போற்றுதலுக்குரிய செயல்கள் செய்து வீர மரணம் அடைந்தோரைத் தெய்வமாக வழிபட்டது நமது பண்டைய தமிழரினம். தொல்காப்பியர் காலம் தொட்டு இருந்து வந்த இந்த மூத்தோர் வழிபாடானது நமக்கு முன்னர் வாழ்ந்து, எமது குடிகளைக் காத்து மடிந்த வீர மறவர்களை மூத்தோராகக் கொண்டு தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு ஆகும். இதுவே பிற்காலத்தில் கிராமியத் தெய்வ மரபாகவும், குலதெய்வ வழிபாட்டு முறையாகவும், எம்மைக் காக்கும் காவல் தெய்வமாகவும் மாற்றம் பெற்று இருக்கின்றது.
தொன்று தொட்டு வழங்கி வந்த எமது வீர மறவர் வழிபாட்டினை இக் கார்காலத்தில், கார்த்திகை மாதத்தில் காண்பது தேவையாகின்றது.
புறநானூறு 329
மாப்புகை கமழும்
“இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லில் நாட்பலியூட்டி”
என வரும் இந்தப் பாடலில் பெயரும் புகழும் எழுதப்பட்டு மயில் இறகு சூட்டிய கேடயங்கள் தொங்கும் ஊன்றிய வேல்களால் சூழப்பட்டு நடுகல்கள் இருக்கும். நல்ல நீரால் நடுகல்லைக் கழுவி, சிறிய வீடுகளில் கள் தயாரித்து நடுகல்லிற்கு தினமும் படைப்பர். நறுமண எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றுவார்கள். அதன் கருமையான பெரும் புகையானது நறுமணத்தோடு தெருக்கள் எங்கும் கமழும் என இந்தப் பாடல் கூறுகிறது.
புறநானூறு 335
கடவுளும் இலவே
“கல்லே பரவினல்லது நெல்லுக்குத்தப்
பரவும் கடவுளும் இலவே”
என மாங்குடி மருதனார் பாடுகின்றார். குரவு தளவு, குருந்து, முல்லை ஆகிய நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்கள் இல்லை. கரிய அடிப்பகுதியை உடைய வரகு, பெரிய கதிரினை உடைய தினை, சிறு கொடியில் விளையும் எள், புள்ளிகள் நிறைந்த அவரை இந்த நான்கினைத் தவிர உணவுப் பொருட்களும் இல்லை. துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கல்லாத வேறு குடிகள் இல்லை. மனம் பொருந்தாப் பகைவர் முன்னே அஞ்சாமல் நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, விளங்குகின்ற உயர்ந்த கோட்டினை உடைய யானைகளைக் கொன்று, தாமும் விழுப்புண் பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர, யாம் நெல் தூவி வழிபடுவதற்கேற்ப வேறு கடவுளும் இல்லை. என்பது இந்த பாடலின் பொருளாகும்.
அதாவது நடுகல்லில் வாழும் வீர மறவர்களைத் தவிர வேறு கடவுள் எதுவும் உங்களுக்கு கிடையாது என முல்லை மண்ணில் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
அத்தோடு நடுகல் வழிபாட்டைப் பாடி இருப்பதால் அது மறவர்கள் வாழ்ந்த ஊர் என்றும், அது பகைவர்கள் தாக்க முடியாத இடம் என்பதையும் புலவர் பாடலில் வேறு பகுதியில் உணர்த்துகின்றார்.
அன்றைய காலங்களில் மயில் பீலிகளைக் கொண்டு நடு கற்களை அலங்காரம் செய்திருக்கின்றனர். “நடுகல் பீலிசூட்டி நாரரி சிறுகலத்துக் குப்பவும்”
என வரும் பாடலில் ஒளவையார் குறிப்பிடுவது, “அதியமான் சிறிய கிண்ணத்தில் கள் கொடுத்தால் ஏற்றுக் கொள்வானா? பெரிய நாட்டையே கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவன் அவன்”. என்று பாடுகின்றார்.
