ஒரு நாட்டின் வளமான நிலைக்கும், சிறந்த ஆட்சி முறைக்கும், வீரர்கள் போர்க்களத்தில் வெற்றியை ஈட்டி வருவதற்கும் அடிப்படையாக அமைவது உழுது விளைவித்த நெல்லின் பயனே. ஆதலால் ஏரைக் காப்பவரின் குடியை காப்பது நல்ல அரசின் கடமை என்பதை உணர்ந்து எமது மூதாதையர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.
அத்தோடு ஒரு நாட்டின் நீர் நிலைகளே அந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்கின்றன. அந்த நீர்நிலைகளை உருவாக்கினால் மட்டும் போதாது, அவற்றை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாத்தும், எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். பருவமழை சரியாகக் கிடைத்துவிட மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த எமது மக்கள் அவற்றைப் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கின்றார்கள்.
ஆக, உழவர்களையும் நீர் நிலைகளையும், மரங்களையும் எவ்வாறெல்லாம் எம் முன்னோர்கள் போற்றிக் காத்து வந்தார்கள் என்பதை நாம் சங்க இலக்கியங்களினூடு ஈண்டு காணலாம்.
புறநானூறு 35 உழுபடையும் பொருபடையும்
“உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே”
என்று வரும் பாடலில் வெள்ளைக் குடி நாகனார் எனும் புலவர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பார்த்துப் பாடுகின்றார். உனது படை வீரர்கள் யானைகளை வென்று உனக்குத் தேடித் தந்த வெற்றியும், கொழுமுனை கிழித்த விளை வயலின் சாலிடத்தே விளைந்த நெல்லின் பயனால் தான் வாய்ப்பதாயிற்று என்பதை மறவாதே. ஆகவே ஒன்று கேள்! உழவர் குடியினரைப் பசியின்றி நீ காப்பாயானால் நின் ஆணைக்கு அடங்காதவர் கூட நின் அடிகளைப் பணிந்து நின்னை போற்றுவர் என்கின்றார்.
புறநானூறு 18
நீரும் நிலனும்
“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”
எனக் குடபுலவியினார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடுகின்றார்.
உணவோ நிலத்தின் விளைவும், நீரும் ஆகும். நீரையும் நிலத்தையும் ஒருங்கு கூட்டி வேளாண்மைக்கு உதவுக! அவ்வாறு உதவியவரே உலகத்தில் உயிரையும் உடலையும் நிறுத்தி வாழ்வித்தவர் ஆவார். எனவே இதனை நீ எண்ணுக! நீர் தடிந்து குளம் தொட்டு நின் நாடு எங்கணும் வளம் பெருக்குவாயாக! இது செய்தோர் மூவகை இன்பமும் பெற்று புகழடைவர். அல்லாதவர் புகழ் பெறாது மடிவர் எனவும் உணர்வாயாக என்கிறார்.
வேளாண் பெருக்கமே மன்னருக்கு வலுவும் புகழும் தரும் என்ற மிகச் சிறந்த உண்மையை விளக்குவது இந்த சங்க காலப் பாடலாகும்.
புறநானூறு 57
“ஒன்னார்ச் செருப்பினும் செகுக்க; என்னாதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு நின்ம்”
என வரும் பாடலில் காரிக்கண்ணனார் எனும் புலவர், பாண்டியன் இளமாறனைப் பார்த்துப் பாடுகின்றார். அதாவது, நீ பகைவர் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்லுங்கால், விளை வயல்களைக் கொள்ளையிடு! பேரூர்களை எரியூட்டு! நின் நெடு வேலால் பகவரை அழுத்திக் கொல்! ஆனால் காவல் மரங்களை ஒருபோதும் வெட்டாதிருப்பாயாக! எனப் பாடுகிறார்.
மரங்களைப் பாதுகாக்கும் கடமை, நாம் பெறும் மழை வளம், மண் வளத்தின் முக்கியத்துவத்தை இப் பாடல் சுட்டி நிற்கின்றது.
நற்றிணை 172 சகோதரியான புன்னை மரம்
“நும்மினும் சிறந்த நுவ்வையாகும்”
எனவரும் பாடலில் நீயோ தலைவியை சந்தித்து மகிழ வந்திருக்கின்றாய். ஆனால் தலைவி இந்த இடத்தில் மகிழ்ந்திருக்க விரும்பவில்லை. யாராவது தங்கையின் முன் காதலித்து மகிழ்வார்களா? நீ நிற்கும் இந்தப் புன்னை மரம் நாம் அன்பாக வளர்த்த தங்கை உறவாகும், எனத் தோழி கூறுவதாக இந்தப் பாடல் அமைகின்றது. இப்பாடல் வழி சங்க காலத் தமிழர் தம் வாழ்வியலில் மரங்களை உயிராக உறவாக மதித்தது புலனாகிறது.
மேற்கூறிய அனைத்துப் பாடல்களுமே உழவனும், நீரும், நிலமும் மனித குலத்திற்கு மிக முக்கியம் என்பதால் அதனை எவ்வாறு நமது சங்க கால மக்கள் பாதுகாத்து வந்தார்கள் என்பது தெரிய வருகின்ற அதே நேரத்தில், எமது நிலத்தில் பருவ மழை காரணமாக நிறைய இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருக்கின்றது.
உதாரணமாக இரணைமடுக் குளத்தில் நீர் அதிகரித்ததால் அனைத்து வான் கதவுகளையும் திறந்து விட வேண்டிய நிலையில், எத்தனையோ ஆயிரம் ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த அனர்த்த சந்தர்ப்பங்களை முன்கூட்டியே அறிந்து இவற்றைத் தடுக்க வழி சமைத்திருக்க வேண்டிய கடப்பாடு அரசு நிர்வாகிகளுக்கு இருந்திருக்க வேண்டும்.
எமக்கு உயிர் தரும் நெல்லின் விளை நிலத்தைப் பாதுகாத்திருக்க வேண்டும். அதே போல் நம் ஒவ்வொருவருக்கும் மரங்களைப் பாதுகாக்கும் கடமையும், நீர் நிலைகளை பாதுகாக்கும் சமூகப் பொறுப்புணர்வும் இருக்க வேண்டும்.
இதுவே நாம் வேளாண்மைக்கு செய்யும் செஞ்சோற்றுக் கடனும் ஆகும்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்