Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் இனக்குழுமத்தின் தொன்மையை நிரூபிக்க தமிழர்களிடத்தே எந்தவொரு திட்டமும் இல்லை: பிரசாத் சொக்கலிங்கம்

இனக்குழுமத்தின் தொன்மையை நிரூபிக்க தமிழர்களிடத்தே எந்தவொரு திட்டமும் இல்லை: பிரசாத் சொக்கலிங்கம்

7 minutes read

”ஊரோடிகள்” அமைப்பின் தலைமைச் செயற்பாட்டாளரும், “கா” கலை இலக்கிய வட்டத்தின் பொதுச் செயலாளருமான  ஆரையம்பதியைச் சேர்ந்த எழுத்தாளர்,  பிரசாத் சொக்கலிங்கம் உடனான நேர்காணல். (தினக்குரல் – யாழ் பதிப்பு, 30.05.2020 மற்றும் தினக்குரல் – ஞாயிறு வெளியீடு, 31.05.2020 )

கிழக்கு மாகாண சபையில் தகவல் தொழில்நுட்பவியலாளரான கடமை புரியும் இவர், கிழக்கில் காணப்படும் பல தொல்பொருள் இடங்களுக்கு சென்று அவற்றை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவதுடன், பல்வேறுபட்ட சமூகத் தளங்களில் பயணித்து, தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்துவதில் தீவிர ஆர்வமுடையவர்.

தொல்லியல் சார் இடங்களை பாதுகாக்க ஆர்வம் கொள்வது உண்மையானால், காலாகாலமாக பேரினவாத சிந்தனையாளர்களால்  செயற்படுத்தப்படும் ஓர் அரசியல் வேலைத்திட்டமாகவே கருதமுடியும். தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு பின்பற்றப்படும் தந்திரோபாயமே” என, “கா” கலை இலக்கிய வட்டத்தின் பொதுச் செயலாளரும் ஊரோடிகள்அமைப்பின் தலைமைச் செயற்பாட்டாளருமான எழுத்தாளர் பிரசாத் சொக்கலிங்கம் , இவ்வாறு கூறினார்.

அந்தச் செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கேள்வி : “ஊரோடிகள்” அமைப்பின் தலைமைச் செயற்பாட்டாளராக எவ்வாறு அறியப்பட்டீர்கள் ?

பதில் : நமது வரலாற்றை அறியும் மற்றும் தேடும் ஆர்வம் காரணமாக அது சார்ந்து நூல்களை மட்டும் வாசிப்பது முழுமையைத்தராது என்பதால், வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று அவற்றை அறிவதில் எனக்கு ஈடுபாடு உண்டு. அறிவதும், ஆவணப்படுத்துவதும்  எமது ஆர்வத்தின் வெளிப்பாடு.

உண்மையில் வரலாறு என்பது வெறுமனே எழுத்தாதாரங்களுடன் மட்டுப்படுத்தப்படுவதல்ல. வரலாறு பற்றிய நவீன ஆய்வுகள் மக்கள் வாழ்வியலையும் பண்பாட்டையும் தொன்மை வரைவியல்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாயுள்ளவை. பழமரபுக்கதைகள், நம்பிக்கைள், பாடல்கள், பழமொழிகள் என்பனவற்றின் கூட்டாக வரலாறு பார்க்கப்படுகிறது. இவற்றை தேடியே எமது அதிகமான பயணங்கள் அமைகின்றன. இதனால் எங்களை ”ஊரோடிகள் என்று அழைப்பார்கள்.

கேள்வி : கிழக்கில் தொல்லியல் இடங்களை தேடி ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் நீங்கள் தொல்லியல் சார் இடங்கள் என்று எவ்வாறு, எவற்றை வரையறுக்கின்றீர்கள் ?

பதில் : தொல்லியல் என்பது மனிதப்பண்பாடு பற்றிய படிப்பு எனக் கொள்ளப்படுகின்றது. இது கட்டிடங்கள், மனித மிச்சங்கள், தொல்பொருட்கள், தொல்லுயிர் எச்சம், என்ணிமப்பொருட்கள் மற்றும் நிலத்தோற்றங்கள் போன்றவற்றினை ஆவணப்படுத்துவதும் ஆய்வு செய்வதுமாகும். எங்கெல்லாம் மேற்குறித்த எச்சங்கள் இருக்கின்றதோ அதுவெல்லாம் தொல்லியல் சார் இடங்கள் எனக்கருதலாம்.