இதில் ஒன்றை நாம் உற்று நோக்கலாம். இதற்கு முந்தைய ஒரு பதிவில் நாம் பார்த்தது போல, எமது பண்டைய மூதாதையர் தாம் வழமையாக விரும்பி உண்டு வந்ததை, விரும்பிக் குடித்ததை இறைவனுக்குப் படைத்திருக்கின்றார்கள். அதாவது மாமிசம், கள் போன்றவற்றை அவர்கள் விரும்பிச் சாப்பிட்டு இறைவனுக்கும் படைத்திருக்கின்றார்கள். அதுபோலவே காவல் தெய்வமாக விளங்கும் அந்த நடுகற்களுக்கும் படைத்து வழிபட்டு இருக்கின்றார்கள்.
திருக்குறளில் தெய்வத்துள் வைக்கப்படுபவர்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்” என திருவள்ளுவர் கூறுகின்றார்.
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் உள்ளன. அப்படி உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்பவன் அதாவது தெய்வத்தின் அருங்குணங்களில் மிகப் பெரும் குணம் கொடை என்பதாகும். அது போல தமது உயிரையே மண்ணுக்காக மக்களுக்காக கொடையாக்குவது மிகப்பெரிய அறமாகும். அப்படிச் செய்பவர்கள் வானில் வாழ்வதாக சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவார்கள்.
ஆகவே தான் இந்த வாரத்தில் நமது வீர மறவர்களைக் காந்தள் மலர் கொண்டு அஞ்சலிக்கின்றோம். இந்தக் காந்தள் மலரானது முருகன் அணியும் மாலையாக இருந்திருக்கின்றது. “காந்தளங்கண்ணிச் சென்னியன்” என முருகனை அழைத்து இருக்கின்றனர். வேல் வழிபாட்டில் பசுந்தளைக் காந்தள் இட்டு பூக்களைக் கட்டி வேலை மையமாகக் கொண்டு வழிபட்டு வந்திருக்கின்றனர். இப்படிப் பல பாடல்களில் பல புலவர்கள் காந்தள் மலரைப் பாடியிருக்கின்றனர்.
கார்த்திகை பதினொன்றில் செவ்விதழ்ப் பூவான “பொப்பி” மலரை வைத்து, இங்கிலாந்தில் நினைவுக் குறியீடாக அணிந்து போரில் உயிர் தியாகம் செய்த படை வீரர்களையும் மக்களையும் நினைவு கூறுவர்.
இங்கு பொப்பி மலர்கள் போல, எம்மண்ணில் கார்காலக் கார்த்திகை மாதத்தில் பச்சைப் பசேல் மண்ணில் தமிழீழத் தேசியப் பூக்களான கார்த்திகைப் பூக்கள் பூத்து நிற்கும். அதுபோலவே, திருக்கார்த்திகை தீப வழிபாடும் இந்தக் கார்த்திகை மாதத்தில் அமைந்து நிற்கும். எமது முதல் மாவீரர், வீர மரணம் எய்திய நாளும் கார்த்திகை 27 என்பதால் காலத்தால் முற்பட்ட இந்தக் காந்தள் மலரையும், திருக்கார்த்திகை தீபத்தையும் சேர்த்து வைத்து நாம் வழிபடுவது ஓர் சிறப்பம்சம் ஆகும்.
மிகப் பழமையான நீத்தார் வழிபாட்டை கொண்ட நாம், தேசியக்கொடியின் வண்ணத்தில் மஞ்சளும் சிகப்பும் கொண்ட கார்த்திகை மலரை, இலக்கியங்கள் கொண்டாடும் இந்த காந்தள் மலரை, தொன்று தொட்டு இறைவனைப் பூசித்து வந்த காந்தள் மலரை வைத்து அஞ்சலி செய்தும், திருக்கார்த்திகைச் சுடரேற்றி அஞ்சலி செய்தும் எமது வீர மறவர்களை நினைவில் ஏந்துவோம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்