Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மரியதாஸனால் மாண்புறும் ‘மண்ணின் மைந்தன்’ விருது. | எஸ். சிறீதரன்

மரியதாஸனால் மாண்புறும் ‘மண்ணின் மைந்தன்’ விருது. | எஸ். சிறீதரன்

3 minutes read

கிளிநொச்சி மாவட்டத்தின் ஆசிரியத்துவத்துக்கான அடையாளமாக விளங்கும், எனது மதிப்பார்ந்த ஆசான் திரு.எட்வேட் மரியதாஸன் அவர்களுக்கு, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (முஐடுஐ PநுழுPடுநு) பிரித்தானியக் கிளையினரால் “மண்ணின் மைந்தன்” விருது வழங்கப்படுவதையிட்டு, அவரால் உருவாக்கப்பட்ட மாணவனாக நான் மகிழ்வும், மனநிறைவும் அடைகிறேன்.

கிளி/வட்டக்கச்சி மத்திய கல்லூரி, கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில், நீண்டகாலம் கணிதபாட ஆசிரியராக கடமையாற்றிய இவர்தான், நான் உள்ளிட்ட ஒரு பெரும் மாணவ சமுதாயத்தின் முன்மாதிரி. கற்பித்தல் என்கின்ற தனது கடமையைத் தாண்டி மாணவர்களின் நடை, உடை, பாவனையில் கவனமும், கண்டிப்பும் மிக்கவராக இருந்த அவர் இட்ட அடித்தளம்தான், அவரிடம் கற்ற மாணவர்கள் அனைவரும் தனிமனித ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்களாக இன்றளவும் இருப்பதற்குக் காரணம்.

தனியார் கல்வி நிலையங்கள் தோற்றம் பெற்றிருக்காத எண்பதுகளின் முற்பகுதியில், சரியாக காலை.6.00 மணிக்கு அவரது கணிதபாட வகுப்பு பாடசாலையில் நடைபெறும். அச்சொட்டாய் அந்த நேரத்திற்கு வருகைதரும் அவரது பணி ஆர்வம், தனது மாணவர்களை அவர்களது பெற்றோரின் பெயர்சொல்லி அழைக்குமளவுக்கு மாணவர்களின் பெற்றோரோடு அவர் கொண்டிருந்த இடைத்தொடர்பு, அவரது கற்பித்தல் பாங்கு, மாணவர்களின் ஆடை அணிதல் முதல் சிகையலங்காரம் வரை அவர் கொண்டிருந்த கண்டிப்புடன் கூடிய கரிசனை என்பவை, கல்விப்புலத்தினுள் ஆசிரியர்களாக நுழைந்த என்போன்ற பலருக்கும் வழிகாட்டியது என்றால் அது மிகையல்ல.

ஆசிரியப்பணிக்கு அப்பால், மிகச்சிறந்த கலைஞனாக, நாடக நடிகனாக, பயிற்றுவிப்பாளராக, அறிவிப்பாளராக என அவருக்கிருந்த பல்துறைசார் கலையுணர்வின் வெளிப்பாடு தான், இந்த மாவட்டத்தின் கலை, பண்பாட்டு, விழுமியங்களைக் கட்டிக்காக்கும் நீண்டகால இலக்கோடு உருவாக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட கலை, பண்பாட்டுக்கழகத்தின் முதலாவது அதிபராக அவரை அலங்கரித்திருந்தது. அந்த நிறுவனத்தின் அதிபராகப் பதவியேற்ற பின்னர் 1990ஆம் ஆண்டு, மருதநகர் உதயதாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற தியாகத்தின் தாய், அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளை கலை, பண்பாட்டு நிகழ்வுகளோடு இணைந்த எழுச்சிமிகு நினைவேந்தலாக நிகழ்த்திக்காட்டியிருந்தமை அவரது ஆளுமை வெளிப்பாட்டின் வடிவமே ஆகும்.

இதுதவிர கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் தடவையாக உள்ளீர்க்கப்பட்ட பயிலுனர் ஆசிரியர்களுக்கான தொலைக்கல்விப் பிரிவின் சிரேஸ்ட போதனாசிரியராக இருந்து, அவர் இந்த மாவட்டத்தின் ஆசிரிய வள உருவாக்கத்துக்காக ஆற்றிய பணி காலம்கடந்தும் போற்றுதற்குரியதே!. இந்த மாவட்டத்தின் கல்விச் சரித்திரத்தில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரனான அவர் தான், கிளிநொச்சியில் ‘விஞ்ஞானக் கல்வி நிலையத்தை’ உருவாக்குவதற்கும் காரணமானவர். ஆசிரிய வளங்களுக்கான மட்டுப்பாடு மிகுந்திருந்த அன்றைய காலச்சூழலில் உயர்தரம் கற்கும், இந்த மாவட்ட மாணவர்கள் அல்லற்படக்கூடாது என்ற குறிக்கோளோடு, யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பல பிரபல உயர்தர ஆசிரியர்களை கிளிநொச்சிக்கு அழைத்து முதன்முதலில் பிரத்தியேக வகுப்புக்களை ஏற்படுத்தித்தந்த பெருமையும் அவரையே சாரும்.

