கொங்கோ வரலாற்று நாயகனின் நினைவாக லுமும்பா பல்கலைகழகம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஆபிரிக்கவின் விடுதலை நாயகர்களில் மறக்க  முடியாத பெயர்:

——————————————————

  கட்டுரையாளர்           – ஐங்கரன் விக்கினேஸ்வரா

( ஜனவரி 17, ஆபிரிக்காவில் கொங்கோ நாட்டு விடுதலையின் வரலாற்று நாயகனான பாட்ரிஸ்லுமும்பாவின் நினைவு தினத்தையோட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.

ரஷ்யத்தலைநகர் மாஸ்கோவில் உள்ள ‘பாட்ரிஸ்லுமும்பா’ நட்புறவு பல்கலைகழகம், கொங்கோ வரலாற்று நாயகனின் நினைவாக ஆரம்பிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது)

‘லுமும்பா’ என்றால் இலங்கை, இந்திய மக்களுக்கு உடனடியாக பரீட்சியமாவது, மொஸ்கோவில் உள்ள பல்கலைக் கழகமாகும். ஆசியா, ஆபிரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மாணவர்களுக்கு உயர் கல்வி, மற்றும் பயிற்சித் திட்டங்களை இலவசமாக வழங்கும் முகமாக ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

பலரும் அறிந்த லுமும்பா மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் 1960இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தை பலரும் தெரிந்து கொண்டாலும், யாரிந்த லுமும்பா பற்றி இந்த ஆக்கம் விவரிக்கிறது.

ஆபிரிக்கவின்மறக்க – மறுக்கமுடியாதபெயர்:

பாட்ரிஸ் லுமும்பா… ஆபிரிக்கவின் விடுதலை வரலாற்று நாயகர்களில் மறுக்க முடியாத பெயர்.

பாட்ரிஸ் லுமும்பா (Patrice Émery Lumumba), (ஜூலை 2, 1925 – ஜனவரி 17, 1961) ஆப்பிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார்.

இவரே பெல்சியத்திடமிருந்து தமது நாட்டுக்கு ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர்.

ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பாட்ரிஸ் லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

பாட்ரிஸ்லுமும்பா நினைவாகமாஸ் கோவில் பல்கலைக்கழகம்:

ருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் (Peoples’ Friendship University of Russia) ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் தெற்கில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும்.

இக்கல்வி நிலையம் 1960 ஆம் ஆண்டில் பாட்ரிஸ் லுமும்பா நினைவாக “பாட்ரிஸ் லுமும்பா மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. பனிப்போர்க் காலத்தில் ஆசியா, ஆபிரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மாணவர்களுக்கு உயர் கல்வி, மற்றும் பயிற்சித் திட்டங்களை இலவசமாக வழங்கும் முகமாக இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சில வளர்ந்த நாடுகளில் இருந்தும் குறைந்தளவு மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்றார்கள்.

மூன்றாம் உலகநாடுகளின் மாணவர்களுக்கு உயர்கல்வி :

இந்த மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் சோவியத் அரசாங்கத்தால் 1960, பெப்ரவரி 5 இல் ஆரம்பிக்கப்பட்டது. கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் லுமும்பாவின் நினைவாக பெப்ரவரி 22, 1961 இல் இப்பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட முதலாம் ஆண்டில் 59 நாடுகளில் இருந்து மொத்தம் 539 வெளிநாட்டு மாணவர்களும் 57 சோவியத் மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்துக்கு சேர்க்கப்பட்டார்கள்.

ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்:

1990களில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்குப் பின்னர் பெப்ரவரி 5, 1992 இப்பல்கலைக்கழகத்தின் பெயர் “ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்” என மாற்றப்பட்டது.

