Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை “முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழிப்பவர்களுடன் எப்படி இணைந்து வாழ்வது?” | தீபச்செல்வன்

“முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழிப்பவர்களுடன் எப்படி இணைந்து வாழ்வது?” | தீபச்செல்வன்

6 minutes read

பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்.
பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண். (விகடன் )

இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விகடனுக்காக தனது கருத்துகளை இங்கே பதிவுசெய்கிறார் ஈழத் தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன்.

‘ஈழத்தில் கண்ணுக்குத் தெரியாத யுத்தம் நிகழ்கிறது’ எனப் பலரும் எடுத்துரைத்து வருகிறார்கள். எறிகணைகளின்றி, துப்பாக்கிகளின்றி, இரத்தம் சிந்தாத வகையில் ஈழத் தமிழ் இனத்தை ஒடுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கல்வி, நிர்வாகம், நில ஆக்கிரமிப்பு, அதிகாரம், நோய் எனப் பலவழிகளில் அது தொடர்கிறது.அப்படி ஒரு நடவடிக்கையாகத்தான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி அழிப்பும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைத்த இலங்கை அரசு, தமிழர்களுக்கு இனி எந்தப் பிரச்னையும் இல்லை என்ற தோற்றத்தைக் காண்பிக்க முனைகிறது. அத்துடன் இன்னொரு உண்மையையும் புதைக்கும் முயற்சி நடக்கிறது. ‘இன ஒடுக்குமுறைகளால்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது’ என்ற விஷயத்தை மறைத்துவிட அரசு நினைக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே ‘தமிழர்களுக்கு சுவர்க்க வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறோம்’ என்ற தோரணையில் இலங்கை அரசு பேசிவந்தது.

தீபச்செல்வன்
தீபச்செல்வன்

2009 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்ததாக சொன்னார் அன்றைய அதிபர் மகிந்த ராஜபக்சே. மிகப்பெரிய இனப்படுகொலையை மனிதாபிமானத்தின் பெயரில் செய்து முடித்த ராஜபக்சே, ‘முள்வேலி’ என்ற கொடும் நரகத்தை மறுவாழ்வு என்ற பெயரில் கையளித்தார். இப்போதும்கூட, “தமிழர்களுக்கு என்ன பிரச்னை, அவர்கள் ஏன் இன்னும் போராடுகிறார்கள்?” என்று சிங்களப் பேரினவாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றுபட்ட நாட்டுக்குள் சுயாட்சியை கோரும் தமிழர்களைப் பார்த்து, “தனிநாடு கேட்கிறீர்கள்” என்கிறார்கள்.

இங்கே என்ன நிகழ்கிறது என்பதை மறைத்துப் பேசுவதுடன் தமிழர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதை திரித்துப் பேசுவதுதான் சிங்களப் பேரினவாத்தின் இயல்பு. ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் முள்ளிவாய்க்கால் போரில் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இப்போதும் எங்கள் வாழ்வு, இல்லாமல் ஆக்கப்பட்டவர்களுடன்தான் கழிகிறது. எங்கள் நினைவின் வழி அவர்கள் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். இன அழிப்பில் கொல்லப்பட்டவர்களின் வாழ்க்கை முடிவு என்பது இயற்கை மரணத்தால் வரும் முடிவு போலல்ல. அவர்கள் பற்றி இன்னும் எங்களுக்கு முடிவு தெரியவில்லை. அதனால் அவர்கள் நம் வாழ்வின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் துடிதுடிக்க இறந்த குழந்தை ஒன்றை புதைக்காமல் துரத்தப்பட்ட தாயொருத்தி, அக்குழந்தையின் மரணத்தை ஏற்பதற்கு இனப்படுகொலைக்கான நீதி தேவை. நந்திக்கடலில் சிங்கள ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பிள்ளையை இப்போது காணாமல் ஆக்கிவிட்டோம் என கைவிரிக்கிறது அரசு. தன் பிள்ளையை விடுவிக்கும் வரையில் காத்திருக்கும் தாயின் நம்பிக்கையில் அப்பிள்ளை வழி தேடிக் கொண்டே இருப்பார். அப்படித்தான் போரில் அழிக்கப்பட்டவர்கள், எங்கோ வாழ்வது போலொரு நினைவுகள் இம்மண்ணில் வாழ்கின்றன.

