வலிகளுக்கு வர்ணம் பூசிய உலகக்கோப்பை | ஐங்கரன் விக்கினேஸ்வரா

வலிகளுக்கு வர்ணம் பூசிய உலகக்கோப்பை:

கட்டார் அரசின் மனித உரிமை மீறல் மறைப்பும்… புலம்பெயர் தொழிலாளர் உரிமை மறுப்பும்…

——————————————————

கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா

மதம், இனம், தேசம் கடந்த ஒரு உணர்வுகளோடு, உலகின் அதிக நாடுகளில் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டாகவும், அதிக ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டாகவும் இருப்பது கால்பந்துதான்.

கால்பந்து விளையாட்டை பொறுத்தவரை உலகக் கோப்பை, கோப்பா அமெரிக்கா, (euro cup) ஐரோப்பிய கோப்பை போன்ற தொடர் போட்டிகளுக்கு மட்டுமே வீரர்கள் தங்களுடைய நாடுகளுக்காக விளையாடுகின்றனர்.

மற்றய நேரங்களில் பணபுலம் படைத்த கிளப் அணிகளுக்காக விளையாடுகின்றனர்.

குறிப்பாக ஒவ்வொரு கால்பந்து அணிகளும் தங்கள் நாடுகளின் கலாசாரம் மற்றும் அரசியலை வெளிப்படுத்தும் விதமாகவே பிரதிபலிக்கின்றனர் என்பதால் ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து உலகக் கோப்பைக்கான ஆதரவும் உத்வேகமும் என்றும் அதிகம்தான்.

உலகக்கோப்பை வரலாற்றில் அதிக தொகை செலவிட்ட நாடு:

கட்டார் நாடு (Qatar) 29 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ள, எண்ணைய், எரிவாயு ஏற்றுமதிகளின் மூலம் உலகின் வளமான நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. கட்டார் நாட்டில் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் வருவார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது,

பாரியளவில் குளிரூட்டப்பட்ட மைதானம், அதிநவீன ஹோட்டல்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்

1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டு 22-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துகிறது கட்டார் நாடு.

உலகக்கோப்பை வரலாற்றில் அதிக தொகை செலவிடப்பட்ட போட்டியாக கட்டார் தொடர் இருப்பதால் ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே கத்தார் தொடரைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.

கடைசி 2 ஆண்டுகளில் பிரம்மாண்டமான செலவில் 8 மைதானங்கள், உலக தரத்தில் சாலை சீரமைப்பு, மெட்ரோ ரெயில், விமான நிலைய விரிவாக்கம், 100-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மிக குறுகிய காலங்களில் ஆச்சரியப்படும் அளவுக்கு மேம்படுத்தியுள்ளது என்பதும் உண்மையே.

புலம்பெயர்தொழிலாளர் நலன் :

கட்டார் உலகக் கோப்பை போட்டிகளுக்கான கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்ட 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து பாரிய விமர்சனம் எழுந்துள்ளது.

கட்டடப்பணிகள் நடைபெற்ற இடங்களில் மோசமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக பலர் காயம் அடைந்ததாகவும் அல்லது பலர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கட்டார் பெற்றதிலிருந்து இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் தி கார்டியன் நாளிதழ் கூறியது.

இந்த எண்ணிக்கை கட்டாரில் உள்ள தூதரகங்கள் வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை தவறான புரிதலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள கட்டார் அரசாங்கம், இந்த இறப்புகள் அனைத்தும் உலகக் கோப்பை தொடர்பான திட்டங்களில் பணியாற்றியவர்களுடையது அல்ல எனத் தெரிவித்துள்ளது.

மோசமான மனித உரிமை மீறல்

ஆனால் கட்டார் நாட்டில் உலகக்கோப்பைக்கான சிறப்பு வேலைகளில் மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல் மீறப்பட்டுள்ளதாக ஐரோப்பா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளின் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சிறப்பு நிபுணர்கள் என பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த உலகக்கோப்பை தொடருக்காக பணிபுரிந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள்தான் அதிகம். நேபாளம், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்றனர. கட்டிட விபத்தில் இறந்த தொழிலாளர்களில் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் எனவும் சுயாதீனச் செய்திகள் தெரிவித்துள்ளன.

உலகக்கோப்பை ஏற்பாடுகள் எல்லாம் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தாலும், உலகக்கோப்பை ஏற்பாடுகளின் கட்டுமான பணிகளுக்கு வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை அடிமாடுகள் போல நடத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக விளையாட்டு உலகில் அதிரடி நடவடிக்கைக்கு  பெயர் பெற்ற FIFA வீவா இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதே கேள்விக்குறியாக இருப்பதால் உலகக்கோப்பை தொடரில் மனித உரிமை மீறல் விவகாரம் பரபரப்பாக இருந்து வருகிறது.

உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள்:

தற்போது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களில், வெளிநாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஓய்வின்றி நாள் கணக்கில் வேலை வாங்கியதாகவும், போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும்,

சுகாதாரமின்றி மோசமான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர் எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டைவிட்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை எனவும், அவசர கட்டுமான வேலைகளால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் உயிரிழந்தனர் எனவும் கத்தார் அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்மொழியப் பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர் உரிமை:

சர்வதேச தொழிலாளர் அமைப்பு

மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறினால் ஏற்படும் மரணங்களை வேலை தொடர்பான விபத்தாக கட்டார் அரசு கணக்கிடவில்லை என்று அந்த அமைப்பு கூறுகிறது. இவை அதிக வெப்பத்தில் கடினமான வேலைகள் செய்யும் போது ஏற்படக்கூடியவை.

