Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சொல்ல வல்லாயோ நீ -2 | பணிவு வளவு | பால சுகுமார் பக்கங்கள்

சொல்ல வல்லாயோ நீ -2 | பணிவு வளவு | பால சுகுமார் பக்கங்கள்

3 minutes read
Image may contain: Balasingam Sugumar, standing, ocean, sky, hat, outdoor and water

சேனையூர் பணிவு வளவு எங்கள் பூர்விக வீடு இப்போதும் அந்த வீடு படம் படமாய் நினைவில் உள்ளது அங்கிருந்துதான் எங்கள் ஊரின் பண்பாட்டு அசைவுகள் பல ஆரம்பமாகின.

அந்த வீடு மூன்று பகுதிகளாக இருந்தது பிரதான வீடு இரண்டு கூரைகள் இரண்டு பிரதான அறைகள் அதே அளவில் பெரிய மண்டபம் இடப் புறமாய் அடுப்படி அதுவும் இரண்டு பகுதிகள் கொண்டது வலப் புறத்தில் தனியான ஒரு கட்டிடப் பகுதி அரைக் குந்து கட்டிடம் முன் பகுதியில் நீண்ட படி.அந்தக் கட்டிடத்தில்தான் காளியப்பு ஐயா இருப்பார் அவரை சந்திக்க வருபவர்கள் அங்குதான் சந்தித்து செல்வார்கள்.அடுப்படியை அண்டி பக்கத்தில் கிணறு அது வற்றாத ஜீவ ஊற்று அது அவ்வளவு ருசி அந்த தண்ணீருக்கு.பக்கத்து வீட்டுக் காரர் தங்கள் வீட்டில் கிணறு இருந்தும் இங்கு வந்து தண்ணி அள்ளிச் செல்வார்கள்.

கிணற்றுக்கு பக்கத்தில் பெரும் மரமாய் வளர்ந்து எப்போதும் பழமும் காயுமாய் இருக்கும் மசுக்குட்டி மரம் (மல்பெரி மரம்)காயாய் சாப்பிட தனி புளியாய் இருக்கும் பழுக்கும் போது அது கறுத்து சிவத்திருக்கும் புளிப்பும் இனிப்புமான சுவை.நாங்கள் போட்டி போட்டு ஆய்ந்து சாப்பிடுவம் ஏறி ஆயக்கூடிய மரம் ஏறினால் வளைந்து எங்களைத் தாங்கிக் கொள்ளும்.

அதுக்கு பக்கத்திலேயே பெரிய மாமரம் புளி மாங்காய்தான் ஆனால் அதன் பழம் தேன் சுவை மிக்கது.காய் முற்றிப் போகும் காலத்தில் பணிவுக்குள் இருந்து மந்திக் குரங்குகள் கண்ண மூக்கப் பாத்து ஆய்ந்து போகும் தருணங்கள் அப்புச்சி வளர்த்த நாய் அவற்றை விரட்டிச் செல்ல நாங்கள் அதன் பின்னால் ஓடுவதும் அவை ஒவ்வொரு தென்நையாய் மாறி மாறி பாய்ந்து ஓடி கண்ணா காடுகளில் ஒழிந்து கொள்ளும்.

அப்புச்சி மா மரத்தில் ஏறி மாங்காய் ஆயும் அழகு தனித் தன்மை வாய்ந்தது மாங்காய் கீழ விழாமல் இருக்க ஒரு கொக்கத் தடியில் குட்டானை கட்டி குட்டானுக்குள் மாங்காய் விழும் வகையில் பத்திரமாக ஆய்ந்து முன் பகுதி வீட்டுக்குள் பால் வடியும் வரை பரவி வைத்து பின் அடுக்குப் பானைக்குள் வைக்கல் போட்டு பழுக்க வைப்பதும் நாங்கள் கண்டும் காணாமல் பழுத்த மாம் பழம் கழவாடுவதும் தனிக் கதை .காலைச் சாப்பாட்டுக்கு அம்மா புட்டும் தயிரும் மாம்பழமும் இலுபப் பாணியும் தேங்காப் பாலும் சேர்த்துச் சாப்பிட அதன் சுவையை இப்போதும் நான் நினைத்து நினைத்து கனிந்து கொண்டிருக்கிறேன்.

வாசலை அண்டி இரண்டு பவள மல்லி மரங்கள் எப்போதும் புது வாசனையாய் பூக்களை சூடி நிற்கும் எங்கள் சின்ன மாமி மார்கழி வந்தால் முற்றத்தை பூசி மெழுகி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமிடுவார் அதன் அழகு ஆயிரம் கண் கொண்டு ரசித்தாலும் அடங்காது.முதல் நாள் இட்ட கோலத்தில் பவள மல்லிப் பூக்கள் காலைப் பொழுதில் நட்சத்திரங்கள் போல மேலும் அழகு சேர்த்து கிடக்கும்.

எப்போதும் சொந்தக்காரர்களால் நிறைந்து கிடக்கின்ற அந்த வீடு பக்கத்தில் கற்பகம் மாமி மறு புறத்தில் நாகமுத்து அக்கம்மா ஆக்கள் அப்படியே ஒழுங்கை வழியே சென்றால் அயிலேசு அம்மாச்சி அதைத் தொடர்ந்து சின்னச்சி மச்சி வவ்வா மச்சி வீடு மற்றொரு பக்கம் சிவராசா அண்ணன் வீடு கோயில் பக்கம் வரும் போது சிவம் அண்ணன் கிருபானந்தம் தயாளம் வீடு. வீதிக்கு அந்தப் பக்கம் ஆச வீடு அதன் பக்கத்தில் அடப்பனார் வீடு எல்லோரும் ஒரு கூட்டுப் பறவைகளாய் கூடிக் களித்த நாட்கள் அந்த வீட்டின் நினைவுகளில் இரவு வேளை கட்டைபறிச்சானிலிருந்து சாரதா மச்சி,மஞ்சு மச்சி ஆக்களும் சில வேளைகளில் மலர் மச்சி பரிமளா மச்சி ஆக்களும் வந்து கூடுவர் .

எங்கள் விளையாட்டுகள் நிலவொளியில் ராஜா ராணி கதைகளாய் ஆச்சி சொன்ன கதைகளோடு சங்கமிக்கும் கதைகளில் நான் எப்போதும் ராஜாதான்..

(தொடரும்)

பேராசிரியர் பால சுகுமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More