இராணுவ ஆட்சியின் விளைவு | வறுமையில் வாடும் வடகொரியா

ஐங்கரன் விக்கினேஸ்வரா

“அமெரிக்காவுக்கு எதிராக அணுவாயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது” என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் உன் தலைநகர் பியோங்யாங்கில் அதிரடியாக கூறினார்.

கொரிய போரின் 69ஆவது ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கூற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். 

“போர் நடைபெற்று 70ஆண்டுகளுக்கு பின்னரும் தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஆபத்து நிறைந்த, சட்டவிரோத பகைமை விளைவிக்கும் செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா தனது செயல்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் வடகொரியாவை அச்சுறுத்த முயற்சிக்கிறது” என்றும் கிம் ஜொங் குறிப்பிட்டிருக்க தவறவில்லை.

அதுமட்டுமன்றி “அமெரிக்காவுடனான மோதல் போக்கு அணுவாயுத ஆபத்துகளை உருவாக்கி விட்டது. சுய பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை வடகொரியா எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டது எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள எங்களுடைய ஆயுதப்படைகள் முழு அளவில் தயாராக உள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அணுவாயுத சோதனை 

கிம் ஜொங் உன் வடகொரியாவின் ஜனாதிபதியாக 2011ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணுவாயுதங்களை அந்நாடு பரிசோதித்து வந்தது. 

இந்நிலையில் தற்போது வடகொரியா தன்னை அணுவாயுத நாடாக அறிவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளதாக அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. கடந்த வாரம் தெரிவித்துள்ளது.

தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவதற்காக அணுவாயுதத் தாக்குதலை மேற்கொள்வதை நாடு அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

நீண்ட கால ஆராய்ச்சி

1990 களின் ஆரம்பத்தில் வட கொரியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, அமெரிக்கா, வட, தென் கொரியாக்களை இணைத்து ஒத்துழைப்புக்களைச் செய்வதற்கு நடவடிக்களை முன்னெடுத்தபோதும் ஏமாற்றமே எஞ்சியது. 

எனினும் வட கொரியா பொலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வழக்கமான ஆயுதங்களை தொடர்ச்சியாக பரிசோதித்து வந்தமையால் அச்செயற்பாடு தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு வெளிப்படையான அச்சுறுத்தலாக உருவெடுத்தது.

1992ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வடகொரியா, ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஆணையகத்துடன் அணுவாயுதங்களை பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பின்னர், 1998 ஆம் ஆண்டில், வடகொரியா கும்காங்-ஆரில் புதிய மையத்தில் அணுசக்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக வெளிப்படையாக அறிவித்தது.  

ஏகநேரத்தில், ஐ.நா.சபை, வட கொரியா அணுவாயுதங்களை அபிவிருத்தி செய்வதற்காக அதன் அணுசக்தி திட்டத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், முக்கிய அணுசக்தி ஆராய்ச்சிக்கான வழக்கமான பரிசோதனையை அனுமதிப்பதற்கும் ஐ.நா. இணங்கியது. 

கூட்டுப்பிரகடனம் 

அதேநேரம், 1992ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வட கொரியாவும் தென்கொரியாவும் கொரிய தீபகற்பத்தின் அணுசக்தி கூட்டுப்பிரகடனத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் அணுசக்தியை சமாதான நோக்கங்களுக்காக பயன்படுத்த ஒப்புக்கொண்டன. 

இதனையடுத்து, வட, தென் கொரியாக்களுக்கு இடையில் ஜூன் 1993இல், இரு நாடுகளுக்கிடையில் பதற்றங்கள் அதிகரித்தன. வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒருவருக்கொருவர் இறையாண்மைக்கு மரியாதை கொடுக்கவும், ஒருவருக்கொருவர் உள்நாட்டு கொள்கையில் தலையிடக் கூடாது என்றும் குறிப்பிட்டு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.

1994ஆம் ஆண்டு மே மாதம் ஐ.நா.பொருளாதாரத்தடைகளைக் விதித்தமையால் வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிற்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்டது. இதன் பின் ஜூன் 1994இல், முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் வடகொரியாவிற்கு பயணித்து, அப்போதைய ஜனாதிபதி கிம் இல் சுங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2003 முதல் 2007 வரை நடத்தப்பட்ட ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது எரிபொருள் உதவிகளை வழங்குதல் அமெரிக்க மற்றும் ஜப்பானுடனான உறவுகளை இயல்பாக்குதல், அணுசக்தி நிலையங்களை மூடுதல் ஆகியவற்றுக்கு இருதரப்பிலும் உடன்படபாடுகள் எட்டப்பட்டன. 

எனினும் பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து இருந்தமையால் வடகொரிய அரசு 2006-2017வரையான காலத்தில் ஆறு அணுவாயுத சோதனைகளை நடத்தியது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை மீறும் வகையிலும், அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும், அமெரிக்க நிலப்பரப்புக்குள் தாக்குதல் அளவுக்கும் இந்தப் பரிசோதனைகள் இருந்தன. 

2019ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இரண்டு முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அது ஆக்கபூர்வமாக அமையாததால் தொடர்ந்து நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டது.