கேள்வி : தொல்லியல் எதற்குப் பயன்படுகிறது, தொல்லியல் சார் இடங்கள் கண்டுபிடிப்பதுடன் முடிந்து போய்விடுகிறதா ?பதில் :- முற்காலங்களில் வாழ்ந்து மறைந்த மனிதர்களின் வாழ்கை சான்றுகளின் வழியாக அறிந்து கொள்வதுதான் தொல்லியலின் முக்கிய பயன்பாடு. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மனிதர்கள் வேட்டையாடும் சமூகமாக,  அலைந்து திரிந்த காலம் இருந்தது பின்பு, நதிக்கரைகளை அண்டி வாழப்பழகி, சிறிய குழுக்களாக வாழ்ந்து சிற்றரசு, பேரரசு என கட்டமைக்கப்பட்டு வாழ்ந்த சுவடுகளை கண்டெடுத்து  வரலாற்றை முழுமையடைச் செய்வது என தொல்லியல் நடவடிக்கைகள் விரியும். இடங்களை அடையாளப்படுத்துவதும் அவணப்படுத்துவதும்  முதற்கட்டமே.

கேள்வி : கிழக்கிலங்கையில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது தானே ?

பதில் : தொல்லியல் இடங்களை வரையறுக்க முடியாது. ஆங்காங்கு காணப்படும் தொல்பொருள் சின்னங்கள் எப்போதெல்லாம் கண்டு பிடிக்கப்படுகின்தோ அப்போதுதான் அவற்றை அடையாளப்படுத்தி வரையறுக்க முடியும். இது கிழக்கிலங்கைக்கு மட்டுமல்ல நாடு முழுவதிற்கும் பொருந்தும். கிழக்கில் ஏற்கனவே தொல்பொருட்கள் காணப்படும் நூற்றுக்கு மேற்பட்ட இடங்கள் காணப்படுகின்றன. கிழக்கில் காணப்படும் தொல்பொருட்களை அடையாளப்படுத்துவதும் பாதுகாப்பதும் காலத்தின் தேவை.

கேள்வி  : உண்மையான தொல்லியல் ஆதாரங்கள் திரிபுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறதே ?

பதில் : தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தி பாதுகாப்பது திரிபுபடுத்தல் எனக் கொள்ள முடியாது. தொல்லியலை பாதுகாப்பது வேறு, அதனை ஆய்வுக்குட்படுத்தி முடிவுகளை தீர்மானிப்பது வேறு. முடிவுகளைத் தீர்மானிப்பதில்  திரிபுபடுத்தல் அல்லது தனிப்பட்ட கருத்தியல்  போன்றவை தாக்கம் செலுத்த வாய்ப்பிருக்கின்றது

கேள்வி : தொல்லியல் துறை அடிப்படை சட்டங்கள் எவை ?

பதில் : 1940 இன் 09 ஆம் இலக்க தொல்பொருள் சட்டம். 1998 இன் 24 ஆம் இலக்கமுடைய தொல்பொருள் (திருத்தச்) சட்டம். 2005 இன் 12 ஆம் இலக்கமுடைய அபராதத்தொகையை அதிகரிப்பதற்கான (திருத்தச்) சட்டம். 1979 இன் 07 ஆம் இலக்கமுடைய அரச உடைமையை மீளப்பெறுவதற்கான சட்டம் என தொல்பொருள் சட்டங்கள் இருக்கின்றன. தொல்பொருள் இடங்களை பாதுகாத்தல், பராமரித்தல், சுவீகரித்தல், சேதப்படுத்தலை தடுத்தல், ஆய்வுக்குட்படுத்தல் என இச்சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இலங்கை தொல்பொருளியல் திணைக்களமே.

கேள்வி தமிழ் மக்களின் இருப்பிடங்களில் தொல்லியல் எனும் போர்வையில் காணிகளை கையகப்படுத்துவதென்பது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?

பதில் : உண்மையில் தொல்லியல் சின்னங்கள் காலத்தால் முந்தியவை. இன்றைய இன முரண் சிந்தனைகளுடன் இவற்றை இணைத்துப் பார்ப்பதே தவறு என நினைக்கின்றேன். தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்காக காணிகள் சுவீகரிக்கப்படுவது சட்டரீதியானது. ஏற்கனவே நாம் இங்கு பேசிய சட்டங்களில் அதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றன. இச்சட்டங்கள் இன ரீதியிலான கசப்புகளை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகின்றன என்றால், அதை சரி செய்வதற்குரிய பொறிமுறையை பாதிக்கப்படுபவர்கள் முன் வைக்க வேண்டும். அல்லது சட்டங்களை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.  எல்லாவற்றிக்கும் மேலாக  மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது,  தொல்லியலில் இன, மத, சாதி கடந்த தன்மை புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த புரிதல் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கள, முஸ்லீம் பறங்கியர் என்ற எல்லா இனக் குழுமங்களுக்கும் கொண்டுவரப்பட வேண்டும்.

கேள்வி : கிழக்கிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கூற முடியுமா ?

பதில் ஞாபகத்தில் உள்ளதை கூறுகின்றேன்.

மட்டக்களப்பில்…

இலாவணை, பிளாக்குழி, கல்லடிச்சேனை, பாலமடு, வந்தாறுமூலை, மாவடிவேம்பு, ஆலங்குளம், வண்ணாத்திப்பாலம், காயங்கேணி, புல்லாவி, மதுரங்கேணி, குஞ்சன்கல் குளம், தீப்பந்தகல், கிரிமிச்சை, பாலையடி ஓடை, ஒடியாமடு, குரிவிக்கல், கட்டுமுறிவு, கதிரவெளி, கல்லரிப்பு, ஈரளக்குழம், படிவெட்டினமலை, குடும்பிமலை, குசலான்மலை, நாவற்குடா, ஆரையம்பதி (கோவில்குளம்), களுவாஞ்சிக்குடி, தாந்தாமலை, மகிழடித்தீவு, வெல்லாவெளி, தும்பங்கேணி, களுமுந்தன்வெளி,  நெடியமடு போன்ற இடங்களையும்
அம்பாறையில்…
சங்கமன்கண்டி, கஞ்சிகுடிச்சாறு, காரைதீவு போன்ற இடங்களையும்
திருகோணமலையில்…
தம்பலகாமம், கந்தளாய், சேருவில, திருமங்கலாய், வட்டவான்பாறை, நீலாப்பளை
என நுாற்றுக்கணக்கான இடங்கள் காணப்படுகின்றன.

கேள்வி : மேற்படி தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இற்றைவரைக்கும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்தன ?

பதில் : இதுவரையில் கிழக்கில் தொல்லியல் இடங்களை பாதுகாப்பதற்கென பெரிய அளவிலான செயற்திட்டங்களை அவதானிக்க முடியவில்லை. பல இடங்கள் கோயில்களை மையப்படுத்தியதால் அதன் நிருவாக கட்டமைப்புகள் அவற்றை பாதுகாக்கின்றன. பல கவனிப்பார் அற்றுக்கிடக்கின்றன. இருப்பினும் தொல்லியல் எச்சங்களை இன, மத ரீதியில் அனுகி அவைகளை தங்கள் ஆளுகைக்குள்  கொண்டுவர முயலும் போக்கு ஆங்காங்கே காணப்படுகின்றது. இது மிகவும் வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

கேள்வி : கிழக்கிலுள்ள தொல்லியல் சார் இடங்களை அரசுடன் இணைந்த பௌத்த அமைப்புகள் பாதுகாக்க ஆர்வம் கொள்வதிலுள்ள பினணி ?

பதில் : தொல்லியல் சார் இடங்களை பாதுகாக்க ஆர்வம் கொள்வது உண்மையானால், காலாகாலமாக பேரினவாத சிந்தனையாளர்களால்  செயற்படுத்தப்படும் ஓர் அரசியல் வேலைத்திட்டமாகவே கருதமுடியும். தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு பின்பற்றப்படும் தந்திரோபாயமே. அதேநேரம்  தமிழ்பெளத்தம் பற்றிய வரலாற்று உண்மைகளை நாம் மறுதலிக்கவும் முடியாது.

கேள்வி : கிழக்கிலங்கை தமிழ் ஆய்வாளர்கள் தொல்லியல் சார் இடங்களை பாதுகாக்க ஆர்வம் கொள்வதில்லையே ?

பதில் : ஆம் என்றே கூற வேண்டும். தொல்பொருட்களை அடிப்படையாக கொண்டு ஆய்வுரைகள் எழுதி பட்டங்களை பின்னால் போட்டுக்கொள்வதில் இருக்கும் ஆர்வம், அவற்றை பாதுகாப்பதில் இருப்பதில்லை. தனது இனக்குழுமத்தின் தொன்மையை நிரூபிக்க வரலாற்று தொல்பொருட்களை பாதுகாப்பதற்கும், அவை உருமாற்றம்பெறாமல் காப்பதற்கும் தமிழர்களிடத்தே  எந்தவொரு திட்டமும்  இல்லை என்பது கசப்பான உண்மையே. பலருக்கு இதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவின்மை ஒரு முக்கிய காரணம். ஆய்வாளர்கள், புலமைத்துவ சிந்தனையாளர்கள் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் என எல்லா சமூக தரப்பினரும் உள்ளடங்கிய நிறுவனமயப்படுத்திய ஓர் பாதுகாப்பு பொறிமுறையின் அவசியம் பற்றி சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கிழக்கிலங்கையில் முக்கியத்தும்  வாய்ந்த தொல்லியல் இடங்களை மையப்படுத்தி சுற்றுலா மையங்களை உருவாக்கி சுற்றுலா பயணிகளை  ஈர்ப்பது கூட பல நன்மைகளை தரவல்லது.           

கேள்வி :  தொல்லியல் எனும் போர்வையில் தமிழர்களின் வாழ்விட அடையாளங்கள் கடந்த காலங்களில் அழிக்கப்பட்டுள்ளதே ?

பதில் : அப்படியானதொரு நிலைமை காணப்பட்டால் அது ஆரோக்கியமானது அல்ல. உண்மையில் தமிழர்களின் வாழ்விடங்கள் கையகப்படுத்தப்படுவது சம்பந்தமாக அண்மையில் பல அறிக்கைகளைப் பார்க்கக்கிடைக்கின்றது. அந்த அறிக்கைகள் எதுவும் கடந்த காலங்களில்  கையகப்படுத்தப்பட்டது சம்பந்தமான சரியான மற்றும் தெளிவான தரவுகள் பற்றி பேசவில்லை. மேலோட்டமான ஆவேச அறிக்கைகளாகவே இருக்கின்றது.
கையகப்படுத்தப்பட்டவற்றை அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் ஆர்வலர்கள் சரியான தரவுகளுடன் அரசின் கவனத்திற்கு கொண்டுவருவது மட்டுமே காத்திரமான நடவடிக்கையாக இருக்கும். அதை விடுத்து அறிக்கை எதுவித பயனும்தராது.

கேள்வி : தமிழர்களின் புராதன கலாசார சின்னங்கள் பாதுகாக்கப்பட்டால் மாத்திரமே தமிழர்கள் இலங்கை மண்ணில் ஒரு தேசிய இனமாக தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா ?

பதில் : இவ் விடயம் அனைத்து இன மக்களுக்கும் பொருந்தும். இருப்பினும் பாதிக்கப்படும் இனம் என்ற அடிப்படையில் பார்த்தல் முற்றிலும் உண்மையான கூற்று. தமிழர்களிடத்தில் வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்கும் போக்கு குறைவாகவே காணப்பட்டிருக்கின்றது. அப்படியே ஆவணப்படுத்தி வைத்திருந்தாலும், அவை மிகைப்படுத்திய தொன்மங்களைக் கொண்டவையாகவும், கட்டுக்கதைகளை அதிகளவில் கொண்டவையாக இருப்பதும் துரதிஸ்டவசமானது. இந்த அடிப்படையில் தமிழ்சமூகம் தமது சமூகத்தை ஆவணப்படுத்துவதும் அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் மிக முக்கியமான பணி. இதில் தொல்லியல் சின்னங்கள் மட்டுல்ல. தமிழர்களின் இலக்கியங்கள், பண்பாடு. கலாசாரம், பழக்கவழக்கம், நாகரீகம், வாழ்வியல், கலைகள், தொழிற்கலைகள், கர்ண பரம்பரைக்கதைகள் என பல பல்வேறு தளங்களில் மேற்கொள்ள வேண்டும். உண்மையில் இந்த ஆவணப்படுத்தல் கிராமம் கிராமமாக இடம்பெற வேண்டும்தனி ஒரு சிறு கிராமத்தினை ஆவணப்படுத்தும் போது அவற்றை நுண் ஆவணப்படுத்தல் என சொல்லலாம்.  இவ் நுண் ஆவணப்படுத்தல்  எத்தனைக்கெத்தனை திருத்தமாகப் பெறப்படுகின்றதோ, அத்தனைக்கத்தை ஆவணங்களும் வரலாறும் திருத்தமாக அமையும். இந்த விடயத்தில் ஒவ்வொரு ஊரின், அந்தந்த மக்களின் வரலாறுமே மிக முக்கியமான ஆவணங்களாக அமைந்து விடுகின்றன. தமிழர்களின் இருப்பும் இதனூடாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்பும் அதிகமாகும்.

நன்றி – தினக்குரல் (யாழ் பதிப்பு) 30.05.2020 மற்றும் தினக்குரல் ஞாயிறு வெளியீடு 31.05.2020

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More