“உணவே மருந்து” எனக் கொண்ட நமது மூதாதையர் மிளகை பெருமளவில் தமது உணவில் சேர்த்து உட்கொண்டிருக்கின்றனர். இந்த மிளகு என்பது கறி, மிரியல் என்ற பெயர்களிலும் சங்க இலக்கியப் பாடல்களில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த மிளகு எம்மை எவ்வாறு எல்லாம் அன்றைய நாளில் ஆட்கொண்டிருக்கின்றது என்பதனை இங்கு உற்று நோக்
கலாம்.
பெரும்பாணாற்றுப்படையில் மிளகு
“சிறுசுளை பெரும்பழம் கடுப்ப மிரியல்” என வரும் பாடலில், உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் பலாப்பழம் அளவாக சிறு சிறு பொதிகளாகக் கட்டப்பட்ட மிளகு மூட்டைகளை கழுதைகளில் மேல் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் தம் வில் வீரர்களோடு சென்றதையும் ஆங்காங்கு வழியில் இருந்த சுங்கச்சாவடிகளில் அரசனுடைய அலுவலர்கள் அவர்களிடம் இருந்து சுங்கம் வாங்கினார்கள் என்பதையும் பெரும்பாணாற்றுப்படையில் எடுத்துரைக்கின்றார்.
அகநானூறு 149
யவனர் கப்பல்
“யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என எருக்காட்டூர் தாயங்கண்ணனார் பாடுகின்றார். அதாவது சுள்ளியாறு என்று வழங்கப்பட்ட பேரியாறு சேர நாட்டில் ஓடுகின்றது. அதில் நுரை கலங்கும் படி யவனர் (கிரேக்கர்) நல்ல மரக்கலங்களை ஓட்டினர். அதில் பொன்னைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சேரநாட்டில் விளைந்த மிளகை வாங்கிச் சென்றனர். முசிறித் துறைமுகம் இதற்குப் பயன்பட்டது. சேரர்களுக்குரிய இந்த முசிறித் துறை முகத்தைப் பாண்டிய அரசன் செழியன் வளைத்துக் கொண்டான் எனப் பாடுகின்றார். இதில் நாம் ஒன்றை உற்று நோக்க வேண்டும். சேர நாடு என்று கூறப்படுவது 500 வருடங்களுக்கு முன் தோன்றிய மலையாள மொழி பேசும் கேரள நாடு ஆகும். 2000 வருடங்களுக்கு முன்னர் சேர நாட்டில் மிகுந்து விளைந்த மிளகுப் பயிர் என்றும் சேர நாட்டில் அதாவது கேரள நாட்டில் மலை சார்ந்த பகுதிகளில் மிகுதியாக வளர்கின்றது. இந்த கேரள நாட்டின் மிளகிற்கு என்று ஒரு தனிச் சிறப்பு இன்றும் உண்டு.
பட்டினப்பாலையில் மிளகு
“காலில் வந்த கருங்கறி மூடை” என பட்டினப்பாலையில் 186 ஆவது அடியில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகின்றார். அதாவது மரக்கலன்கள் வழியே வந்து இறக்குமதியானவை எவை என்ற பட்டியல் இந்த பாடலில் தரப்படுகின்றது. மரக்கலன்களில் விலை மதிப்பு மிக்க குதிரைகள் வந்தன. நிலத்தின் வழியாக கொண்டுவரப்பட்ட கரிய நிறமுடைய மிளகு மூட்டைகளும் வந்தன. வடமலையிலிருந்து மணியும், பொன்னும் வந்தன. குடகு மலையிலிருந்து ஆரமும், சந்தனமும் வந்தன. தென் கடலிலிருந்து முத்தும், குண கடலில் இருந்து துகிலும் வந்தன. கங்கை நீரின் பயனாக விளைந்த பொருட்களும், காவிரி நீரின் பயனாக விளைந்த பொருட்களும், ஈழத்து உணவும், காழகத்தில் ஆக்கப்பட்ட பொருட்களும், இன்னும் வேறு பல பொருட்களும் வந்தன என்கின்றார்.
திரிகடுகம் – சுக்கு மிளகு, திப்பிலி
திரிகடுகம் என்பது சங்க இலக்கியத்தில் பதினெண் கீழ்க்கணக்கில் காணப்படும் நூலாகும். இதை இயற்றியவர் நல்லாதனார் எனும் புலவர். திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் காரம் என்பது இதன் பொருள் ஆகும். இந்த திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று பொருட்களும் உடலுக்கு நன்மை செய்வது போல இந்த திரிகடுகம் எனும் நூலில் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகளும் மனிதனின் அறியாமை எனும் நோயைப் போக்கி வாழ்வை செம்மையாக்க உதவுவதால் இந்த நூல் திரிகடுகம் எனப் பெயர் பெறுகின்றது.
இவ்வாறு பல பழமையான பெருமைகளைக் கொண்ட இந்த மிளகு எமது உடலுக்கு அளப்பரிய நன்மைகளைச் செய்கிறது. இருப்பினும் இந்த மிளகின் அருமையை உணராத நாம் மிளகாய் எனும் அழகிய சுவையூட்டியின் பின்னால் நிற்கின்றோம்.
இந்த மிளகாய் என்பது முதன் முதலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முதல் மெக்சிகோவில் உருவாகியது. பின்னர் 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீஸர்களால் எமது நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டு இப்போது நமது உணவைப் பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மிளகாயில் நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்து தான் இருக்கின்றன என்பது உண்மை.
சங்க காலத்தில் மிகவும் குறைந்த உணவுப் பொருட்களைக் கொண்டு நமது பழந்தமிழன் “உணவே மருந்து” என சத்தான உணவைப் பசிக்கும் போது புசித்து வாழ்ந்து வந்திருக்கின்றான்.
இன்று நாமோ பலப் பல வகையான உணவுகளையும், பல வகையான சுவையூட்டிகளை உணவில் சேர்த்தும், உடலுக்கு ஒவ்வாதவற்றை ஏற்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. ஆக எம் சமையலில் முடிந்தளவு மிளகைச் சேர்ப்போம். நோய்களை விரட்டி வாழ்வோம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்