Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இம்ரான் கான் கைதின் ஊழல் அரசியலும் | பதவிமோக படுகொலை கலாச்சாரமும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

இம்ரான் கான் கைதின் ஊழல் அரசியலும் | பதவிமோக படுகொலை கலாச்சாரமும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

7 minutes read

பாகிஸ்தான் 1947 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து பல அரசியல் படுகொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் தேசிய தலைவர்களின் சந்தேகத்திற்கிடமான மரணம் ஆகியவற்றை ஏராளமாக கண்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு பிரதமர்களின் பதவிக்காலம் முன்கூட்டியே எப்போதும் முடிகிறது என்பதும், அந்நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சாதனை போல், அதிகபட்சமாக பாகிஸ்தானின் ஒரு பிரதமர் நான்கு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்திருக்கிறார். குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் வரை பாகிஸ்தானின் பிரதமரின் ஆட்சி முடிவுக்கும் வந்துள்ளது.

இம்ரான் கான் கைது:

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது விவகாரம் திடீரென நடந்ததல்ல. கைதிற்கான பின்னணியில் நடவடிக்கை நடந்து கொண்டுதான் இருந்தது. பாகிஸ்தானில் ஊழலைத்தடுக்கும் பொறுப்பு உள்ள நிறுவனம் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB). அந்நிறுவனம் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு மனு அனுப்பியிருந்தது. அவரை நேரில் முன்னிலையாகுமாறும், சில கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறும் கேட்டிருந்தது. அதற்கு அவர் பதிலளிக்காததால் படிப்படியாக விஷயம் கைது வரை சென்றது.

இந்த விவகாரம் இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. அப்போது அவர் ஆன்மீகம் மற்றும் சூஃபித்துவத்தில் பணியாற்றுவதற்காகப் பாகிஸ்தானிலிருக்கும் பஞ்சாப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ அனுமதி அளித்தார்.

அந்தப் பல்கலைக்கழகத்தைக் கட்ட பஞ்சாப் அரசு நிலங்களை வாங்கியது. அந்த நிலத்தை வாங்குவதில் இம்ரான் கானும் அவரது மனைவியும் மோசடி செய்ததாகத் தேசிய பொறுப்புடைமை பணியகம் கூறுகிறது. சட்டவிரோதமாக நிலம் வாங்கப்பட்டதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன் இம்ரான் கான் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

நீதிமன்றம் இம்ரான் கானுக்கு நிறைய நிவாரணம் கொடுப்பதால் மக்கள் முன் இம்ரான் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது போல் தெரிகிறது. இராணுவத்தில் தனக்கு ஆதரவானவர்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் ஆதரவு தனக்குக் கிடைத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இம்ரான் கான் பாகிஸ்தானின் சாதாரண அரசியல்வாதிகளைப் போல் இல்லை. அவர் ஒரு அசாதாரண சக்தியைப் பெற்றுள்ளார், அதை அவர் நன்றாகப் பயன்படுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.

பங்குச் சந்தையில் தாக்கம் :

இம்ரானின் கைது பாகிஸ்தானின் பங்குச் சந்தை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டின் அரசியல்-பொருளாதார சூழ்நிலையால் பங்குச்சந்தை ஏற்கனவே அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்போது இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் அது மேலும் சரிந்துள்ளதாகவும் பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் கைது நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை அதிகரித்து, பங்குச் சந்தையில் மோசமான விளைவை ஏற்படுத்தும் எனப் பங்குச் சந்தை தரகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருட இறுதியில் வசிராபாத் நகரில் நடந்த பேரணியின் போது இம்ரான் கான் “கொலை முயற்சி”யில் இருந்து சுடப்பட்டும் தப்பினார்.
ஆனால், உயர்மட்ட பாகிஸ்தான் தலைவர் ஒருவர் குறிவைக்கப்படுவது முதல் முறையல்ல. அரசியல் படுகொலைகள் மற்றும் அதன் தேசியத் தலைமை மீதான தாக்குதல்கள் என்று வரும்போது பாகிஸ்தான்
75 ஆண்டுகளுக்கு முன்பு நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரு கொந்தளிப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது,

75 ஆண்டு நாடாளுமன்ற வரலாறு:

பாகிஸ்தானின் நாடாளுமன்ற வரலாற்றில், மொத்தம் 29 பிரதமர்கள் ஆட்சி புரிந்து உள்ளனர். இவர்கள் யாருமே 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக ஆட்சி செய்யவில்லை.
1947ம் ஆண்டு முதல் பிரதமராக லியாகத் அலி கான் பதவியேற்றார். சுமார் 4 ஆண்டுகள் பதவி வகித்த அவர் படுகொலை செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரை பிரதமர்களாக இருந்தவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகள், நேரடி ராணுவ புரட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக கட்டாய ராஜினாமாக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், பிரதமர்கள் மிக குறுகிய காலம் 2 வாரங்கள், மிக நீண்ட காலம் 4.2 ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர்.. நவாஸ் ஷெரீப் மட்டும் மூன்று முறை (1990, 1997, 2013) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கின்னஸ் சாதனையாக 1993ம் ஆண்டு மட்டுமே 365 நாட்களில் 5 பிரதமர்கள் மாறி மாறி பதவியேற்று உள்ளனர்.

