Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பொருட்டாகுமா போராட்டங்கள் | ஆர்.ராம்

பொருட்டாகுமா போராட்டங்கள் | ஆர்.ராம்

5 minutes read

கட்டுரையாளர் – ஆர்.ராம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பிலான தனது மீளாய்வு அறிக்கையை உத்தியோக பூர்வமாக சமர்ப்பித்து விட்டார். 

அதிகாரவரம்பின் அதியுச்ச எல்லைக்குச் சென்றுள்ள அவர் இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை வெளிப்படுத்தி ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் 47 உறுப்பு நாடுகளிடத்திலும் கையேந்தி நிற்கின்றார். 

ஆனால் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ‘தேச நன்மை, தேசிய நன்மை’ என்ற வட்டத்துக்குள்ளேயே நின்று கொண்டு சுழன்று கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னுரிமை அளித்து தான் அவற்றின் தீர்மானங்களும், செயற்பாடுகளும் காணப்படுகின்றன. 

இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இம்முறை பிரேரணையைக் கொண்டு வரும் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் தற்போது பூச்சிய வரைவொன்றை முன்வைத்துள்ளன. அந்த வரைவின் உள்ளடக்கம் வெளிப்பட்டும் விட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மீளப்பெற்று அதனை மீண்டும் ஐ.நா.செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸிடம் பாரப்படுத்துமாறு, நீதிகோரும் மக்களின் பிரதிநிதிகளும், சிவில் அமைப்பினரும் எழுத்து மூலமான கோரிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டாகிவிட்டது.

ஏறக்குறைய ஒட்டுமொத்தமான பாதிக்கப்பட்ட தரப்புமே ஒன்றிணைந்து தமக்கான பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா.மனித உரிமைகள் அரங்கிலிருந்து அகற்றுமாறு கூறியாகிவிட்டது. ஆனால் ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் அதற்கு தயாராக இல்லை. அவை இந்த விடயமானது தொடர்ந்தும் தமது ‘பிடிக்குள்’ இருக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாக உள்ளன.

அதற்காகத்தான் ‘இலங்கையின் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தினையும்’ வலியுறுத்தும் வகையில் ‘மிக வலுக்குறைந்த உள்ளடக்கங்களுடனும்’ அவற்றை நடைமுறைப்படுத்துவற்காக ‘இரண்டு வருடங்கள் அவகாசம்’ வழங்கும் வகையிலான பூச்சிய வரைவை தயாரித்திருக்கின்றன. 

இந்தப் பூச்சிய வரைவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தவிர வேறெந்தவொரு தரப்பினரும் ஏற்றுக்கொள்வதாக இதுவரையில் அறிவிக்கவில்லை. இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி அனுப்பிய எழுத்துமூல ஆவணத்தில் கையொப்பமிட்ட தரப்புக்களில் முதலிடத்தில் இருப்பது கூட்டமைப்புத் தான். 

அத்தகைய தரப்பு முன்வைக்கப்பட்டுள்ள நலிவடைந்த பூச்சிய வரைவுக்கு வரவேற்பளித்திருக்கின்றது. 15 அவதானிப்புக்களுக்கும் 16 பரிந்துரைகளுக்கும் ‘பொருள்கோடல்’ அடிப்படையில் தான் வரவேற்பளிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. கூட்டமைப்பு என்பது தெளிவு.

கூட்டமைப்பு தவிர்ந்த அரசியல் மற்றும் சிவில் தரப்புக்களும், பாதிக்கப்பட்ட தரப்புக்களும் பூச்சிய வரைவினை ஏற்றுக்கொள்வதற்கு தாயாரில்லை. அது அவ்வாறே நிறைவேற்றப்பட்டு விடக்கூடாது என்பதிலும் மேலும் மேம்பட்டதொன்றாகவே நிறைவேற்றப்பட  வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. 

கொரோனா தொற்றின் ஆபத்தால் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் உட்பட ஏனைய தரப்புகளுக்கு இம்முறை ஜெனிவா அரங்கிற்கு நேரில் செல்ல முடியாத நிலைமை காணப்படுவது துரதிஷ்டவசம் தான். 

மறுபுறத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தையும் அதனை வலுப்படுத்தும் 34/1,40/1 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ராஜபக்ஷ அரசாங்கம் அறிவித்தாகிவிட்டது. அத்துடன் ஐ.நா.உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் விடயப்பரப்புக்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும் ராஜபக்ஷ அரசாங்கம் 30 பக்கங்களில் காட்டமான விமர்சன பதிலளிப்பைச் செய்துவிட்டது. 

தற்போது, முன்மொழியப்பட்ட பூச்சி வரைவை முழுமையாக தோவ்வி அடையச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு வரும் ராஜபக்ஷ அரசாங்கம் அம்முயற்சி சறுக்கினால் அந்த வரைவின் சில பந்திகளை நீக்கி மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்கான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுத்து வருகின்றது.

இந்தப் பின்னணியில், கடந்த மாதம் 27ஆம் திகதி, பிரித்தானியா தலைமையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை உருவாக்குதல் உள்ளிட்ட நான்கு விடயங்களை கட்டாயமாக உள்ளடக்க கோரி சாகும் வரையிலான போராட்டத்தினை இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பதற்கான சர்வதேச மையதத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான அம்பிகை செல்வகுமார் ஆரம்பித்திருந்தார்.

தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் பிரித்தானிய மண்ணில் பசித்திருந்து அம்பிகை செல்வகுமார் தொடுத்திருக்கும் அறப்போர் ஒருவாரத்தினை கடந்து விட்டது. மனித மாண்பியங்களின் உச்சமானவர்கள் என்று மார்பு தட்டும் பிரித்தானியாவின் ஆட்சியாளர்கள் இதுவரையில் இப்போராட்டத்தினை தடுத்து நிறுத்தவும் இல்லை. பெருட்டாக கருதவுமில்லை. பிரதிபலிக்கவுமில்லை. இவ்விதமான நிலைமை வல்லரசான பிரித்தானியாவின் பலவீனம் தான்.

அதேநேரம், அம்பிக்கை செல்வகுமாரும், பிரித்தானிய அரசாங்கம் தனது கோரிக்கைகளில் ஆகக்குறைந்தது ஒன்றையாவது நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்படும் பட்சத்திலேயே தன்னுடைய போராட்டம் கைவிடப்படும் என்று உறுதியாக கூறிவிட்டார். ஆனால் போராட்டத்தின் ஏழாம் நாளைக் கடந்தபோதே அவரின் உடல்நிலை சோர்ந்து விட்டது. 

அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திற்கு சமாந்தரமாகவும், இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் யாழ்.நல்லூரில் கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் பல்கலைக்கழ மாணவர்கள், மதகுருமார்கள் உள்ளடங்கலாக ஐவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். 

அதேபோன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் கடந்த புதன்கிழமை முதல் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 

இதனைவிடவும், வடகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் வெவ்வேறு பொறுப்புக் கூறலையும், நீதிக்கோரிக்கையையும் முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களின் கோரிக்கைகள் ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தின் செவிப்பறைகளை அடையப்போவதில்லை என்பது நிச்சயமானது. உள்நாட்டில் உள்ள சர்வதேச, பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் செவிப்பறைகளையே சென்றடைவதற்கான வாய்ப்புக்களே அதிகமிருக்கின்றன. ஆனால் தற்போது வரையில் போராட்டங்களுக்குச் சதகமான பிரதிபலிப்புக்கள் எவையும் வெளிப்படவில்லை. 

உள்நாட்டில் சர்வதேச, பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் பிரதிபலிப்புக்கள் வெளிப்படாது விட்டாலும் ஆகக்குறைந்தது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை மேலும் வலுப்படுத்தும் அமர்வுகளிலும், பிரேரணை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பின்போதும் பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்கு சார்பாக வெளிப்படுமா என்பதே தற்போதுள்ள பெருங்கேள்வி. 

புதிய அரசியலமைப்பினை இலங்கை அரசாங்கம் உருவாக்கும்போது, 13ஆவது திருத்தச்சட்டமும் அதன் வழி பிறந்த மாகாண சபை முறைகளும் நிச்சயமாக கைகழுவப்படும் என்பதை உணர்ந்த இந்தியா ‘இலங்கையில் தன்னிலையை தக்கவைப்பதற்காக’ ஐ.நா.பிரேரணையில் அதனை உள்ளடக்கியுள்ளது. 

அவ்வாறாயின் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இந்தியாவால் ‘ஐ.நா.வில் நடுநிலை’ என்பதற்கு அப்பால் சிந்திப்பதில் எவ்விதமான சிக்கல்களும் இருக்காது. தமிழின விடுதலையில் தியாகங்களும் உயிரிழப்புக்களும் ஏராளமானவை. அதிலும் அன்னைபூபதி, திலீபன் போன்றவர்களின் அறப்போரின் வீரியமும், தாக்கமும் அபரிமிதமானது. ஆனால் அந்தப்போராட்டங்களும் பிராந்திய, சர்வதேச தரப்புக்களால் கண்டு கொள்ளப்படவில்லை. அந்தப்பழியை அத்தரப்பினர் இன்று வரையில் சுமக்கின்றன.

தற்போதும்கூட ‘நாடொன்றின் இறைமை’ என்ற பெயரில் தான்  இந்தியா உள்ளிட்ட தரப்புக்கள் தங்களின் ‘கனவான் இராஜதந்திர மூலோபாய இருதரப்பு உறவுகளை’ மேலும் செழுமைப்படுத்துவதிலேயே அதீத கரிசனையைக் கொள்கின்றன. 

இவ்விதமான நிலைமை தொடருமாயின் பாதிக்கப்பட்ட நீதி தேடும் மக்கள் அந்தந்த நாடுகளின் மீது கொண்டிருக்கும் அபிமானத்தினையும், நம்பிக்கையையும் முற்றாக இழக்கச் செய்யும். மேலும் போராட்டாங்களில் ஈடுபட்டவர்களின் நிலைமைகள் கவலைக்கிடமானால் மற்றுமொரு வரலாற்றுப் பழியை சுமக்க வேண்டிய உலகம் சுமக்கத் தலைப்படும்.

நன்றி: வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More