Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பிலிப்பைன்ஸில் தொடரும் பத்திரிகையாளர் படுகொலைகள் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

பிலிப்பைன்ஸில் தொடரும் பத்திரிகையாளர் படுகொலைகள் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read

ஊடக சுதந்திர அத்துமீறலும் அரசியல் வன்முறையும் :

——————————————————

கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பிலிப்பைன்ஸில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் நினைவாக, அரச கூலிப்படைகளின் ஊடகசுதந்திர அத்துமீறலை பற்றி இந்த ஆக்கம் விபரிக்கின்றது. பிலிப்பைன்ஸில் பத்திரிகையாளர் படுகொலைகள் இன்னமும் தொடர்வதை சர்வதேச நாடுகள் கண்டிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியதாகும்)

பிலிப்பைன்ஸில் வெகுஜன ஊடகங்கள் , மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்படுவது நீண்ட காலமாக தொடர்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது தற்போது அம்பலமாகி வருகிறது.

தொடர் பத்திரிகையாளர் படுகொலைகள் :

“எல்லைகளற்ற செய்தியாளர்கள்” (RSF) அறிக்கையின்படி பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர்களுக்கு உலகின் மிகக் கொடிய நாடாக பிலிப்பைன்ஸ் இருப்பதாகக் கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்நிகழ்வாகி வருகிறது. தற்போது, சமூக வலைதளங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பின்தொடர்ந்த, மக்கள் மத்தியில் பிரபலமான பெர்சிவல் மபாசா என்ற பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவர் கடந்த வருடம் அக்டோபர் 3 ஆம் தேதி தன்னுடைய காரில் வானொலி நிலையத்திற்கு செல்லும் போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு வயது 63, பெர்சி லாபிட் என்ற பெயரில் வானொலியில் தன்னுடைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர்.

இன்றைய போங்பாங்மார்கோஸ் ஆட்சியில் தொடரும் படுகொலை :

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய பிலிப்பைன்ஸில் ரெனாடோ ரே பிளாங்கோ என்ற வானொலி ஒளிபரப்பாளர், மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதன்பின் மபாசா பிலிப்பைன்ஸில் கடந்த ஜூன் மாதம் ஃபெர்டினாண்ட் போங்பாங் மார்கோஸ் ஜூனியர் ஆட்சிக்குவந்த பிறகு, படுகொலை செய்யப்படும் இரண்டாவது பத்திரிகையாளர் ஆவார்.

தற்போது மபாசா படுகொலையில் இருந்து, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது அம்பலமாகி உள்ளது.

இதற்கு முன்பாகவே பிலிப்பைன்ஸ் நாடு 2010-களின் நடுப்பகுதியிலிருந்து 2018-ல் பட்டியலிடப்படும் வரை உலகில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான ஐந்து நாடுகளில் ஒன்றாக RSF ஆல் அறிவிக்கப்பட்டது.

மகுயிண்டனா பத்திரிகையாளர் படுகொலை :

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோவில் நவம்பர் 23, 2009 அன்று, அன்றைய பிரிக்கப்படாத மகுயிண்டனாவோவில் உள்ள அம்பட்டுவான் நகரில் (Maguindanao del Sur) 58 பேர் புலுவானின் துணை மேயரான எஸ்மாயில் மங்குடதாட்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்யச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்கள் கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டனர். அவர்களில் 32 பேர் பத்திரிகையாளர் ஆவார். உலகை உலுக்கிய மிகப்பெரிய மகுயிண்டனா பத்திரிகையாளர் படுகொலை என அறியப்படுகிறது.

மகுயிண்டனா படுகொலை, (Maguindanao)அம்பட்டுவான் படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது, இது பாதிக்கப்பட்டவர்களின் வெகுஜன புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட நகரத்தில் ஊடக நகரமாக தற்போது பெயரிடப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான நாடு :

பிலிப்பைன்ஸின் பத்திரிக்கையாளர்களின் தேசிய ஒன்றியத்தின் (NUJP) தரவுகளின் அடிப்படையில், 197 ஊடகத் தொழிலாளர்கள் 1986 முதல் கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து இறப்புகளும் அவர்களின் வேலை தொடர்பானவை. அதிகூடிய எண்ணிக்கையானது ஜனாதிபதி குளோரியா மக்காபகல் அரோயோவின் நிர்வாகத்தின் கீழ் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள் மீதான உலகின் மிக மோசமான மிலேச்சத்தனமான தாக்குதல் என்று அழைக்கப்படும் மகுயிண்டனாவில் கொல்லப்பட்டவர்களில் 32 பேர் உட்பட, 2009 ஆம் ஆண்டை அவர்களுக்கு மிகவும் கொடியதாக மாற்றியது.

அரச கூலிப்படையால் கொலைச்சதி:

 பிலிப்பைன்ஸ் சிறைத்தலைவரான ஜெரால்ட் பான்டாக், கடந்த வருடம் அக்டோபர் 3 ஆம் திகதி மபாசாவை சிறைக்கைதிகள் மூலம் கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளார். இதனால் ஜெரால்ட் பான்டாக் மற்றும் அவரது துணை பாதுகாப்பு அதிகாரி ரிக்கார்ட்டோ ஜூலியேட்டா ஆகியோர் மீது போலீசுத்துறை கொலைப்புகார்களை பதிவு செய்துள்ளது. கொலை உத்தரவை பான்டாக், சிறைக் கைதிகளில் ஒருவரான கிறிஸ்டிடோ வில்லமோர் பலனா மூலம், கொலையாளியான ஜோயல் எஸ்கோரியலுக்கு அனுப்பியுள்ளார். அவர் கொலையை 5,50,000 பெசோக்கள், அதாவது 9,900 டாலருக்கு செய்ய ஒப்புக்கொண்டுள்ளமை தற்போது பலருக்கும் தெரியவந்துள்ளது.

இச்சதியானது போலீசுத்துறையில் ஜோயல் எஸ்கோரியல் சரணடைந்த பிறகுதான், உலகின் வெளிச்சத்துக்கு வந்தது. போலீசுத்துறையானது கொலை நடக்கும்போது தங்களுடைய கண்காணிப்பு புகைப்படக் கருவியில் பதிவான கொலையாளியான எஸ்கோரியலின் முகத்தை வெளியிட்டது; எனவே எஸ்கோரியல் தன் உயிருக்கு பான்டாக்-கால் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து போலீசில் சரணடைந்தார்.

அதன்பிறகு, பான்டாக் மற்றும் ஜூலியேட்டா, தாங்கள் இவ்வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கொலை உத்தரவை அனுப்பிய சிறைக்கைதியான வில்லமோர் பலனாவை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இவர்களின் தூண்டுதலால், அக்கொலை முயற்சியானது பலனா கும்பலைச் சேர்ந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது; ஆனால் வில்லமோர் பலனா அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பித்துவிட்டார்.

மபாசா படுகொலையும் ஊடகசுதந்திர அத்துமீறலும் :

ஊடக சுதந்திரம் மற்றும் பொறுப்புக்கான மையம் (CMFR) 1986 முதல் ஏப்ரல் 2015க்குள் பணியின் போது கொல்லப்பட்டவர்களில் பத்து பேர் பெண்கள் என்றும் அறிவித்துள்ளது.

அரசாங்க செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் தான், பான்டாக் போன்ற ஆளும் வர்க்க நபர்களால் கொலை செய்யப்படுகின்றனர். மபாசா அவருடைய வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளை தொடர்ச்சியாக விமர்சித்து வந்துள்ளார்.

குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே மற்றும் தற்போதைய ஜனாதிபதியான ஃபெர்டினாண்ட் போங்பாங் மார்கோஸ் ஜூனியரின் கொள்கைகள் மற்றும் அவருடைய உதவியாளர்களை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி முயற்சிகளில் ஈடுபடும் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை கம்யூனிஸ்ட் அனுதாபி என்று குற்றம் சாட்டுகின்ற பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் “ரெட்–டேக்கிங்” முறையையும், ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் இராணுவச் சட்டத்தை ஆதரித்து மார்கோஸ் ஜூனியர் உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்ததையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்துள்ளார்.

மபாசா சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, தனது இரவு நேர வானொலி நிகழ்ச்சியில் பான்டாக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தினார். மபாசா அவருடைய வானொலி நிகழ்ச்சியில் பான்டாக்–ஐ தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததால் மபாசாவைக் பான்டாக் கொலை செய்ததாக தேசிய புலனாய்வுப் பணியகத்தின் யூஜின் ஜேவியர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

197 பத்திரிகையாளர்கள் படுகொலை:

முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டேவின் 2016 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய ஜூன் வரையிலான ஆட்சிக் காலத்தில் மட்டும் 26 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவருடைய ஆட்சியில் போதைப் பொருட்களை ஒழிப்பதாக கூறி சட்டவிரோத முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

காலங்காலமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்நிகழ்வாகி வருகிறது. 1986 ஆம் ஆண்டில் இருந்து மட்டும், இதுவரை 197 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எல்லைகளற்ற செய்தியாளர்களின் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் பதிப்பில் பட்டியலிடப்பட்ட 180 நாடுகளில் 147-வது இடத்தைப் பிலிப்பைன்ஸ் பிடித்துள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு (cpj) வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, பத்திரிகையாளர்களை கொலை செய்யும் கொலையாளிகளை தண்டிப்பதில் மோசமான நாடுகளின் பட்டியலில் பிலிப்பைன்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

இப்படுகொலைகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. குறிப்பாக, பான்டாக் படுகொலை செய்யப்பட்ட அடுத்த நாளே, பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைமையில், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் மக்களும் கலந்துக்கொண்டனர். இப்போராட்டங்களை வளர்த்தெடுப்பதன் மூலமே, தொடர்ந்து அதிகரித்துவரும் படுகொலைகளை தடுக்க முடியும்; மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட முடியும் என அறியப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More