தமிழர் வாழ்வில் அனைத்துத் தடங்களினதும் வரலாற்று நிலமாகவும் காலமாகவும் விளங்கும் சங்க காலத்தில் நெல் பெறும் முக்கியத்துவத்தை ஆராய்கிறது இக் கட்டுரை. நெல், வாழ்த்தும் பொருளாகவும் வழிபடும் தெய்வாகவும் விளங்கியமை வரலாற்றுச் சிறப்பாகும். நெல்லின் மகத்துவத்தையும் மாண்பையும் விளக்கி நிற்கிறது ஜெயஶ்ரீ அவர்களின் இக் கட்டுரை.
-ஆசிரியர்
சங்க காலத்தில் இறைவனை நெல் தூவி வழிபடவும், காவல் தெய்வங்களான நடுகற்களை வழிபடவும் அதேபோல் திருமணங்களில் மணமக்களை வாழ்த்தவும் நெல் மிகச் சிறப்பான இடத்தை பெற்று வந்திருக்கின்றது. 2000 வருடங்களுக்கு முதல் வாழ்ந்த தமிழனின் பண்பாட்டு வாழ்வியலின் காலக்கண்ணாடியாக சங்க இலக்கியம் இருக்கின்றது. இந்த சங்க இலக்கியம் வழி, நெல் எப்படி முதன்மை பெற்றிருக்கின்றது என்பதை நாம் இந்த ஆய்வின் மூலம் நோக்கலாம்.
வேட்டையாடித் திரிந்த நமது பரம்பரை, பின் தமக்கென உறுதியான, நிலையான ஐவகை நிலங்களில் வசிக்கத் தொடங்கியது. அப்படி வசிக்கத் தொடங்கியதும் அவர்களுக்கென்ற நிலங்களில் மக்கள் உழவை மேற்கொண்டனர். காட்டு நெல்லைச் சேகரித்து விவசாயம் செய்தனர். நெல் உணவு அவர்களின் முழு முதல் உணவாகியது. அது மிக முக்கியமான பொருளாகவும், பெரிதும் விரும்பி போற்றப்படும் முதன்மைப் பொருளும் ஆனது.
இயற்கையை இயற்கையால் வழிபடுவதும் நமது மக்களின் மரபானது. ஒவ்வொரு நிலங்களுக்கும் ஒவ்வொரு இறைவனை கருப்பொருளாக்கி அவர்களை வணங்கினார்கள். போரில் இறந்த வீர மறவர்களுக்கு நடுகல் அமைத்து அவற்றை தமது காவல் தெய்வங்களாகப் போற்றி வணங்கினார்கள். அந்த வழிபாட்டுக்குரிய பொருளாக நெல்லை மிகவும் முதன்மையாக வைத்திருந்தார்கள். அந்த வகையில் எவ்வாறெல்லாம் தமது வாழ்வியலை நெல்லோடு நமது மக்கள் இணைத்திருந்தார்கள் என்பதை கீழ்வரும் சங்க இலக்கியப் பாடல்களினூடு காணலாம்.
புறநானூறு 335
“நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” என மாங்குடிக் கிழார் பாடுகின்றார்.
பகைவர் முன்னே அஞ்சாமல் நின்று அவர்கள் படையெடுப்பைத் தடுத்து பகைவரின் யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண் பட்டு வீழ்ந்து இறந்தவர்களின் நடுகற்களைத் தவிர யாம் நெல் தூவி வழிபடுவதற்கு ஏற்ப ஒரு கடவுளும் இல்லை என்று இந்தப் பாடலில் வருகின்றது. மக்களின் காவல் தெய்வங்களாக இந்த நடுகற்கள் இருந்திருக்கின்றன. அவற்றுக்கு நெல் தூவி வணங்கி வந்தமையும் மரபாக இருந்திருக்கின்றது. பூக்களைத் தூவிக் கடவுளை வழிபடுவது போலவே அக்காலத்தில் நெல்லைத் தூவி வழிபடும் மரபு இருந்ததை இப்பாடல் சுட்டுகின்றது. பூக்களைத் தூவி வழிபடுவதை விட நெல் தூவி வழிபடுவது சிறந்ததாக கருதப்பட்டது என்ற குறிப்பும் வேறு இடங்களில் இருக்கிறது.
அகநானூறு 86
“நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க ”
என்று நல்லாவூர் கிழார் பாடுகின்றார். முது பெண்டிர் நீருடன் கூடிய ஈரமான இதழ்களை உடைய பூக்களை நெல்லுடன் மணமகளின் அடர்ந்த கருமையான கூந்தலில் தூவி “எல்லோரும் விரும்பிப் பேணும் பெண்ணாக, பெரிய மனைக் கிழத்தியாக வாழ்வாயாக” என வாழ்த்தி பெண்களே திருமணத்தை முன்நின்று நடத்தியதாக அவர் பாடுகிறார்.
