
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்ற கதை தற்போதைய ஆட்சியிலும் பேசப்படுகின்றது. ஸ்ரீலங்காவை ஆளுகின்ற கட்சிகள் தாம் ஆட்சியை பிடிக்கும் போதேல்லாம் அரசியலமைப்பை தத்தமது தேவைகளுக்கும் பேரினவாத விரிவாக்கத்திற்குமாக ஸ்ரீலங்கா அரசியல் யாப்பை திருத்தி வருகின்றன. கடந்த 2010களில் பேரினவாத சிந்தனையை நிறைவேற்று அதிகாரம் மூலம் பலப்படுத்தி, சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த முற்பட்ட ராஜபக்ச தரப்பினர் இப்போது மீண்டும் அரசியலமைப்பை மாற்றப் போவதாக கூறுகின்றனர்.
இங்கே ஒரு சொல்லாட்சியை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டி இருக்கிறது. அன்பிற்குரிய ஆட்சியாளர்களே, ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றுவதாக சொல்லுங்கள். அதனை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் புதிய அரசியலமைப்பு என்று அதனை சொல்லாதீர்கள். அதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தரும் புதிய அரசியலமைப்பு என்றும் சொல்லாதீர்கள். பௌத்த, சிங்களப் பேரினவாத சிந்தனையை விரிவுபடுத்துகின்ற, ஆழப்படுத்துகின்ற, தமிழினத்தை ஒடுக்குகின்ற அரசியல் யாப்பு என்று சொல்லுங்கள்.
ஸ்ரீலங்கா அரசியலில் ஆட்சியாளர்களால் தமிழர்களின் நிலமை குறித்து ஒரு காலத்திலும் உண்மை பேசப்படுவதில்லை. தமிழ் மக்களை அடக்கி, ஒடுக்கிக் கொண்டு, அவர்களுக்கு பெரும் சுதந்திரத்தை அளித்தாக காட்டப்படும். நாம் ஸ்ரீலங்கன் என்பதை புறக்கணித்து வாழுகின்ற தமிழர்களை சர்வதேச அரங்கில் தமிழர்களும் ஸ்ரீலங்கன் என்பதைப் போல அரசின் அடிவருடிகளையும் ஒத்தோடிகளையும் வைத்து காண்பிக்கப்படும். உண்மையிலேயே ஸ்ரீலங்காவின் அரச முகத்தில் தமிழர்கள் ஒருபோதும் பிரதிபலிக்கப்ட்துமில்லை. அதனை சிங்கள அரசும் ஆட்சியாளர்களும் செய்ததுமில்லை. அப்படியொரு விம்பமே அரசியலுக்காக அவ்வப்போது காட்டப்பட்டு, கலைக்கப்படுவதே தொடர்ச்சியான நிகழ்வு.
உண்மையில் அரசியலமைப்பு என்பது என்ன? ஒரு நாட்டின் குடிமக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்காக, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற இறையாண்மைக்கான ஏற்பாடுதான் அரசியல் யாப்பு. மக்களை ஆளுகிறவர்கள், எத்தகைய பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் அரசியல் யாப்பு, குடிமக்களால் ஆளும் பொறுப்பு வழங்கப்படுவதையும் பற்றித்தான் பேசுகின்றது. குடி மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவே அரசியல் யாப்பு குறித்து வரலாற்றில் வாழ்ந்த அறிஞர்கள் பெரும் சிந்தனைகளை செய்தனர்.
உலகின் மிக நீண்ட அரசியல் யாப்பு எனப்படும் இந்திய அரசியலமைப்பு சட்டமேதை அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது. ஒடுக்குமுறைகளும் ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்த இந்திய ஒன்றிய மாநிலங்களை ஒன்றிணைக்க ஏதுவாக அமைந்த இந்திய அரசியலமைப்பு, ஒடுக்குமுறை மற்றும் ஏற்றத் தாழ்வுகளை களைகின்ற நிவாரணங்களையும் பரிந்துரைத்திருக்கிறது. இந்தியா வேறுபட்ட பல மாநிலங்களால் ஒன்றிணைக்கப்பட்ட நாடு. அதுவும் மிகவும் சமீபத்திய ஆண்டுகளில் ஒன்றுபடுத்தப்பட்ட நாடு.