இன்று, இப்பல்கலைக்கழகத்தின் 47,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் உலகின் 165 நாடுகளில் பணியாற்றுகிறார்கள். தற்போது இங்கு பட்டப்பின்படிப்பு, மற்றும் தொழிற்பயிற்சி உட்பட 57 கல்வித்திட்டங்களில் 131 நாடுகளின் 450 இனங்களில் இருந்து கிட்டத்தட்ட 23,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 3500 வெளிநாட்டினர் அடங்குவர்.

யாரிந்த பாட்ரிஸ் லுமும்பா ?

லுமும்பா முன்னைய பெல்ஜிய காலனியான கொங்கோவில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். 1955 இல் பெல்ஜிய தாராண்மைவாதக் கட்சியில் இணைந்தார்.

இதன் பின் அவர் நாடு திரும்பி ‘கொங்கோ தேசிய இயக்கம்’ என்ற பெயரில் ஓர் இயக்கத்தை 1958 இல் ஆரம்பித்துப் பின்னர் அதன் தலைவரும் ஆனார். டிசம்பர் 1958 இல் கானாவில் இடம்பெற்ற அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா கலந்து கொண்டார்.

கொங்கோ தேசிய இயக்கம்:

ஜனவரி 27 இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. மே, 1960 இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து ஜூன் 23, 1960 இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார்.

காங்கோ மக்களின் வாழ்க்கைத்தரம் ஆப்ரிக்காவிலேயே மிகவும் தாழ்வானதாக இருந்தது. 80 வருட காலனி ஆதிக்க கொடுமையினால் நாட்டின் மக்கள் தொகை, 2 மடங்காக குறைந்திருந்தது.

ஆப்ரிக்காவிலேயே காங்கோவில் மட்டும் 200க்கும் அதிகமான பழங்குடி இனப் பிரிவுகள் இருந்தன. பழங்குடி இனவாதத்தை அபாயகரமான “உள்நாட்டு எதிரியாக” கருதிய லுமும்பா, மக்களை இனவாதத்திற்கு அடிமையாகாமல் பொதுத்தேசிய நலன்களுக்காகப் பாடுபடும்படி அழைத்தார்.

ஆபிரிக்க மக்கள் மாநாடு:

அக்ரா(கானா) நகரத்தில் நடைபெற்ற ஆபிரிக்க மக்கள் மாநாட்டிற்கு காங்கோவின் பிரதிநிதியாக 1958ஆம் ஆண்டில் சென்ற அவர் அங்கு “காலனி ஆதிக்கத்தின் கீழ் உள்ள எல்லா நாட்டு மக்களின் ஆசைகளும் ஒன்றே, அவர்களின் தலை விதிகளும் ஒன்றே. ஆப்பிரிக்காவில் ஏதாவது ஒரு பகுதி மட்டும் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும் கூட ஆப்பிரிக்கா எப்போதுமே சுதந்திரத்தையும் விடுதலையையும் அடையாது” என்று ஆப்பிரிக்கர்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

 பெருகிவந்த தேசிய இயக்கத்தின் தாக்கத்தால் பெல்ஜியம் பின்வாங்கியது. 1960ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் காங்கோ குடியரசாக  பிரகடனப்படுத்தப்பட்டது. பிரதம மந்திரியான பாட்ரிஸ் தன்னுடைய அரசாங்கத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு வழியில் நடத்த ஆரம்பித்தார்.

கொங்கோவின் விடுதலை:

கொங்கோவின் விடுதலை ஜூன் 30, 1960 இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்.

லுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்குக் கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல ஐரோப்பியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

சோவியத் ஆதரவு:

கட்டாங்கா மாகாணம் ஜூன் 1960 இல் மொயிஸ் த்சோம்பே தலைமையில் பெல்ஜியத்தின் ஆதரவுடன் தனது விடுதலையை அறிவித்தது. ஐநா படைகள் வரவழைக்கப்பட்டன. இதனால் லுமும்பா சோவியத் ஒன்றியத்தின் உதவியைக் கோரினார்.