இனப்படுகொலையில் அழிக்கப்பட்டவர்களின் நினைவுகளை அழிப்பது என்பது, இலங்கை அரசாங்கத்தின் கண்ணுக்குத் தெரியாத யுத்தம். கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு, கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி பல தடைகளை விதித்தது இலங்கை அரசு. அழிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்துக்கு, பல நூறு கிலோ மீட்டர்கள் சுற்றி, தடைகளைக் கடந்து முள்ளிவாய்க்கால் சென்றேன்.

அதற்கு அடுத்து, மாவீரர் தினத்தை நினைவுகூருவதற்கும் கொரோனா தடுப்பு சட்டத்தையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் இலங்கை அரசு உபயோகப்படுத்தியது. தமிழர்கள் போருக்குச் சென்று களத்தில் மாண்ட பிள்ளைகளை நினைத்து அழுது கண்ணீர் விடுகிற நிகழ்வுதான் அது. போரில் சகலமும் இழந்து உடைந்துபோன தாயின் கண்ணீர், இந்தத் தீவை இரண்டாக்கி விடும் என அஞ்சுகிற அரசை என்ன சொல்வது? மாவீரர் துயிலும் இல்லங்களில் படைகளைக் குவித்து தடை விதிக்கப்பட்டது. கார்த்திகை விளக்குகளைக்கூட கால்களால் எட்டி உதைத்து செய்கிற போரின் மத்தியில்தான் நாம் வாழ்கிறோம்.

முள்ளிவாய்க்கால் இடிப்பு
முள்ளிவாய்க்கால் இடிப்பு

கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த அரசாங்கம், போரில் கொல்லப்பட்ட பொதுமக்களையும் மாண்டுபோன புலிகளையும் நினைவுகொள்கிற உரிமையை அதிகாரபூர்வமற்ற முறையில் வழங்கியது. அது தமிழர்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆற்றுப்படுத்தலாக இருந்தது. இத்தகைய அணுகுமுறைகள் போரின் கொடுமைகளை மறந்து சிங்கள மக்களுடன் சிநேகம் கொள்ளுகின்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தியது. சிங்கள மக்களுக்கும் அச்சூழல் ஒரு புரிதலை ஏற்படுத்தக்கூடும். இன ஒடுக்குமுறை நினைவிடங்களும் போரின் தடங்களும் சிங்கள மக்களுக்கும் புரிதலை ஏற்படுத்தும். அதுவே அரசுக்கும் சிக்கல்.

இலங்கையின் ஆட்சியை மீளக் கைப்பற்றிய ராஜபக்சே குடும்பத்தின் புதிய அதிபர் கோட்டாபாய ராஜபக்சே, தமிழர்களின் நினைவுகூறும் அனைத்துவிதமான உரிமைகளையும் பறித்தார். ராஜபக்சே தரப்பினரைப் பொறுத்தவரையில், முள்ளிவாய்க்காலில் தம்மால் கொன்றழிக்கப்பட்ட ஈழ மக்களும் ஒன்றுதான். இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போரிட்டு மாண்ட புலிகளும் ஒன்றுதான். அதனால்தான் அனைத்து நிகழ்வுகளையும் தடுத்து வருகிறார்கள்.

இதன் ஓர் அங்கமாகத்தான் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி அழிக்கப்பட்டது. கடந்த 8-ம் திகதி, இரவோடு இரவாக சட்டவிரோதமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி அழிக்கப்பட்டது. சுயாட்சித் தன்மை கொண்ட பல்கலைக்கழகங்களில் அரசாங்கமும் ராணுவப் படைகளும் இப்படி காடைத்தனம் செய்ய முடியாது. `நினைவு ஸ்தூபியை தாம் அழிக்கவில்லை’ என்று ராணுவமும் அரசும் சொல்கின்றன. ‘துணைவேந்தர் சற்குணராஜாதான் இந்த முடிவை எடுத்தார்’ என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறுகிறது. அரசின் அழுத்தங்களால்தான் இந்த முடிவுக்கு துணைவேந்தர் வந்திருக்கிறார். அரசப் படைகளின் பாதுகாப்புடன்தான் ஸ்தூபி அழிக்கப்பட்டது.

