ்விலிருந்து எடுக்கப்பட்டவை என்பதே அதற்குக் காரணம்.
“கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை” என்ற வரிகளை எழுதிய நா.முத்துக்குமார் இதற்கான தூண்டுதல் பற்றியும் கூறியிருக்கிறார்.
கவியரசு கண்ணதாசனின்
“கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ” என்ற வரிகளும்,
கவிப்பேரரசு வைரமுத்துவின்
“இதயமொரு கண்ணாடி
உனது பிம்பம் வீழ்ந்ததடி” என்ற வரிகளும்தான் தனது அந்த வரிகளுக்கான தூண்டுதல் என்றும் அதை ‘இந்த வரி ரொம்ப நாளா மனசுக்குள்ள ஓடிட்டே இருந்திச்சு, அங்க இருந்துதான் இத சுட்டன்’ என்றும் பகிரங்கமாகவே ஒரு மேடையில் சொல்லியிருந்தார் நா.மு!❤️
வைரமுத்து அண்மையில் எழுதிய ஒரு பாடலை நேற்றுக் கேட்டேன்.
“என்றாவது ஒரு நாள்” திரைப்படத்தின் ‘மாட்டு மணிச் சத்தம்’ என்ற பாடல் அது.
“ஈசன் தந்த மாடு ரெண்டும்
எங்க பிள்ளையாச்சு
ரேஷன் கார்டு எழுதும்போது
பேரு விட்டு போச்சு” என்ற வரிகளை வைரமுத்து எழுதியிருக்கிறார்.
இந்தப் பாடலில் நா.முவின் கற்பனை அப்படியே வருகிறது.
“பல்லேலக்கா” பாடலில்
“ஆடு, மாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில்
சேர்க்கச்சொல்லிக் கேட்கும்”😍
இந்த வரிகளைத்தான் மீண்டும் தந்திருக்கிறார் வைரமுத்து. ஆனால், நா.மு பகிரங்கமாக அசட்டுத்தனமாக ஒப்புக்கொண்டதைப் போல வைரமுத்து ஏற்றுக்கொள்வாரா என்பதற்கு அவரே பதிலளிக்க வேண்டும்.
நா.முத்துக்குமாரின் ஆளுமை எப்படியானது,
அவர் ஏன் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்,
அவர் ஏன் இன்னும் வாழ்ந்திருக்க வேண்டும் என்பவற்றைத்தான் இது காட்டுகிறது!
நா.முத்துக்குமார் அழிவில்லாக் கவிஞன்!
நான், பல்லாயிரம் தம்பிகளில் ஒருவன்.
சி கிரிஷாந்த்ராஜ்