செப்டம்பர் 1960 இல் அந்நாட்டின் அதிபர் அதிபர் காசா-வுபு, சட்டத்துக்கு மாறாக லுமும்பாவின் அரசைக் கலைக்க அறிவித்தார்.

செப்டம்பர் 14, 1960 இல் சிஐஏஇன் ஆதரவுடன் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பா அரசைப் பதவியிலிருந்து கலைத்தார்.

லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஐநா படைகள் அவருக்குப் பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலிலிருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டார்.

நேட்டோவின் (NATO) ராணுவத்தளங்களுக்கு முற்றுப்புள்ளி:

ஆப்பிரிக்கக் கண்டத்தில் நேட்டோவின் (NATO) ராணுவத் தளங்களை அமைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறியது மேற்கு நாடுகளின் நலன்களுக்கு எதிராக இருந்தது. கூட்டு சேராக்கொள்கை, காலனி ஆதிக்கத்திலிருந்தும், நிறவெறி ஆட்சியில் இருந்தும் ஆப்பிரிக்காவை முழுமையாக விடுவித்தல், காங்கோ விற்கும் சோஷலிச நாடுகளுக்கும் சுமுகமான உறவை வளர்ப்பது என்ற பாட்ரிஸின் வெளியுறவுக் கொள்கை ஏகாதிபத்தியத்திற்கு ஒத்துவரவில்லை.

மோபுட்டு இராணுவப்புரட்சி:

மொபுட்டுவின் படையினரால் அவர் 1960, டிசம்பர் 1 இல் ‘போர்ட் ஃபிராங்கி’ என்ற இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். உள்ளூர் ஐநா அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கின்ஷாசா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராகச் சுமத்தப்பட்டன.

சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்பட வேண்டும் என ஐநா செயலர் டாக் ஹமாஷெல்ட் கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். சோவியத் ஒன்றியம், லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

ஐநா பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாகச் சோவியத் ஒன்றியம் டிசம்பர் 14, 1960 இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்குக் கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தைச் சோவியத் ஒன்றியம் தனது வீட்டோ பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.

லுமும்பாவின் பாதுகாப்புக் கருதி அவர் கட்டங்கா மாகாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

லுமும்பாவின் இறப்பு

ஜனவரி 17, 1961 இல் லுமும்பா பெல்ஜிய அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கேப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் ஆவர்

கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.

மூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் உள்ளூர் வானொலி தகவல் தந்தது.

அவரின் கொடூரமான கொலையை விசாரிக்க ஐநா சபை நியமித்த குழு அவரைக் கொலை செய்த ஏகாதிபத்தியத்தை குற்றம் சாட்டியது.

ஆபிரிக்கவின் விடுதலை வரலாற்று நாயகர் :

சதிகாரர்களின் சதி காங்கோவின் தேசியத்தலைவரை வீழ்த்தியது. அவரைக் கொன்றவர்களை இன்றும் உலகம் அவமானச்சின்னங்களாகவே பார்க்கிறது.

ஒரு சாதாரண விவசாயக் கூலியாக வாழ்க்கையை ஆரம்பித்த பாட்ரிஸ் லுமும்பா தன்னுடைய புரட்சிகர இலட்சியங்களால் நாட்டின் பிரதமராக உயர்ந்து சதிகாரர்களின் சதியால் பலியானார்.

இன்றும் ஆபிரிக்காவுக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து வரும் பாட்ரிஸ் லுமும்பா உண்மையில் காங்கோ தேசிய இயக்கத்தின் பேரொளி தான்..

லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டதும் பல ஐரோப்பிய நகரங்களில் பெல்ஜியத் தூதரகங்களின் முன்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

பாட்ரிஸ் லுமும்பா… ஆபிரிக்கவின் விடுதலை வரலாற்று நாயகர்கர்களில் மறக்க – மறுக்க முடியாத பெயராக என்றும் மிளிர்கிறது.

ஆசிரியர்