பறை என்பது ஒரு பண்டைய இசைக்கருவி ஆகும். பறை என்பதன் இன்னொரு பொருள் சொல்லுதல், அறிவித்தல், பறைசாற்றுதல் எனவும் பொருள்படும். பண்டைய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பறையிசைக்கருவிகள் நம்மவர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன. வெற்றி வாகை சூடுவதையும் பறை இசை கொண்டு அறிவித்து கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். சங்க இலக்கியங்களில் 400 இடங்களுக்கும் மேலாக இந்தப் பறை பற்றியதான செய்திகள் வருகின்றன. இன்று கிட்டத்தட்ட முப்பது பறை இசைக் கருவிகளை இனம் கண்டு பிடித்துள்ளனர். ஆதி முதல் இருந்து வரும் பறையானது எவ்வாறு பெருமை கொண்டு நடம் புரிந்தது என இங்கு காணலாம்.
ஐவகை நிலங்களுக்குரிய பறை
குறிஞ்சி நிலத்துக்கு தொண்டகப்பறையும்,
முல்லை நிலத்துக்கு ஏறு கோட்பறையும், மருத நிலத்துக்கு கிணைப்பறை அல்லது நெல்லரிப்பறையும், நெய்தல் நிலத்துக்கு நாவாய்ப்பறை அல்லது பம்பையும் பாலை நிலத்துக்கு எரிப்பறை என ஒவ்வொரு விதமான பறைக் கருவிகள் இருந்திருக்கின்றன.
சங்க இலக்கியங்களில், பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் எனும் புலவர் கூறுவதாவது,
“குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர”
எனப் பாடுகிறார். அதாவது, தொண்டகம் என்ற சிறிய பறைக்கு ஏற்றபடி வேலனாட்டம் ஆடிய வேலன் கட்டிய கண்ணியை அணிந்து கொண்டு பல மகளிரோடும் முருகன் எழுந்தருள்கின்றான் எனப் பாடுகின்றார்.
புறநானூறு – 263 களிற்றடி போன்ற பறை
“பெரும் களிற்று அடியின் தோன்றும்
ஒருகண் இரும்பறை இரவல்”
என் வரும் பாடலில் பெயர் அறிந்து கொள்ள முடியாத ஒரு புலவர் களிற்று யானையின் காலடி போன்ற பறையை முழக்கிக்கொண்டு உதவுபவரை நாடிச் செல்லும் இரவலனே! வழியில் உள்ள நடுகல்லைத் தொழாமல் சென்று விடாதே என்கிறார்.
இங்கு இரவலனான பாணன், காட்டு வழியே வருவதால் பறையை முழக்கி விலங்குகளை விரட்டுவதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் இசைத்தபடி வருகின்றான்.
நற்றிணை – 58
“பொன்னுடைப் புதல்வர் சிறுகோட்
கோத்த செவ்வரிப் பறை”
என இந்த அடிகள் ஆரம்பிக்கின்றன. அதாவது சிறுவர்கள் சிறுபறையை தோளில் கோர்த்துக்கொண்டு காப்பு அணிந்திருக்கும் கையில் உள்ள கோலால் பறையை அடித்து முழக்கிக் கொண்டு ஆடுவர் எனப் புலவர் பாடுகின்றார்.
திருக்குறளில் பறை
“அறைபறை அன்ன கயவர்தாம்
கேட்டமறை
பிறர்க்குய்த் துரைக்க லான்”
என்கிறார் வள்ளுவர்.
தான் கேட்டறிந்த மறைபொருளை பிறருக்கு வலியக் கொண்டு போய் சொல்லுவதால் அறியப்படும் பறை போன்றவர் என்கிறார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தேவைகளுக்காகவும் பறைக் கருவி மக்களிடையே பின்னிப்பிணைந்து இருந்து வந்திருக்கின்றது.
வெள்ளம் பெருக்கெடுத்து ஆற்றில் ஓடுவதைக் கூட பறை இசை அறிவித்து மக்களைச் சென்று பார்க்க அழைப்பார்கள்.
அன்று வெற்றி வாகை அறிவிக்கவும், இறை வழிபாட்டிற்கும், வேறு பல மங்கல விடையங்களுக்கும் பயன்பட்ட பறையானது இன்று அமங்கலத்துக்குப் பயன்படுகிறது.
இறந்தவர் வீட்டில் இசைக்கும் பறையானது துக்கத்துக்கானதாகவும், அதை இசைப்பவர்களை தாழ்த்தப்பட்ட சமுதாயமாகவும் நாம் ஆக்கிவிட்ட துயரம் பழந்தமிழர் வாழ்வியலைப் புறந்தள்ளி விட்டது.
குழல்,யாழ், முழவு முரசு போன்ற இசைக்கருவிகள் ஒருங்கிணைந்து வாசிக்க எழும் இன்னிசையை ” இன்னியம்” என்று அக்காலத்தில் சொல்லப்பட்டது இங்கு நாம் ஒப்பு நோக்கத் தக்கது.
சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவது போல் சிறு பறை, பெரும் பறை என்ற பாகுபாட்டை நாம் ஈழத்தில் காணலாம்.
அதே போல, “இன்னியம்” என்ற இசைக்குழு தமிழீழ நிர்வாகத்தில் இருந்து வந்தது. தமிழ் இசையான பறை பல விழாக்களில் முதல் இசையாக இடம் பெற்றது என்பது நாம் அறிந்ததே.
இன்றைய காலகட்டத்தில், தமிழரிசையான இன்னியத்தை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். பழந்தமிழன் பறை இசையை அதன் பெருமைகளை வெளிக் கொணர வேண்டும். ஆங்காங்கே பறை இசையின் தாக்கமும் அதனைப் பயிலும் முயற்சியும் அதற்கான சில குழுக்களும் எம்மவரிடையே இருந்தாலும் அது மக்கள் மத்தியில் பெருமளவில் முன்னெடுக்கப்படவில்லை.
இன்றும் “பறை” எனும் வினைச்சொல்லை ஈழத் தமிழர் பயன்படுத்தி வருகின்றார்கள். எமது பாட்டன் பாட்டி,
“என்ன பிள்ளை பறையிறாய்?”
எனக் கேட்டது ஞாபகத்திற்கு வருகின்றது. மலையாளத்திலும் கதைப்பதை “பறைதல்” எனவே கூறுகின்றனர். என்ன இது ஒரு கிராமப்புறச் சொல்லாக இருக்கின்றதே? எனப் புறம் தள்ளிய சொல்லை நாம் இனித் திரும்பவும் புழக்கத்தில் கொண்டு வருவோம்.
இந்தக் கட்டுரையானது பலப் பல பெருமைகளையும் பெருமளவு செய்திகளையும் கொண்ட எமது பாரம்பரிய பறை பற்றியதான தேடல்களை நாட, வாசகர்களை ஊக்குவிக்கும் என நம்புவோம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்