அங்கே அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வழங்குபவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உலகக் கோப்பை திட்டங்களில் நிகழ்ந்த விபத்து தொடர்பான சொந்த புள்ளிவிவரங்களை அந்த அமைப்பு தொகுத்துள்ளது.

2021ஆம் ஆண்டில் மட்டும் 50 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமடைந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், 37,600 பேர் லேசான மற்றும் மிதமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்களின் மரண எண்ணிக்கையை கத்தார் அரசு குறைவாக பதிவு செய்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) மனித உரிமை அமைப்பு கட்டார் நிறுவனங்கள் தொழிலாளர்களை கட்டாய வேலையில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டியது. மேலும், பல தொழிலாளர்கள் மோசமான தங்குமிடங்களில் வசிப்பதாகவும், பெரும் தொகையில் ஆட்சேர்ப்பு கட்டணங்கள் செலுத்த கட்டாயப் படுத்தப்பட்டதாகவும், ஊதியம் நிறுத்தப்பட்டதாகவும், அவர்களது பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம் கூறியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியில் வேலை செய்வதிலிருந்து பாதுகாப்பதற்கும், வேலை நேரத்தைக் குறைக்கவும், தொழிலாளர் முகாம்களின் நிலைமைகளை மேம்படுத்தவும் கடந்த 2017ஆம் ஆண்டு சில நடவடிக்கைகளை கட்டார் அரசு அறிமுகப்படுத்தியது.

தொழிலாளர்வதை முகாம் :

ஆயினும் மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் 2021ஆம் ஆண்டின் அறிக்கையில், புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் தண்டனை மற்றும் சட்டவிரோத ஊதிய பிடித்தத்தால் அவதிப்படுவதாகவும், மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படாத நிலையை எதிர்கொண்டதாகவும் கூறுகிறது.

கட்டார் நிறுவனங்கள் ‘கஃபாலா’ என்ற அமைப்பு முறையில் செயல்படுகின்றன. அதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டார் வருவதற்கு நிதியுதவி அளித்து, பின்னர் அவர்கள் வேலையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கின்றனர்.

ஐஎல்ஓ போன்ற குழுக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கட்டார் அரசு இந்த நடைமுறையை ரத்து செய்தது. ஆனால், தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவதைத் தடுக்க இன்னும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

கடுமையான இஸ்லாமிய சட்டங்கள்:

கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்தும் வளைகுடா நாடான கட்டார் நாட்டில், தன் பாலினத்தவர்களின் பாலியல் உறவுக்கு எதிரான நிலைப்பாடு குறித்து அதிக எண்ணிக்கையில் புகார்கள் எழுந்துள்ளன.

ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமை விவகாரத்தில் கட்டார் நிலைப்பாடானது, இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி தன் பாலினத்தவர்களின் பாலியல் உறவு ஒழுக்கக் கேடானது என்று கருதப்படுவதால் கட்டாரில் தன் பாலினத்தவர் உறவு சட்டவிரோதமாகும்.

இதற்கு அபராதம், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, மரண தண்டனை கூட விதிக்கப்படும் வகையில் இங்கே சட்டம் உள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஓரினச் சேர்க்கையாளர்கள், தன் பாலின ஈர்ப்பாளர்கள், திருநங்கை, திரு நம்பியர் ஆகிய மக்களை கட்டார் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து கைது செய்து வருகின்றன. சில நேரங்களில் அவர்களின் பாலின வேற்றுமைகளை சீரமைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள் கண்டனம்

தன்பாலின உறவாளர்களுக்கு எதிரான சட்டத்தை கைவிடும்படி கட்டார் நாட்டை வலியுறுத்தி ஆஸ்திரேலிய கால்பந்து அணி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. கட்டார்

மனித உரிமை மீறல்கள் பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டென்மார்க் கால்பந்தாட்ட வீரர்கள், முழுவதும் கறுப்பு துணி அணிந்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

ஐரோப்பாவின் இதர 9 கால்பந்தாட்ட அணிகளின் கேப்டன்களுடன் சேர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன், கத்தாரின் ஓரினச்சேர்க்கையாளர்க்கு எதிரான சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரே காதல் என்ற கை பட்டையை அணிந்தே விளையாடினார்.

கட்டார் தொடரை புறக்கணிப்பு

கட்டார் உலக கோப்பை தொடரை புறக்கணிக்க ஹேஸ்டேக் மூலம் உறுதிமொழியும் பலர் எடுத்துள்ளனர். கால்பந்து உலகில் அதிக ரசிகர்களை கொண்ட கண்டமான ஐரோப்பாவில் இத்தகைய போராட்டங்களால் ரசிகர்களின் உலகக்கோப்பை வருகையில் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது.

கட்டார் அரசின் மனித உரிமை மீறலை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கிளப் தொடர்களில் கட்டார் தொடரை புறக்கணிப்போம் என கோஷங்களுடன் உலகக்கோப்பை தொடருக்கு எதிராக பேனர் வைத்து மைதானத்திலேயே போராடியும் உள்ளனர்.

உலகக்கோப்பை நடக்கும் கட்டார் வரலாற்றில் மிக மோசமான அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்த சாட்சியங்கள் பதிவாகி உள்ளன. அழகிய கட்டிடக் காடாய் மிளிரும் கட்டாரின் உயர் கோபுரங்களும், விளையாட்டு அரங்குகளின் கீழே ஆயிரமாயிரம் புலம்பெயர் தொழிலாளர்களின் துயர வரலாறு புதைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஆசிரியர்