Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா? | சுபத்ரா

அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா? | சுபத்ரா

5 minutes read

-சுபத்ரா –

Tamilmirror Online || இலங்கைக்கு இராணுவ சேவை கட்டாயமா?

இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி என்ற திட்டம் ஒன்று அரசாங்கத் தரப்பில் இருந்து முன்மொழியப்பட்டிருக்கிறது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ரி யர் அட்மிரல் சரத் வீரசேகர தான, இந்த திட்டம் குறித்து வெளிப்படுத்தியிருக்கிறார். தாமே இது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஒழுக்கமான- சட்டத்துக்கு கட்டுப்பட்ட, சமூகத்தை நாட்டில் கட்டியெழுப்பும் நோக்கிலேயே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகள் வெற்றிகரமாக செயற்படுவதாகவும் றியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கைக்கு கட்டாய இராணுவப் பயிற்சி பொருத்தமானதாக இருக்குமா? இதனை இலங்கை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்விகள் பரவலாக எழுந்திருக்கின்றன.

உலகில் சுமார் 200 நாடுகள் உள்ள போதும், கட்டாய இராணுவப் பயிற்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தும்  நாடுகள் 28 மட்டும் தான்.

இந்த நாடுகளுக்குள் வடகொரியா, இஸ்ரேல் போன்றவை இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல. 

ஏனென்றால், இந்த நாடுகள் கடுமையான எல்லைப்புற அச்சுறுத்தல், சவால்களையும், குறைந்தளவு மக்கள் தொகையையும் கொண்டவை.

அதனால், கட்டாய இராணுவப் பயிற்சி இந்த நாடுகளின் பாதுகாப்புக்கு முக்கியம். சுவிஸ், டென்மார்க், பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் கூட இந்த கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடுகளின் வரிசையில் இருக்கின்றன.

கட்டாய இரணுவப் பயிற்சி அளிக்கும் நாடுகளில் பெரும்பாலானவை, இரண்டாம் உலகப் போரின் போதும், அதற்குப் பின்னர் நடந்த போர்களிலும் பங்கெடுத்தவை. அதாவது போரில் ஈடுபட்ட நாடுகளில் எப்போதுமே, படைகளுக்குத் பற்றாக்குறை இருந்து கொண்டிருக்கும்.

இலங்கையிலும், அதேநிலை, 2009 வரை காணப்பட்டதை மறந்து விட முடியாது. அவ்வாறான நிலையில், கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தான் தேவையான படைபலத்தைக் கொடுப்பதற்கு உதவும்.

இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட பல நாடுகள்,  தமது வழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் நீடித்து வருகின்றன. அதேவேளை, தொடர்ந்து போர் அச்சுறுத்தலைக் கொண்டுள்ள நாடுகள், திடீரென போர் மூண்டால் அதனைச் சமாளிக்கத் தேவையான படைகளை ஒதுக்கு நிலையில் வைத்திருப்பதற்காகவும், இந்த கட்டாய இராணுவப் பயிற்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

வேறுபல நாடுகள்,  ஒழுக்கத்தையும், சட்டத்தையும் மதிப்பவர்களாக தமது பிரஜைகளை உருவாக்குவதற்கும், உடற்திறன் கொண்டவர்களாக வைத்திருப்பதற்கும், தேசப் பற்று உள்ளவர்களாக மாற்றுவதற்கும் கட்டாய இராணுவப் பயிற்சித் திட்டத்தை செயற்படுத்துகின்றன.

இன்றைய உலகில் கட்டாய இராணுவப் பயிற்சி என்பது புதியதொரு விடயமல்ல.

கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடுகளில் எல்லாம், கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

பல நாடுகள் 18 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சிகளைக் கொடுத்து விட்டு, வீட்டுக்கு அனுப்பி விடுகின்றன.

8 வாரங்கள் தொடக்கம், 6 மாதங்கள், ஒரு வருடம், 18 மாதங்கள், 3 ஆண்டுகள் என்று, ஒவ்வொரு நாட்டிலும், கட்டாய இராணுவப் பயிற்சி அல்லது கட்டாய இராணுவ சேவைக்கான கால அளவுகள் வேறுபடுகின்றன.

சர்வதேச அளவில் கட்டாய இராணுவப் பயிற்சி அல்லது இராணுவ சேவை என்பது, புதிய விடயமோ அல்லது பாரதூரமான விவகாரமோ அல்ல.

இலங்கையிலும் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு குறித்து போர்க்காலத்தில் சிலர் யோசனைகளை முன்வைத்திருந்தார்கள்.

ஏனென்றால், விடுதலைப் புலிகளின் பலம் மேலோங்கியிருந்த காலகட்டங்களில், இராணுவத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வது பெரும் சிக்கலான விடயமாக இருந்தது.

அந்தச் சிக்கலை தீர்க்க கட்டாய இராணுவப் பயிற்சித் திட்டமே, பொருத்தமானது என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனாலும், நடைமுறைப் பிரச்சினைகளும், பாதுகாப்புச் சிக்கல்களும் அதிகம் இருந்ததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதாவது கட்டாய இராணுவப் பயிற்சி அல்லது கட்டாய இராணுவ சேவையை எல்லோருக்கும் நடைமுறைப்படுத்த முடியாது. 

அவ்வாறு செய்யும் போது விடுதலைப் புலிகளும் ஊடுருவ வாய்ப்புள்ளது என்ற அச்சம் இருந்தது. தனியொரு இனத்தை மையப்படுத்தி கட்டாய ஆட்சேர்ப்பு செய்யும் போது, சர்வதேச அரங்கில் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் ஆபத்தும் இருந்தது.

அதனால் தான் பிரதானமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது விடுதலைப் புலிகள் பற்றிய அச்சமோ, அச்சுறுத்தலோ இல்லை. பாதுகாப்புத் தொடர்பான நடைமுறைச் சிக்கல்களும் குறைவு தான்.

இந்தநிலையில், கட்டாய இராணுவப் பயிற்சித் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் அதிகளவில் நெருக்கடிகள் ஏற்படாது. பொருளாதார நெருக்கடி தான் சவாலாக இருக்கும்.

ஒருவருக்கு ஆறு மாதத்துக்கு  இராணுவப் பயிற்சிகளைக் கொடுக்க, சுமார் ஏழரை இலட்சம் ரூபா தேவைப்படும் என்று, முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான, சரத் பொன்சேகா, கூறியிருக்கிறார்.

ஒரு இலட்சம் பேருக்கு இவ்வாறு பயிற்சியளிக்க, 75 பில்லியன் தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாட்டில் 18 வயதுக்கும், 26 வயதுக்கும் இடைப்பட்ட வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 35 இலட்சம் தொடக்கம் 40 இலட்சம் வரை இருக்கும் என்றும், இதனால் இந்த திட்டம் சாத்தியமேயில்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருக்கிறார்.

பொருளாதார சிக்கல்களை தாண்டுவது ஒருபுறத்தில் இருக்க, கட்டாய இராணுவப் பயிற்சியை, நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்றும் பார்க்க வேண்டும். ஏற்கனவே, மஹிந்த ராஜக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, பாதுகாப்புச் செயலராக தற்போதைய ஜனாதிபதி பதவி வகித்த போது, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில், இராணுவ முகாம்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அந்த பயிற்சிகளை முடித்த பின்னர் தான் பல்கலைக்கழகங்களில் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அப்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்ட போதே பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 50 ஆயிரம் பட்டதாரிகள் அரசசேவைக்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்களுக்கும் கட்டம்கட்டமாக தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இராணுவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

கொரோனா தொற்றினால் அந்த திட்டம் இடையில் நிறத்தப்பட்டது, ஆனால் இவ்வாறான திட்டங்கள்,  சட்டரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டவையாக இருக்கவில்லை. கட்டாய இராணுவப் பயிற்சியை அரசாங்கம் சட்டபூர்வதமானதாக அறிவித்தால், 18 வயதை எட்டும் இளைஞர்கள்,  இராணுவப் பயிற்சிக்காக முகாம்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

போர்க்காலத்தில், விடுதலைப் புலிகள் கட்டாயமாக படைக்கு ஆட்சேர்ப்புச் செய்ததை ஒரு போர்க்குற்றமாக, அரசாங்கம் இன்னமும் வலியுறுத்தி வருகிறது. அப்போது இந்த கட்டாய ஆட்சேர்ப்பு விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பாதிப்பையும் ஏற்படுத்தியது.

கட்டாய ஆட்சேர்ப்பினால் பாதிக்கப்பட்ட பல தமிழர்கள், புலிகளுக்கு எதிராகத் திரும்பினார்கள் என்பதும் வரலாறு. இவ்வாறான வரலாற்றப் பின்னணியில், இலங்கை அரசாங்கம், கட்டாய இராணுவ பயிற்சியை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.

இராணுவப் பயிற்சியின் மூலம் ஒழுக்கமான, சட்டத்துக்கு கட்டுப்பட்ட சமூகத்தை, கட்டியெழுப்பலாம் என்ற உலகளாவிய கருத்து உள்ளது.

அவ்வாறு இராணுவப் பயிற்சி ஒழுக்கத்தையும், சட்டத்தையும் மதிக்க கற்றுக் கொடுக்கிறது என்றால், போர்க்காலத்தில், போர்ச் சட்டங்கள்இ சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறியதான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை இராணுவம் ஏன் முகம் கொடுத்து நிற்கிறது?

நன்றி – வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More