அதேபோல, உலகின் மிகப் பெரிய நாடுகள் பலவும் ஒன்றிய நாடுகளாக உள்ளன. பிரித்தானியா, அமெரிக்கா போன்றவை இதில் குறிப்பிடத்தகுந்தவை. மாநிலங்களை ஒன்றுபடுத்தி, ஒரு நாடாக பலம் கொள்ளுவதும், வளங்களை பகிர்வதும், பலம் கொள்ளுவதும் சிறப்பான விடயம்தான். அங்கே மத்தியில் ஆளுகின்ற அரசிலும் சம வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு, சம உரிமைகள் வழங்கப்படுகின்ற போது அது ஆரோக்கியமானதாக காணப்படும். ஆனால் இலங்கை வரலாற்றில் சமத்துவம் இல்லாமல் ஆண்டான் அடிமை நிலையே காணப்படுகிறது.
பெரும்பான்மை சிங்களவர்கள், சிறுபான்மை தமிழ் மக்களை ஆள்வதே சிங்களப் பேரினவாத அரசியல் கொள்கையாக இருக்கிறது. இந்த நாட்டில் ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வர முடியாது. அத்துடன் கல்வி, நிதி, நிர்வாகம், தொழில் என அனைத்திலும் ஈழத் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததே வரலாறு. இந்த புறக்கணிப்பை சட்ட ரீதியாக வரைந்து வைத்திருக்கிறது ஸ்ரீலங்கா அரசியல் யாப்பு. தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக முடியாது என்பதை கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா அரசியல் யாப்பு பௌத்த சிங்களப் பேரினவாதத்தையே உள்ளடக்கியிருக்கிறது.
ஈழத் தமிழ் மக்கள் அரசியல் யாப்பு ரீதியாக புறக்கணிக்கப்பட்டிருப்பதுடன் பல்வேறு சட்டத் திருத்தங்கள் வாயிலாக ஈழத் தமிழ் மக்கள் மீது கொடுமையான இன ஒடுக்குமுறைகளையும் இன அழிப்புக்களையும் மேற்கொள்ளுகின்ற சரத்துக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் குடிமக்களை அழிக்கவும் ஒடுக்கவும் முனைகின்ற அரசியல் யாப்பு அந்த மக்களின் அரசியல் யாப்பாக இருக்க முடியாது. ஒன்றுபட்ட இலங்கைக்காக உழைத்த ஈழத் தமிழ் மக்கள் இந்த கசப்பான அனுபவங்களின் பிறகே தனித் தமிழ் ஈழப் போராட்டத்தை துவங்கினர்.
நேரடியாகச் சொன்னால், தனித் தமிழீழமே ஈழத் தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு என்று அன்று சொல்லி போராடுவதற்கு என்ன காரணங்கள் எல்லாம் இருந்தனவோ, அவை எல்லாம் இன்றும் பல மடங்கு பல்கிப் பெருகி விட்டன. ஈழத் தமிழ் மக்களை சம உரிமையுடன் நடத்தாத சிங்களப் பேரினவாதம், அவர்களின் தாயகத்தையும் ஆக்கிரமித்து, அழித்து இத் தீவில் ஈழத் தமிழ் மக்களை இல்லாமல் செய்வதையே ஒரே தீர்வாக கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடே ஒற்றையாட்சி அரசியலாகும்.
கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவோம் என்று சர்வதேசத்திற்கு சொல்லி காலத்தை கழித்து வந்தது. இப்போது கோத்தபாய ராஜபக்ச அரசாங்கமும் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போகிறோம் என்றும் அதில் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் இல்லை என்று தைரியாகமாச சொல்லி வருகின்ற நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனும் புதிய அரசியல் யாப்புக்கான யோசனை ஒன்றை தானும் எழுதி வருவதாக சொல்கிறார்.
உலக நாடுகளில் ஒன்றுபட்டுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையே ஈழத் தமிழ் மக்களும் கோருகின்றனர். ஒற்றை ஆட்சிக்குள் அத்தகைய உரிமைகளை பகிர முடியாது. அந்தந்த மாநிலங்களின் சுயாட்சியை ஏற்றுக்கொள்ளுவதே அடிப்படையானது. தமிழ் மக்களின் விருப்பம் இன்றி அவர்களை ஆள்வது அடிமை கொள்ளல் ஆகும். தமிழ் மக்கள் தொடரச்சியாக ஸ்ரீலங்கா மத்திய அரசை எதிர்த்தே வாக்களித்து வருகின்றனர். எனவே இலங்கைத் தீவில் தமிழ் மக்களை சம உரிமையுடன் சுயாட்சியில் வாழ அனுமதிக்கின்ற புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை. இல்லையேல் ஈழத் தமிழ் மக்கள் தனித் தமிழீழத் தீர்வை நோக்கி பயணிக்க நிர்பந்திக்கப்படுவார்கள் என்பதே உண்மை நிலவரமாகும்.
தீபச்செல்வன் (நன்றி -உரிமை)