Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை அதிமுகவா? திமுகவா? | வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

அதிமுகவா? திமுகவா? | வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

3 minutes read

நேற்று அலுவலகத்தில் தேநீர் இடைவேளை நேரத்தில் சக பணியாளர் ஒருவரிடம், யாருக்கு ஓட்டுப்போடுவிங்க என்று கேட்டபோது, யாருக்கு போடுறதுன்னுல்லாம் பாக்கல, எனக்கு திமுக வரக்கூடாதுங்கறது தான் ஒரே குறிக்கோள் என்றார். அதாவது, யாரைப் பிடிக்கும் என்பதைவிட, யாரைப் பிடிக்காது என்பதில் மட்டும் தெளிவாக இருக்கும் மன நிலை! இது இன்று நேற்றல்ல, தமிழக அரசியலைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கியதிலிருந்தே இரண்டே இரண்டு அரசியல் பார்வைதான் தமிழகத்தில் செயல்பட்டுவருகிறது. கலைஞர் ஆதரவு அரசியல், கலைஞர் எதிர்ப்பு அரசியல் என்ற இரு பார்வைகளே அவை.

இவைதவிர, திராவிடக்கட்சிகளுக்கு மாற்று அரசியல் என்பதை சமீப காலங்களில், பாமக, விஜயகாந்த், சீமான், கமல், ரஜினி, பாஜக எனப்பலரும் பேசிப்பார்த்தாலும் இன்றுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. விஜயகாந்தே தற்போது அதிமுகவிடம் கூட்டணிக்குக் கெஞ்சுகிறார். திராவிடக்கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்துவிட்டதாக வீதிக்குவீதி பேசிவந்த பொன்னார் தொடங்கி, தத்துப்பிள்ளை அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜகவினர், தற்போது அதிமுகவோடு மட்டுமின்றி சசிகலாவோடும் சமரச சன்மார்க்கம் பேசத்தொடங்கிவிட்டார்கள்.

அண்ணாவுக்குப்பின் திமுக தலைமைக்கு வந்த கலைஞர், தனது பேச்சாற்றல், அரசியல் செயல்பாடுகள், இலக்கிய ஆளுமை ஆகியவற்றால், அண்ணாவின் இடத்தைக் கைப்பற்றிவிட்டார். எனினும் கலைஞருக்கு எதிரணி என்பது முணுமுணுப்பாகவே இருந்துவந்தது. அதனை வலுவான அணியாக மாற்றியவர் எம்.ஜி.ஆர். அப்போதிருந்தே கலைஞர் Vs எம்.ஜி.ஆர் என்பதே தமிழகத்தின் அரசியலானது.

கலைஞரின் அரசியலைப் பிடித்தவர்கள் கலைஞர் பக்கமும், பிடிக்காதவர்கள் எம்.ஜி.ஆர் பக்கமும் நின்றார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் கலைஞர் எதிர்ப்பரசியலை ஜெயலலிதா வலுவாக முன்னெடுத்ததால் அவர்பின்னால் கலைஞர் எதிர்ப்பாளர்கள் திரண்டார்கள். அவருக்குப்பின்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அந்த அரசியலைச் செய்வதால் கலைஞர் எதிர்ப்பாளர்கள் அவரை ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்துவதை கண்துடைப்பாக இன்றைய அதிமுக அரசு செய்வது தெரிந்தும்கூட அதிமுக அரசை ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதா மீதான பற்றைவிட திமுக மீதான எதிர்ப்புதான் இங்கே பிரதானமாகிறது. தற்போது சசிகலாவும்கூட அதைப் புரிந்துதான் திமுகவை பொது எதிரி என்கிறார். இவர்களோடு பாஜகவும் இணைந்து திமுகவை எதிர்ப்பதாகக் காட்டுவதன்மூலம் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களைப் பங்குபோடுவதில் பாஜகவும் தீவிரமாக உள்ளது. இத்தகைய சூழலை மேம்போக்காகப் பார்க்கும்போது திமுகவை பலவீனப்படுத்தியதுபோல தெரியும். ஆனால் இங்கே திமுக வலுவாகவும், அதிமுக பலவீனமாகவும் உள்ளது. அதிமுகவோடு இணைந்து, அதிமுகவைப் பலவீனப்படுத்துவதே இந்த தேர்தலில் பாஜகவின் மறைமுக அஜெண்டா. நிதீஷ்குமார் தான் பாஜகவின் துரோக அரசியலுக்கு வாழும் உதாரணம். அடுத்த 2026 தேர்தலில், தேர்தல் களத்தை பாஜக vs திமுக என மாற்ற நினைக்கிறது.

கலைஞர் மறைவுக்குப்பின் திமுக பலவீனமடைந்திருப்பது உண்மை தான். கலைஞரின் அரசியல், பேச்சாற்றல், வயது அனுபவம், ஞாபகசக்தி என அனைத்தும் ஸ்டாலினுக்கு மிஸ்ஸிங் தான். ஆனால் திமுகவின் தற்போதைய பலமே, அதிமுகவை எதிர்ப்பதோடு, இந்தியாவே அஞ்சக்கூடிய மோடியின் அதிகார பலத்தை எதிர்த்து நிற்கும் துணிவு தான். திமுகவை வீழ்த்துவதற்கும் 2ஜி கேஸை தூசிதட்டி மேல்முறையீடு செய்தார்கள். கடந்த நவம்பரிலேயே தீர்ப்பு வர நிர்ப்பந்தம் செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் திமுக எதிர்கொண்டது. அடுத்ததாக, கூட்டணிக்கட்சிகளை அரவணைக்கும் பக்குவம் தற்போது ஸ்டாலினின் பலமாக உள்ளது. அதன்மூலம், மோடியை எதிர்க்கும் வலுவான மாநிலம் தமிழகம் என்பதை நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்தார்.

தற்போது வரவுள்ள தேர்தலிலும் திமுக வெற்றிக்கு அருகிலேயேதான் உள்ளது. வெற்றி சதவிகிதத்தை அதிகரிக்கும் செயலிலும் இறங்கியுள்ளது. அப்படியே வெற்றிபெற்றாலும் அடுத்த ஐந்தாண்டுகால ஆட்சியை எப்படி ஸ்டாலின் முன்னெடுப்பார் என்பதில்தான் திமுகவின் எதிர்காலம் உள்ளது. திமுகவின் பலவீனமான, வலுக்கட்டாயமாக வாரிசை முன்னிறுத்தும் அரசியலைத் தாண்டி, எப்படி மக்கள் மனதைத் தொடர்ந்து வெல்லும் என்பதற்கான பதில் திமுகவிடம் தான் உள்ளது. சிறந்த பேச்சாளரான ஆ.ராசாவை தற்போது முன்னிறுத்துவதுபோல அடுத்தகட்டத் தலைவர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், மாதம் ஒரு பாதயாத்திரை என்று ‘மக்களுக்கான’ அரசியலை தமிழக பாஜக முன்னெடுக்கும். அதையும் எதிர்கொள்ள வேண்டும். இதைத்தாண்டி, திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ற இடத்தைப் பிடிக்கும் வலுவான கட்சி அடுத்த 2026 தேர்தலில் வருமா என்பதைக் காலம்தான் சொல்லும்!

No description available.

– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More