September 27, 2023 2:03 pm

லெனின்.எம்.சிவம் | சினிமா இயக்குனர் | A Gun and A Ringலெனின்.எம்.சிவம் | சினிமா இயக்குனர் | A Gun and A Ring

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

பல விருதுகளைப் பெற்ற ஈழத்தமிழர் லெனின்.எம்.சிவம் இயக்கிய எ கன் அண்ட் எ ரிங் திரைப்படம் லண்டனில் திரையிடப்பட உள்ளது. இதனையொட்டி இலங்கைக் கலைஞன் இணையத்தில் வெளியான இவ் நேர்காணல் இங்கு இடம்பெறுகின்றது. 

 

சீனாவின் ஷாங்காய் நகரில் வருடம் தோறும் திரைப்பட விழா நடந்துவருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரைப்படவிழாவாக இது கருதப்படுகிறது. 16 வது ஷாங்காய் திரைப்படவிழா இவ்வருடம் சிறப்பாக நடந்தேறியது. உலகின் 112 நாடுகளில் இருந்து, 1600 வரையான படங்கள் போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் இருந்து வெறும் 12 படங்களை மட்டுமே, இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்வார்கள். இந்த வருடமும் அப்படி 12 படங்கள் தெரிவு செய்யப்பட்டு, விழா நடக்கும் போது, திரையிட தயாராக இருந்தன.

1556254_560342607386598_1457700324_o

அந்த 12 படங்களும் எவை எவை என அறியும் ஆவல் உலக திரைப்பட ரசிகர்களுக்கு எழுந்தது. அப்போதுதான் அந்த தேனான செய்தி, உலக தமிழர்களின் காதில் ஒலித்தது. அந்த 12 படங்களில் ஒரு தமிழ் படமும் தேர்வாகியிருந்தது. “ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும்” என்பது படத்தின் பெயர். – A Gun and A Ring. யார் இந்தப் படத்தை எடுத்தார்கள்? யார் இதில் நடித்தார்கள்? இப்படி ஒரு படம் பற்றி நாம் கேள்விப்பட்டதே இல்லையே? என்று அனைவரும் ஆச்சரியப்பட, கனடாவில் வாழும் ஓர் ஈழத்தமிழர்தான் இப்படத்தை எடுத்தார் என்று செய்தி வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஆம் கனடாவில் வாழும் ஈழத்தமிழரான லெனின்.எம்.சிவம் அவர்கள் இரண்டாவதாக இயக்கிய முழு நீள திரைப்படம் தான் A Gun and A Ring. அவரின் முதலாவது முழு நீள திரைப்படம் 1999. இப்படம் 2009 ல் வெளியானது. விருதுகள் பல வென்றது. A Gun and A Ring – படத்துக்கும் ஏராளமான பெருமைகள் உண்டு. ஷாங்காய் திரைப்பட விழா, ஹமில்டன் திரைப்பட விழா ஆகிய விழாக்களில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியிருந்தது. அத்துடன் சினிறொக் கொம் பன்னாட்டு திரைப்பட விழாவில், சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் ( 2 விருதுகள் ) என மொத்தம் 4 விருதுகளை வென்றது. மேலும் மொன்றியல் உலக திரைப்படவிழா, லூவில் திரைப்பட விழா, ஹமில்டன் திரைப்பட விழா போன்றவற்றில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படியான பல பெருமை மிக்க இத்திரைப்படம் முதலில் கனடாவின் டொரண்டோ நகரிலும், பின்னர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் திரையிடப்பட்டது. இப்போது பாரிஸ் நகரில் வரும் ஜனவரிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் திரு.லெனின்.எம்.சிவம் அவர்களை, தொடர்புகொண்டு சில கேள்விகள் தொடுத்தோம். இவ்வளவு சாதனைகளையும் செய்துவிட்டு, அமைதியாக எம்மிடம் பேசினார் லெனின்.

1798536_576109769143215_1260250791_n

கேள்வி சினிமாவில் எப்படி ஈடுபாடு வந்தது?

பதில் – எனது தந்தை ஒரு நடிகர். அந்நாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட “மீனவப் பெண்” படத்தில் எனது தந்தையார் வி.எம்.எல். ஜெயகாந்த் கதாநாயகனாக நடித்தார். அவரிடமிருந்தே சினிமா மீதான ஈர்ப்பு எனக்கு வந்தது.

 

கேள்வி சினிமா தொடர்பாக படித்தீர்கள் என்று கேள்விப்பட்டோம்! எங்கு படித்தீர்கள்?

பதில் – டொரண்டோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், சினிமா துறையில் படித்தேன். அத்துடன் கணினி பொறியியலும் படித்துள்ளேன். பின்னர் எனது வேலை நேரம் தவிர்த்து, பகுதி நேரமாக சினிமாவில் ஈடுபடலாம் என்ற எண்ணம் பிறந்தது. அதனால் 2005 ம் ஆண்டில், “இனியவர்கள்”எனும் குறும்படத்தினை இயக்கினேன். இது “கனேடிய தமிழ் திரைப்பட விழாவில்”சிறந்த படமாக தேர்வானது. பின்னர் உறுதி, பக்கத்துவீடு போன்ற குறும்படங்களை எடுத்துவிட்டு, 1999 எனும் முழு நீள திரைப்படம் எடுத்தேன். இப்போது A Gun and A Ring எனும் படத்தை எடுத்திருக்கிறேன்.

 

கேள்வி நீங்கள் இயக்கிய இரண்டு முழு நீள திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

பதில் – மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் இந்நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படங்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமா துறையில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை இது உண்டாக்கியுள்ளது.

 

கேள்வி டொரொண்டோ, சிட்னி ஆகிய நகரில் எப்படியான வரவேற்பு கிடைத்தது?

பதில் – எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. டொரொண்டோவில் ஒரு தியேட்டரில் வெளியிடுவதாக இருந்தோம். பின்னர் ரசிகர்களில் அதிகரித்தவரவினால், 4 தியேட்டர்களில் படத்தை வெளியிடும் சூழல் ஏற்பட்டது. இது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும். எமது மக்கள் எந்தளவுக்கு எம்மவர்களின் படைப்புக்களை விரும்புகிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. அதேபோல சிட்னி நகரிலும் பெரும் வரவேற்பு கிடைத்ததாக அறிந்தேன். அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிகள்.

1900073_575635822523943_282928702_n

கேள்வி பாரிஸ் நகரில் இப்படம் திரையிடுவது பற்றி…..!

பதில் – ஃபிரான்ஸில் உள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் இப்படத்தை பாரிஸ் நகரில் வரும் ஜனவரி மாதம் வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். பாரிசில் வசிக்கும் திரு.பாஸ்கர் அவர்கள் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக பிரான்ஸில் இருந்து ஏராளமான நண்பர்கள் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தெரிவித்திருந்தார்கள். எனவே பிரான்ஸிலும் இப்படம் வெற்றிகரமாக ஓடும் என்று எதிர்பார்க்கிறேன்.

 

கேள்வி பிரான்சில் இருந்து பாஸ்கர், ஜெர்மனியில் இருந்து தேனுகா என்று நடிகர்களை கனடாவுக்கு வெளியே தெரிவு செய்தது ஏன்?

பதில் – புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் திரைப்படதுறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் கனடா படம், ஜெர்மன் படம், பிரான்ஸ் படம் என்று நமது தளத்தை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எமது சினிமா துறை “புலம்பெயர் சினிமா துறையாக” மிளிர வேண்டும். அதனால் தான் நாடுகள் தாண்டி நடிகர்களை தேர்வு செய்தோம்.

969220_532717210149138_1931140271_n

கேள்வி புலம்பெயர் திரைப்பட துறையை வளர்ப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு என்ன?

பதில் – நிச்சயமாக நல்ல பங்களிப்பு கிடைக்கிறது. பல ஊடகங்கள் எமது சினிமா குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஊடங்களின் பங்களிப்பு இல்லாமல் எம்மால் சாதிக்க முடியாது. என்றைக்குமே ஊடகங்கள் எம்மை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

 

நன்றி | இலங்கை கலைஞன் இணையம் | 08/12/2014

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்