Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை விடுதலைப் புலிகள் உலகில் ஒழுக்கமான இயக்கம் | சிங்கள தேசம் ஏற்கிறது

விடுதலைப் புலிகள் உலகில் ஒழுக்கமான இயக்கம் | சிங்கள தேசம் ஏற்கிறது

3 minutes read

அவதானிப்பு மையம்  பெருமிதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் உலகின் தலைசிறந்த இயக்கம் என்பதை சிங்கள தேசம் ஏற்கத் துவங்கிவிட்டது என்று தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், விடுதலைப் புலிகள் சாத்தியப்படுத்திய குற்றமற்ற தேசம் உலகிற்கே முன்னூதாரணமானது என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஸ்ரீலங்காவில் போராளிகளுக்கு புகழாரம்

“ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் கடந்த 23.11.2022 அன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அவர்கள், உலகில் ஒழுகத்தில் தலைசிறந்த இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கியுள்ளனர் என கூறியிருப்பது எதிரிகளாலும் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் விதந்து போற்றும் நிலையில் உள்ளமைக்கு தக்க சான்றாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மது மற்றும் ரௌடிசத்திற்கு எதிராக இருந்த  வலுவான ஒழுக்க நிலையை ஸ்ரீலங்காவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பாராட்டி இருப்பது தமிழர் தேசத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள ஒழுக்க மதிப்பை எதிரிகளாலும் கொச்சைப்படுத்த முடியாது என்பதை காலம் நிரூபித்துள்ளமையின் வெளிப்பாடாக நாம் கருதுகிறோம்.

பிரபாகரனும் புதிய தலைமுறையும்

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை உலகத் தமிழ் மக்கள் நேற்றைய தினம் நவம்பர் 26ஆம் திகதி கொண்டாடியுள்ளனர். ஸ்ரீலங்கா அரசு தலைவர் பிரபாகரன் பற்றிய நினைவுகளை தடை செய்ய முற்பட்ட போதும் மக்கள் பிரபாகரனின் பிறந்த தினத்தை உணர்வெழுச்சியுடன் அனுஸ்டித்தனர்.

சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் ஊடகங்களின் வாயிலாக குறிப்பாக இளைய தலைமுறையினர் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை எழுச்சிகரமாக்கியுள்ளனர். நவீன சமூக வலைத்தளங்களில் பெருமளவுக்கு முன்னெடுக்கப்பட்ட தலைவர் பிரபாகரனின் பிறந்த தின நிகழ்வுகள், காலத்தை கடந்தும் புதிய தலைமுறையினர் மத்தியிலும் வெகு வீச்சுடன் சிந்தனை எழுச்சியை ஏற்படுத்தியமையின் அடையாளமாகும்.

பிரபாவை புகழும் சிங்கள தேசம்

கடந்த காலத்தில் ஸ்ரீலங்காவின் அரசியல்வாதிகள் பலரும் தலைவர் பிரபாகரன் குறித்தும் விடுதலைப் புலிகளின் ஒழுக்கமம் குறித்தும் பல புகழாரங்களைச் சூட்டியுள்ளனர். இனவழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத் தரப்பின் கட்டளைத் தளாதிகளில் ஒருவரான மேஜர் கமால் குணரத்தின, போர் முடிவுக்கு கொண்டுவரபடப்ட பின்னர், விடுதலைப் புலிகள் மற்றும் தலைவர் பிரபாகரன் அவர்களன் களத்தில் ஒழுக்கத்திற்குப் புறம்பான எந்த விடயங்களும் காணப்படவில்லை என கூறினார்.

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியான பீல்ட் மாசல் சரத்பொன்சேகா, தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சிறந்த தலைவர் என்றும் தனது சொந்த மக்களுக்காக குடும்பத்தை யுத்த களத்தில் பலியிட்டு இறுதிவரைப் போராடியவர் என்றும் சிங்களத் தலைவர்கள் பிரபாகரனிடம் இருந்து இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியமையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் தலைவர் பிரபாவினதும் நேர்மை மற்றும் அரப்பணிப்பான போராட்டத்திற்கு எதிரிகள் வழங்கிய புகழ்ச்சியாகும்.

குற்றமற்ற தேசமாக தமிழீழம்

இவ்வாறு ஒழுக்கத்திலும் நேர்மையிலும் சிறந்த கட்டுக்கோப்பு மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் சிறந்து விளங்கியமையின் காரணமாகவே தமிழீழம் அன்று குற்றமற்ற தேசமாக மிளிர்ந்தது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தின் போது தமிழீழத்திற்கு வருகை தந்த சர்வதேச நீதிப் பிரமுகர்கள் தமிழீழ நீதிமன்றுக்கு விஜயம் செய்த வேளையில் தமிழீழத்தின் ஒழுக்கம் கண்டு வியந்தனர்.

தமிழீழ நீதிமன்றங்களிலும் தமிழீழக் காவல்துறை அலுவலகங்களிலும் குற்றங்களின் கோவைகள் குறைவாய் இருந்தமை கண்டு வியந்து தமிழீழத்தில் நிலவிய சட்டம் மற்றும் ஒழுக்கின் சீர்மையை பாராட்டினர். முப்பது ஆண்டுகளாக தமிழீழ இலட்சியம் மற்றும் கனவுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை பற்றிக் கொண்டமையின் விளைவாகவே உலகில் தலை சிறந்த தேசத்தை விடுதலைப் புலிகள் சாத்தியமாக்கினர்.

கேடுகளை விதைத்த சிங்கள இராணுவம்

போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு போன்றவற்றுக்கு ஸ்ரீலங்கா அரச படைகளே காரண கர்த்தாக்களாக உள்ளனர். ஸ்ரீலங்கா அரசு தமிழீழம்மீது – ஈழத் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பின் போது இத்தகைய ஒழுக்கச் சீர்கேடுகளை மேற்கொள்ள ஸ்ரீலங்கா அரசு இராணுவத்திற்கு முழு சுதந்திரமளித்தது.

அத்துடன் போருக்குப் பிந்தைய இனவழிப்புக் காலத்திலும் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா அரச படைகள் இதே ஒழுக்கச் சீர்கேடுகளை பின்பற்றி விஸ்தரித்தமையின்  விளைவாக இன்று சிங்கள தேசமும் ஒழுக்கச் சீர்கேடுகளை அள்ளுகொள்ளையாக அறுவடை செய்கிறது. ஸ்ரீலங்கா இராணுவம் விதைத்த ஒழுக்க சீர்கேட்டு வினைகள் இன்று சிங்கள மக்களையே பலிகொள்கிறது.

புலிகளைப் பின்பற்றுக

அண்மைய காலத்தில் விடுதலைப் புலிகளின் பொருளாதார சிந்தனைகளை விதந்த சிங்கள தேசம், இப்போது விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தை கண்டு வியப்பது, மாவீரர் சினைவேந்தல் காலத்தின் எம் வீர மறவர்களின் மகத்திற்கு பெருமை அளிக்கிறது. எனவே தமிழீழ தேசம் போல குற்றமற்ற தேசங்களை உருவாக்க விடுதலைப் புலிகளை உலகம் பின்பற்ற வேண்டும்.

அத்துடன் தமிழீழ விடுதலையின் பாலும் மாவீரர்களின் இலட்சத்தின் பாலும் உண்மை பற்றும் கொள்கைத் திடமும் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தை பின்பற்றி பயணம் செய்வதே மாவீரர்களுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் வழங்கும் மரியாதையாகும். அதுவே எமக்காய் களமாடி மண்ணில் மாண்ட மாவீரர்களின் இலட்சியக் கனவை வெல்லும் வழிமுறையுமாகும் என்பதெ உணர்ந்து செயலாற்றுவோம்….” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – உரிமை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More