முதல் பிரதமர் – லியாகத் அலி கான்:

லியாகத் அலி கான், ஆகஸ்ட் 1947 இல் பதவியேற்ற பாகிஸ்தானின் முதல் பிரதமர் ஆவார். அவர் அக்டோபர் 16, 1951 அன்று ஒரு அரசியல் பேரணியில் படுகொலை செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் நீடித்தது.
பாகிஸ்தானின் சுதந்திர இயக்கத்தின் முக்கிய அங்கமாகவும், அதன் முதல் பிரதமராகவும் பணியாற்றிய லியாகத் அலி கான், ராவல்பிண்டியில் நடந்த அரசியல் பேரணியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, கொலையாளி சைத் அக்பர், ஆப்கானிஸ்தான் நாட்டவர், அந்த இடத்திலேயே காவல்துறையால் கொல்லப்பட்டார், கொலைக்கான நோக்கம் இன்னமும் மர்மமாக மறைக்கப்பட்டுள்ளது.

அதன்பின் பிரதமராக கவாஜா நஜிமுதீன் அக்டோபர் 17, 1951 அன்று பதவியேற்றார். மதக் கலவரங்களை தவறாக நிர்வகித்த குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 17, 1953 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் ஓராண்டு ஆறு மாதங்கள் மட்டுமே.

பின்னர் முகமது அலி போக்ரா ஏப்ரல் 17, 1953 இல் பதவியேற்று, ஆகஸ்ட் 11, 1955 அன்று ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது.

சௌத்ரி முகமது அலி அடுத்த பிரதமராக ஆகஸ்ட் 1955 இல் பதவியேற்றார். உட்கட்சி பூசலால் செப்டம்பர் 12, 1956 இல் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் ஒரு வருடம் மற்றும் ஒரு மாதம் மட்டுமே.

இதன்பின் ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி செப்டம்பர் 12, 1956 அன்று பதவியேற்றார். நாட்டின் பிற அதிகார மையங்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார். அக்டோபர் 18, 1957 அன்று பதவி விலகிய அவரது பதவிக்காலம் ஒரு வருடம் மற்றும் ஒரு மாதம் ஆகும்.

மிக குறுகிய காலத்தில் இப்ராகிம் இஸ்மாயில் சுந்திரிகர் அக்டோபர் 1957 இல் பதவியேற்று, டிசம்பர் 16, 1957 அன்று ராஜினாமா செய்தார். அவர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்டார். அவரது பதவிக் காலம் இரண்டு மாதங்களுக்கும் குறைவாக இருந்தது.

டிசம்பர் 7, 1971 இல் நூருல் அமீன் பதவியேற்று, 1971 டிசம்பர் 20ம் தேதியன்று, பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்த சிறிது நேரத்திலேயே பதவியில் இருந்து விலகினார். அவரது பதவிக்காலம் இரண்டு வாரங்களுக்கும் குறைவாக இருந்தது.

அலி பூட்டோ பதவியில் :

சுல்பிகர் அலி பூட்டோ ஆகஸ்ட் 14, 1973 இல் பதவியேற்றார். அவர் ஜூலை 5, 1977 இல் இராணுவ புரட்சி மூலம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள்.

ஜெனரல் ஜியா உல் ஹக் ஆட்சி :

முன்னாள் ராணுவ தளபதி, ஜனாதிபதி ராணுவத் தளபதி ஜெனரல் முகமது ஜியா உல் ஹக், ராவல்பிண்டியில் ஜூலை 5, 1977 அன்று ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக நாடு தழுவிய ஒளிபரப்பில் அறிவித்தார்.

1977ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய ஜெனரல் ஜியா உல் ஹக், 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி மர்மமான முறையில் விமான விபத்தில் உயிரிழந்தார்.
பாகிஸ்தானின் அப்போதைய ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதியுடன் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவின் பாக்கிஸ்தானுக்கான தூதுவர் மரண விபத்தின் போது உடனிருந்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் குறித்த நீதித்துறை கமிஷன் அறிக்கை இன்றுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

முஹம்மது கான் ஜுனேஜோ மார்ச் 1985 இல் பதவியேற்ற அவர் மே 29, 1988 அன்று இராணுவத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் இரண்டு மாதங்கள்.

பர்வேஸ் முஷாரப் ஆட்சி:

பர்வேஸ் முஷாரஃப் 1999 இல் இரத்தமில்லாத இராணுவ சதி மூலம் அதிகாரத்திற்கு வந்தார். அவரே பாகிஸ்தானின் நீண்டகால ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். 2001 முதல் 2008 வரை அதன் அதிபராக பணியாற்றினார்.
அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்” ஆதரவளிப்பதாக அறிவித்த பிறகு, அவர் பல கொலை முயற்சிகளை எதிர்கொண்டார்.

டிசம்பர் 14, 2003 அன்று ராவல்பிண்டியில் ஒரு பாலத்தை வெடிகுண்டு தகர்த்தபோது, அவரது மோட்டார் அணிவகுப்பு அதைக் கடந்து சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். சில நாட்களுக்குப் பிறகு, அதே சாலையில் இரண்டு டிரக்குகளில் வந்த தற்கொலைப் படையினர் அவரது வாகனத் தொடரணியின் மீது மோதியதால், அவர் இரண்டாவது முயற்சியில் இருந்தும் உயிர் பிழைத்தார்.

ஜூலை 2, 2007 அன்று, அவர் பயணம் செய்த விமானம் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டபோது சுடப்பட்டது. அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 2014 இல் அவர் கடந்த சில நிமிடங்களில் முன்னாள் தலைவரின் வாகனத் தொடரணியின் பாதை வெடிகுண்டால் குறிவைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ஷௌகத் அஜீஸ்:

ஜூலை 2004 இல், நாட்டின் அப்போதைய நிதியமைச்சராகவும், முஷாரப் தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமர் வேட்பாளராகவும் இருந்த ஷௌகத் அஜீஸ் மீதும் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அஜீஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து 2004 முதல் 2007 வரை பிரதமராக பதவி வகித்தார். அல் கொய்தா கூறிய தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர்.

பெனாசிர் பூட்டோ மீதான தாக்குதல்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் மகள் பெனாசிர் பூட்டோ இரண்டு தாக்குதல்களை எதிர்கொண்டார்.
பெனாசிர் பூட்டோ, கொல்லப்பட்ட பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் மகள், முஸ்லீம் நாட்டின் முதல் பெண் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் டிசம்பர் 2, 1988 இல் பதவியேற்று ஊழல் குற்றச்சாட்டின் பேரில், அவரது அரசாங்கம் ஆகஸ்ட் 6, 1990 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டது. அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகள் மற்றும் சில நாட்கள் வரை நீடித்தது.

இரண்டு முறை பிரதமராக இருந்த அவர், எட்டு ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டு பாகிஸ்தானுக்கு வந்த பிறகு, அக்டோபர் 18, 2007 அன்று கராச்சியில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறிவைக்கப்பட்டார்.

140க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற தாக்குதலில் பூட்டோ காயமின்றி இருந்தார்.
ஆனால் அவர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 27, 2007 அன்று ராவல்பிண்டியில் ஒரு அரசியல் பேரணியில் திட்டமிட்டு கொல்லப்பட்டார். லியாகத் கான் கொல்லப்பட்ட அதே இடத்தில் துப்பாக்கி மற்றும் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இரண்டு தாக்குதல்களுக்கும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றது.

பதவியில் நவாஸ் ஷெரீப் :

1997 பிப்ரவரி 17ம் திகதி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார். பாகிஸ்தான் வரலாற்றில் 3வது முறையாக 1999 அக். 12ல் ராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் நீடித்தது. ஜூன் 5, 2013 அன்று ஷெரீப் மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 28, 2017 அன்று சொத்து தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மட்டுமே நீடித்தது.

ஜஃபருல்லா கான் ஜமாலி நவம்பர் 2002 இல் இராணுவ ஆட்சியின் போது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 26, 2004 இல் இராணுவத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக அவர் ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் ஒரு வருடம் ஏழு மாதங்கள்.

இதே போல் யூசப் ரசா கிலானி மார்ச் 25, 2008 அன்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “நீதிமன்ற அவமதிப்பு” குற்றச்சாட்டின் பேரில் 2012 இல் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம்.

சுதந்திரம் போராடிப் பெற வேண்டுதல்:

இம்ரான் கான் ஆகஸ்ட் 18, 2018 அன்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 10, 2022 அன்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியில் இருந்து வெளியேறினார். அவரது பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஏழு மாதங்கள் மட்டுமே நீடித்தது.

இம்ரான் கான் கடந்த வாரம் ஊழல் வழக்கு தொடர்பாக ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அவர் இரண்டுவார கால பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தற்கு எதிராக நாட்டில் பெரும் பதற்றமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், இம்ரான் கான், யூடியூப் வாயிலாக தனது ஆதரவாளர்களுக்காக காணொளி ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். அதில், “சுதந்திரம் எளிதாகக் கிடைத்துவிடாது. அதை நாம் தான் போராடிப் பெற வேண்டும். சுதந்திரத்தைப் பெறுவதற்கு நீங்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அனைவரும் உங்களின் சொந்த ஊர்களின் தெருக்களின் முனையில் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று அவர் அந்த காணொளியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More