இந்நிலையில் தற்போது ஜோ பைடன் நிருவாகம் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தாலும், கிம் ஜொங் உன் அதனை ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியாதுள்ளது. அதுமட்டுமன்றி தற்போது வரையில் அவரைத் தொடர்புகொள்வதற்காக வெள்ளைமாளிகை எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அதேநேரம், கடந்த ஆண்டு அமெரிக்கா தனது வடகொரியா தொடர்பான  கொள்கையை மீளாய்வு செய்திருந்தது. கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுத ஒழிப்பே இலக்கு என்று மீண்டும் வலியுறுத்தியது.

இராஜதந்திர ரீதியாகவும், கடுமையான தடைகள் ஊடாகவும் அணுவாயுத ஒழிப்பை தொடருவேன் என்கிறார் ஜோ பைடன். ஆனால் தனது நாடு பேச்சு வார்த்தைக்கும், போருக்கும்; தயாராக உள்ளது என்கிறார் கிம் ஜொங் உன். 

மேலும் வட கொரியாவின் தற்போதைய அணுவாயுதத் திட்டத்தின் நோக்கம், பசுபிக் முதல் அமெரிக்க பிராந்தியங்களான குவாம் மற்றும் ஹவாய் புரதேசங்களை தாக்கவல்ல அணுவாயுதங்களை பரிசோதிப்பதாகும்.

வாட்டும் வறுமை

இந்நிலையில், வடகொரியாவில் கொரியப்போரின் பின்னர் 1950களில் விவசாயத்துறையில் அமுல்படுத்தப்பட்ட கூட்டுச்சமத்துவ முறையால் உணவுப்பங்கீடு முறையானது எதிர்பார்த்த பலனைத்தரவில்லை.  மலைப்பாங்கான வடகொரிய நாட்டில் 18சதவீதமான நிலமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்கின்றது.

அத்துடன் அங்கு, மின்சக்தி மற்றும் உரப்பற்றாக்குறைப் பிரச்சினைகளும் உள்ளன. அது தவிர, வறட்சியும் வெள்ளமும் ஏட்டிக்குப்போட்டியாக தாக்குகின்றன. இதனால் 1990இல் வடகொரியா கடுமையான பஞ்சத்திற்கு உள்ளானது. இதனால் 20இலட்சம் பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2கோடியே 30 இலட்சம் மக்களைக் கொண்டுள்ள அந்நாட்டிற்கு 50இலட்சம் தொன் அரிசியும் தானியங்களும் தேவைப்படுகின்றன. விவசாய விளைச்சல் நுகர்வை விடவும் மிகவும் குறைவாகவே உள்ளது.

எனினும், வடகொரியா தொடாந்து ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தியது. இதனால், நட்புறவு ரீதியாக ஐந்து இலட்சம் தொன் உணவுப்பொருட்களை வழங்குவதற்கு முன்வந்திருந்த தென்கொரியா பின்னர் தனது முடிவை மாற்றியது.

இந்நிலையில், 1995இலிருந்து வடகொரியாவில் ஐ.நா.வின் உலக உணவுச் செயற்திட்டம் பணியாற்றிவருகிறது. அதன்மூலமாக, 13ஆட்சி மாகாணங்களில் 19இலட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகின்றது.

யுனிசெப் மேற்கொண்ட ஆய்வொன்றின்படி சுமார் 40சதவீதமான குழந்தைகளும் 30சதவீதமான தாய்மார்களும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, தென் கொரியாவில் இருப்பவர்கள், வட கொரியாவில் உள்ள தங்கள் உறவினர்கள் பசியோடு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். குளிர்காலம் நெருங்க நெருங்க, விளிம்பு நிலையில் உள்ள மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் எழுந்துள்ளது.

வடகொரியாவின் தெருக்களில் அதிகம் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பதாகவும் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. 

அத்துடன் வட கொரியாவில் உள்ள அடித்தட்டு மக்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்ததை விட உணவுத் தட்டுப்பாடு மோசமாக இருப்பதாகவும் கொரோனா இந்த சூழலை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

1990இல் ‘கடினமான மார்ச்’ என்று அழைக்கப்பட்ட பேரிடரோடு இதை ஒப்பிடுகிறார் கிம் ஜாங் உன். அந்தப் பஞ்ச காலத்தில் இலட்சக்கணக்கானோர் பட்டினியால் இறந்தார்கள். அதேவேளை இயற்கையின் சீற்றமாகவும் பாதிப்புக்கள் காணப்படுகின்றன. 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அதிகப் புயல்கள் வீசின. கடலோரப் பகுதிகள் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிஉலகத்தோடு வடகொரியா மக்கள் தொடர்பில் இல்லாமையாலும், ஏற்கனவே நலிவடைந்தும் அம்மக்கள் இருப்பதால் அவர்கள் பாதிக்கப்படுவதை வடகொரியாவால் தனியாக சமாளிக்க முடியாது என்பதும் உண்மையே.

எனினும், வடகொரியா தொடர்ச்சியாக  அணுவாயுதச் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் அதன் உணவுப் பிரச்சினை பற்றி உலக நாடுகள் கரிசனை கொள்வதாக இல்லை.

நன்றி – வீரகேசரி

ஆசிரியர்