ஸ்தூபி இடிக்கப்பட்ட இடத்தில் கல் 
 வைக்கும் துணை வேந்தர்
ஸ்தூபி இடிக்கப்பட்ட இடத்தில் கல் வைக்கும் துணை வேந்தர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றில் மாணவத் தலைவர்களுக்கும் துணைவேந்தர்களுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. பேராசிரியர் துரைராஜா ஈழ விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களிப்பு செய்த துணைவேந்தர். அவர் விடுதலைப் புலிகளால் ‘மாமனிதர்’ என்று கௌரவிக்கப்பட்டவர். “இன்றைக்கு ஒரு மனிதராகக்கூட இல்லாமல் நினைவு ஸ்தூபியை அழிக்க சற்குணராஜா அனுமதி வழங்கியுள்ளார்” என்பதே ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பு.

நினைவு ஸ்தூபியை சத்தமன்றி அழித்துவிடலாம் என்று நினைத்த அரச தரப்புக்கு, அதனால் ஏற்பட்ட எழுச்சிதான் பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். அதற்கு ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆதரவு வழங்கியதுடன் இன்று 11-ம் திகதி வடக்கு கிழக்கு மாநிலம் முழு அடைப்பு போராட்டத்தில் இருக்கிறது. இந்த நிலையில், அழிக்கப்பட்ட நினைவுத் ஸ்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஸ்தூபியை அழித்ததாகச் சொல்லப்படும் துணைவேந்தரையே, அந்த அடிக்கல்லை நாட்ட வைத்திருக்கிறார்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள். மாணவர்களின் போராட்டத்தினாலும் உலகத் தமிழர்களின் எழுச்சியினாலும் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி மீள எழுகிறது.

இந்தப் பிரச்னை தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதாலும், அரசாங்க மேலிடம் சுமுகமாகத் தீர்க்கச் சொன்னதாலும்தான், மீளவும் நினைவு ஸ்தூபியை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. “இன்னமும் இலங்கைப் பிரச்னையில், தமிழ்நாட்டிற்கு ஒரு வகிபாகம் இருக்கின்றது” என்று மலையகத் தமிழ் தலைவர் மனோ கணேசன் கூறியிருப்பதுதான் உண்மையும் நம்பிக்கையும்கூட. நினைவு ஸ்தூபி அழிக்கப்பட்டவுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனைக் கண்டித்துக் குரல் கொடுத்தமை முக்கியமான விசயம். அதேபோல தமிழகத் தலைவர்கள் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அடிக்கல்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அடிக்கல்.

முஸ்லீம் தலைவர்களும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதுடன், நினைவு ஸ்தூபி அழிப்புக்கு எதிரான போராட்டத்திற்கும் ஆதரவு அளித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியிலும் இச்செயல் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அனுரகுமார திஸாநாயக்கா என்ற எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஹரி ஆனந்தசங்கரி என்ற கனடா நாட்டு தமிழ் எம்.பி.யும் இதனைக் கண்டித்தார். அத்துடன், வெளிநாடுகளைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் இலங்கை அரசின் அநாகரியச் செயலைக் கண்டித்தார்கள். வெளிநாடுகளில் இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களும் வெடித்திருக்கின்றன. கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாக இலங்கை அரசுக்கு பெரும் எதிர்ப்பும் அரசியல் சிக்கலும் ஏற்பட்டிருக்கிறது.

தமிழர்கள் எந்த நிலையில் வாழ்கிறார்கள் என்பது உலகத்துக்கு இதனால் உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழர்களின் மீளா நினைவுகளுடன் போர் செய்கின்ற கொடுமையான அரசு இலங்கை அரசு என்பதும் மீண்டும் உணர்த்தப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களின் நினைவிடத்தை அழிப்பவர்களுடன் ஈழத் தமிழர்கள் எப்படி இணைந்து வாழ்வது? அன்றைக்கு ஈழ மக்களை ஸ்ரீலங்கா பிரஜைகளாக நினைத்திருந்தால், இலங்கை அரசு அவர்களைக் கொன்றிராது. இன்றைக்கேனும் சிங்கள பேரினவாத மனநிலையில் மாற்றம் நிகழ்ந்திருந்தால் இந்த ஸ்தூபி அழிக்கப்பட்டிராது.

ஈழத் தமிழரின் நினைவேந்தல் உரிமைக்காக ஒன்றிணைந்த உலகத் தமிழினம், இதே ஒற்றுமையுடன் ஈழ இனப்படுகொலைக்கான நீதிக்கும் தமிழரின் சுயாட்சிப் போராட்டத்திற்கும் குரல் கொடுத்தால், ஈழ மக்களுக்கு விரைவில் சுதந்திரம் பிறக்கும்.

தீபச்செல்வன்

நன்றி: விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More