குருகுலம் சைவச்சிறுவர் இல்லத்திலிருந்து உயர்தரம் கற்ற எனது குடும்ப நிலையறிந்து, விஞ்ஞானக் கல்வி நிலையத்தில் உயர்தரம் முழுமைக்கும் இலவசமாகக் கற்பதற்குரிய அனுமதியைப் பெற்றுத்தந்து, தன் தோற்றம், தனிமனித ஒழுக்கம், சிந்தனை, செயல், நன்னடத்தை என்பவற்றால் என் மனமெங்கும் நீங்கா இடம்பிடித்த மரியதாஸ் சேரால் தான், நான் அறிவுலகினுள் நுழைவதற்கான கதவு அகலத் திறக்கப்பட்டது என்பதையும், இன்றிருக்கும் என் நிலைக்கு அடித்தளமிட்டது அவரே என்பதையும் என்றென்றைக்கும் நன்றியோடு நினைவிற்கொள்வதில் அவரின் மாணவனாக நான் பெருமிதம் அடைகிறேன்.
‘ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’ என்ற திருக்குறள்தான் அவர் வாழ்வின் குறிக்கோளாய் இருந்தது. தன் மாணவர்கள் ஒவ்வொருவரையும் அந்தக் குறளின்வழி வழிநடாத்த விளைந்த அவர், அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

அணைக்குமிடத்தில் அணைத்து, அடித்துத் திருத்த வேண்டிய இடங்களில் அவர்காட்டிய கண்டிப்பும், தண்டிப்பும்தான் பின்வந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தவறுகளைத் தவிர்ப்பதற்கு எம்மைத் தயார்ப்படுத்தியிருக்கிறது.

மரியதாஸ் சேரின் மகத்துவமான இக் கல்விப் பணிக்குச் சாட்சியமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கருவாகி, உருவாகி நிற்கும் எண்ணிலடங்கா மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், துறைசார் தொழில்முனைவோர், மக்கள் பிரதிநிதிகள் என்ற சமூக அந்தஸ்துள்ள மாணவர் அணியொன்று உருவாகி நிற்பதென்பது எந்த அளவுக்கு பெருமை தருகிறதோ, அதைவிட பன்மடங்கு பெருமைக்குரிய விடயம், மரியதாஸ் சேர் எனும் மாண்புறு சிற்பியால், அவரது மாணவர்கள் அனைவரும் தமது சமூகத்தையும், சக மனிதர்களையும் நேசிக்கின்ற ‘மனிதம் நிறைந்த மனிதர்களாக’ செதுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான்.

இவற்றுக்கு அப்பால், இந்த மண்ணின் விடுதலை என்னும் சத்திய இலட்சியத்துக்காக முன்னெடுக்கப்பட்ட இனவிடுதலைப் போராட்டத்தையும், தமிழினத் தலைவரையும் மானசீகமாக நேசித்த இவரிடம் கற்றுத்தேர்ந்த பலநூற்றுக்கணக்கான மாணவர்கள், இந்த மண்ணையும் மக்களையும் இதயசுத்தியோடு நேசித்து அதற்காக தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் துறந்த மாவீரர்களாயும், போராளிகளாயும் மாறியிருந்தார்கள் என்பதும் மரியதாஸ் சேரின் வாழ்க்கைப் புத்தகத்தில் கனதியும், காத்திரமும் மிக்க பக்கங்கள்.

‘சில விருதுகளால் மனிதர்கள் பெருமைப்படுத்தப்படுவதும், சில மனிதர்களால் விருதுகள் பெருமைப்படும் வரலாறுகளும் உண்டு’ அந்தவகையில், மாசற்ற மனிதன், மகத்துவம் நிறை ஆசான் திரு.எட்வேட் மரியதாஸன் அவர்களுக்கு “மண்ணின் மைந்தன்” விருதை வழங்கிவைப்பதால், கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (முஐடுஐ PநுழுPடுநு) பிரித்தானியக் கிளைக்கும், அந்த விருதுக்கும் பெருமை கிடைத்திருக்கிறது.

பல தசாப்தங்களைக் கடந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் ஓர் ஆசிரியராக, அதிபராக, கணிதபாட ஆசிரிய ஆலோசகராக என பல்வேறு பரிமாணங்களில் கருத்தொன்றிக் கல்விப் பணியாற்றி, அன்றும், இன்றும், என்றும் ஆசிரியத்துவத்தின் அடையாளமாகச் சுட்டிச் சொல்லத்தக்க ஆளுமையாக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து, எம் எல்லோர் மனங்களிலும் மானசீக குருவாக இருந்து இன்றளவும் எம்மை வழிநடாத்துவதற்கான கௌரவமாக ‘மண்ணின் மைந்தன்’ விருதைப்பெறும் மதிப்பார்ந்த ஆசானுக்கு இந்த மாணவனின் மனம்நிறைந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

“பண்புடையார ; பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்” (குறள்.996)

சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More