June 2, 2023 2:02 pm

மகிந்த ராஜபக்சவின் தனிமை | Photo Journalism | அ. நிக்சன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் நாடாளுமன்ற சபா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம் இது.

ஜோசப் மைக்கல் பெரராவுக்கு இறுதி வணக்கம் செலுத்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் எவரும் வரவில்லையா அல்லது மகிந்த ராஜபக்சவுக்கு அருகில் இருக்கக்கூடாது என்று நினைத்து விலகிச் சென்றனரா?

டெயிலி மிரர் (dailymirror.lk) ஆங்கில செய்தி இணையம், மகிந்த தனியாக இருக்கும் படத்துடன் ஏனைய சில படங்களையும் பிரசுரித்து பட விளக்கத்தைப் பின்வருமாறு எழுதியுள்ளது.

“ ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர்கள் கரு ஜயசூரிய, சமல் ராஜபக்ச ஆகியோர் பாராளுமன்ற வளாகத்திற்கு முன்னாள் சபாநாயகரின் பூதவுடல் தாங்கிய கலசத்துடன் செல்வதை காணலாம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் மகிந்த தனியாக இருக்கும் படத்துக்கு விளக்கம் எதுவும் எழுதப்படவில்லை.

இது மிகச் சிறந்த செய்தியிடல் (Photo Journalism) செய்தியை அல்லது செய்திப் படத்துக்குரிய (News Photo) விளக்கத்தை எழுதுவது மாத்திரமல்ல, சில படங்களைப் பிரசுரித்து விளக்கம் எழுதாமல் தவிர்ப்பதன் ஊடாகவும் பல அர்த்தங்களைக் கொடுக்க முடியும்.

அதுவும் சமகால அரசியல்- பொருளாதாரச் சூழலில்.

இவ்வாறான படங்களுடன் கூடிய செய்திகளே Photo Journalism என்ப்படும். காட்சி ஊடகத்திலும் (Video Journalism) இவ்வாறான செய்தியிடல் முறைகள் உண்டு.

அச்சு மற்றும் இணையச் செய்தி ஊடகங்களில் Photo Journalism என்பதை முறையாகப் பயன்படுத்தலாம்.

Video Journalism என்பதை தொலைக்காட்சி மற்றும் செய்தி இணையங்கள், யூரியுப் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒழுங்கு முறையாகப் பயன்படுத்தலாம்.

Photo Journalist – Video Journalist என்ற தொழில் தகுதியுடன் (Professional) ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இத் தொழில்முறை சார்ந்து சில பிரதான ஊடக நிறுவனங்கள் அவற்றைத் தவிர்க்கின்றன. வேறு சில ஊடக நிறுவனங்களுக்கு இவை புரிவதேயில்லை.

திருமண வைபவங்கள் மற்றும் வேறு வைபங்களுக்கு எடுக்கப்படும் படங்கள் – வீடியோக்கள் போன்று செய்திகளுக்கு அல்லது செய்தி விமர்சனங்கள் – கட்டுரைகளுக்காக எடுக்க முடியாது.

அதற்குரிய நுட்பங்கள் (Techniques) வேறு. அத்துடன் சமகால அரசியல் – பொருளாதார அறிவும் பிரதானம்.

அதற்கான உதாரணம்தான் மகிந்த ராஜபக்ச தனியாக இருக்கும் படம். இப்படி வேறு சில படங்கள் – வீடியோக்களும் உதாரணமாக உண்டு.

Photo Journalism, Video Journalism என்பது பற்றி என்னிடம் கற்கும் மாணவர்களுக்கு மேலதிக விளக்கங்கள் உண்டு.

மூத்த படப்பிடிப்பாளர் அண்ணன் ஜோய் ஜெயக்குமாரின் பெயரின் முன்னால் Photo Journalist என்று 2001 இல் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மலரில் குறிப்பிட்டதால் ஊடக நிர்வாக இயக்குநர் ஒருவருக்கு அது பற்றி விளக்கமளிக்க வேண்டிய சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டதையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

அ.நிக்ஸன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்