முல்லைப்பாட்டு
“நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பு” என நம்பூதனார் பாடுகின்றார். வயது முதிர்ந்த பெண்டிர் ஊரின் வெளிப்புறத்தில் இருக்கும் திருமால் கோயிலுக்கு நாழியில் கொண்டு சென்ற நெல்லோடு வண்டுகள் மொய்க்கும் நறுமணம் கூடிய முல்லை மலரையும் தூவி இறைவனை வேண்டித்தொழுது நற்சொல் (விருச்சி) கேட்டு நிற்கின்றனர் என வருகின்றது. விருச்சி என்பது பிறர் வாயில் இருந்து வரும் நற்சொல்லாகும்.
இது போலவே புறநானூறு 280 இல் நெல்லோடு நீரும் இறைவனுக்கு தெளித்து பெண்கள் விருச்சி கேட்டு நிற்பதாகப் பாடல் வருகின்றது.
அகநானூறு 78 இல் பெண்கள் பூவோடு நெற்கதிரையும் தலைமுடியில் சூடினார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.
நெடுநல்வாடையில், பெண்கள் நேரம் அறிந்து இரும்பினால் செய்த விளக்கில் எண்ணெய் கொண்ட திரியைக் கொளுத்தி மாலை நேரத்தில் நெல்லும் மலரும் தூவி இறைவனைத் தொழுவதாக வருகின்றது.
குறுந்தொகையில் நெல்லைப் போலவே சிறுதானியமான செந்தினையை நீரோடு தூவி வழிபட்ட குறிப்பு வருகின்றது.
சங்கம் மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்தில் நெல் தூவி வழிபட்ட செய்தி,
“விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி” என்ற அடிகள் மூலம் தெரிய வருகிறது.
அக்காலத்திலேயே இறந்தவருக்கு வெண்ணிற அரிசி நெல்லெனவும் வழிபாட்டுக்கு செந்நிற அரிசி நெல்லெனவும் பிரித்து வழிபட்டு வந்திருக்கின்றனர்.
2000 வருடங்களுக்கு முன் முதன்மைப் பொருளாகிய விளங்கிய நெல் இன்றும் எமக்கு முதன்மைப் பொருளாக விளங்குகின்றது என்ற செய்தி பூரிப்படைய வைக்கின்றது.
வீட்டு வாசலில் முன் இன்றும் நெற் கதிர்களை நாம் கட்டித் தொங்கவிடும் வழமையைக் காண்கின்றோம். அறுவடை செய்த நெற்கதிர்களை வீட்டுக்கு எடுத்து வந்து சூரியனுக்கு படைத்து விட்டு வாசல் நிலைப்படியின் மேல் கட்டி விடுவது எமது பண்பாக இருக்கின்றது. அதுபோலவே மங்கல நிகழ்வுகளில் நிறைகுடம் வைக்கும் போது நெல் பரப்பி நீர் நிறைந்த குடத்தை அதன் மேல் வைப்பது வழமை என்றாலும் அந்த நிலை மாறி இப்பொழுது அரிசியைப் பயன்படுத்துவோரும் உண்டு.
பன்னெடுங்காலமாக நெல் தூவி மணமக்களை வாழ்த்திய முறை பின் மஞ்சள் கலந்த அரிசி தூவி வாழ்த்தும் முறையாக மாறியுள்ளது. சிலவேளைகளில் மணமக்களை நோக்கி நெல்லை வீசி எறியும் போது நெல்லின் கூர்முனை மக்களின் கண்களில் பட்டுப் பாதிப்படையச் செய்திருக்கலாம் அல்லது காலில் பட்டு பாதத்தை நெற்கள் குத்தியிருக்கலாம் என் ஊகிக்கவும் இடமுண்டு. அதனால் கூட நெல்லுக்கு பதிலாக அரிசியைத் தூவும் வழமைக்கு மாறி இருக்கலாம். ஆனாலும் இன்று நெல் தூவி இறைவனை வழிபடும் மரபு வழக்கொழிந்து விட்டது என்பது ஒரு கவலைக்குரிய விடயமாகவே இருக்கின்றது.
2000 வருடங்களுக்கு முதல் எழுந்த சங்க இலக்கியங்கள் அழிந்து போகாமல் இருக்க குறைந்தது நூறாண்டுகளுக்கொரு முறை திரும்பத் திரும்ப எமது பாட்டன்மார் ஓலைச்சுவடியில் எழுதித்தான் இன்று வரை கொண்டு வந்து எமக்கு சேர்த்திருக்கின்றார்கள். அதுபோலவே எமது மூதாதையர் அன்றிருந்த மரபைத் திரும்பத் திரும்ப எமக்குச் செய்து காட்டி இன்று வரை கொண்டு வந்துள்ளனர்.
வழிவழியாக வந்த மரபை, இன்றைய எமது சந்ததி, வேறு தாக்கங்களால் மாற்றி அமைப்பது வேதனைக்குரிய விடையமே.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-38 | சங்க காலத்தில் பறை எனும் பழம் பெரும் இசை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்