கிளிநொச்சியில் சோழர்காலச் சிவன்கோயிலின் நிலை

கிளிநொச்சியில் காணப்படும் தமிழரின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற சிந்தனையும் அவாவும் அந்த மண்ணை நேசிக்கின்ற அனைவருக்கும் உண்டு.

கிளிநொச்சியின் பூநகரிப் பிரதேசத்தில் காணப்படும் மண்ணித்தலைச் சிவன் ஆலயம் கி.பி 9ம் 10ம் நூற்றாண்டுகளில் சோழர்களால் கட்டப்பட்டது என்பது வரலாறு. ஆனால் அந்த வரலாறு துடைத்தழிக்கப்படுவதற்கு முன்னர் நம்மவரின் விழிப்புணர்வின் பயனாக தமிழர் மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்த வழிவகுத்தது. ஆனாலும் அந்த ஆலயம் சிதைந்த வண்ணம் இருக்கின்றது.

உரிய பாதுகாப்பும் வளப்படுத்தலும் தேவையாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஆலயத்தின் ஆவுடையார் சிலையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் போல் உள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையமானது கூடுதல் கவனம் எடுத்து வடக்கில் காணப்படும் சுமார் 700 தமிழர் மரபுரிமைச் சின்னங்களைப் பட்டியலிட்டுள்ளதுடன் தொல்லியல்த் திணைக்களத்துடன் இணைந்து அவற்றைத் தமிழர் மரபுரிமைச் சின்னங்களாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் நாம் ஒவ்வொருவரும் இந்த விடையத்தில் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும்.

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களினதும், செயலாளர் ரமேஷ் மற்றும் யாழ் தொல்லியல் திணைக்கள அதிகாரியும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினருமான கபிலன் ஆகியோரினதும் வேண்டுதலுடன் கிளி மக்கள் மைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சதானந்தன், கிளி மக்கள் அமைப்பின் தோற்றுவாய் உறுப்பினர் விஜயராஜா ஆகியோர் கரைச்சிப் பிரதேசசபை தலைவர் வேழமாலிதன் அவர்களின் உதவியுடன் மண்ணித்தலை சென்று அப்பிரதேசத்தையும் சோழரால் கட்டப்பட்ட சிவன் ஆலயத்தையும் பார்வையிட்டனர்.

கிளிநொச்சியில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழர் வாழ்ந்ததுக்கான ஆதாரம். அதனை மேலும் அழிய விடாது பாதுகாப்பது நம் அனைவரதும் கடமையாகும்.

ஆசிரியர்