செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை 26 ஜனவரி | ஆஸ்திரேலியா தினம் ஒரு ஆக்கிரமிப்புத் தினமெனத் தெரியுமா?

26 ஜனவரி | ஆஸ்திரேலியா தினம் ஒரு ஆக்கிரமிப்புத் தினமெனத் தெரியுமா?

5 minutes read

26 ஜனவரி: ஆஸ்திரேலியா தினமா ? ஆக்கிரமிப்புத் தினமா ??

அவுஸ்திரேலியாவின் ‘களவாடப்பட்ட தலைமுறை:

அபரோஜின பழங்குடியின மக்கள் மீதான படுகொலை:

——————————————————

கட்டுரையாளர்  – ஐங்கரன்விக்கினேஸ்வரா

ஆஸ்திரேலியா தினம் (Australia Day) “26 ஜனவரி” என்பது இந்த நாட்டின் பாரம்பரிய விழுமியங்கள், சுதந்திரங்கள் மற்றும் பொழுது போக்குகளைக் கொண்டாடும் ஒரு நாள் என்றுதான் உலகிற்குத் தெரியும்.

ஆஸ்திரேலியாதினம் – 26 ஜனவரி:

ஆண்டு தோறும் ஆஸ்திரேலியா தினம், பரவலாக மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறி விட்டாலும், குறிப்பாக அபரோஜின பூர்வீக குடி மக்களுக்கு வேதனையளிக்கிறது. அதனைக் கொண்டாடுவது ஏன் அவர்களிடத்தில் துக்கத்தை ஏற்படுத்துகிறது பற்றிய வரலாற்று அலசலாக இக்கட்டுரை பிரசுரமாகிறது.

ஆயினும் பல பூர்வீக குடி மக்களுக்கு, இந்த நாள் மிகவும் வித்தியாசமான உணர்வுகளை உண்டாக்குகிறது. பிரித்தானிய காலனித்துவ படையெடுப்பின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த நாள் பலருக்கும் துக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் படையெடுப்புகளின் விளைவாக போர், இனப்படுகொலை, இனவெறி மற்றும் பூர்வீக குடி மக்களுக்கு எதிரான பிற அட்டூழியங்கள், பல தலைமுறைகளாக நடந்ததை, நடப்பதை நினைவுபடுத்தும் நாளாக அமைந்துள்றது.

ஐரோப்பியரோ சீனரோ கால் வைக்க முன்னமிருந்தே கிட்டத்தட்ட 45000- 60000 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின அபரோஜின மக்கள் (aboriginal Australians) அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 60000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகே ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, வேறு யாருமே நுழையவில்லை என்றும் நம்பப்பட்டு வந்தது.

இந்தப் பழங்குடியினர் எல்லாருமே ஒரே மொழியைப் பேசுபவர்களல்லர். ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு (1788) முன்பு இவர்கள் 700 மொழிகளை

பேசி வருகின்றனர். அவற்றுள் கூறி, முர்ரி, நுங்கர், யமாட்ஜி, வங்காய், அனங்கு, யாப்பா, யொல்ங்கு, பலவ ஆகியன பேச்சு வழக்கு மொழிகளாகும்.

அபரோஜின பழங்குடியினர் –

அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் வாழ்வோர், ரொறஸ் நீரிணைத் தீவுக்காரர்(Torres Strait Islanders) என இரு வகையாகப் பிரிக்கலாம்.

ரொரஸ் நீரிணை தீவுகள் பப்புவா நியூகினிக்கும் அவுஸ்திரேலியப் பெருநிலப்பரப்பின் வடமுனைக்கும் இடைப்பட்ட தீவுகளாகும்.

தென் இந்திய இனப்பரம்பல்:

இவர்கள் எப்படி இந்த நிலத்துக்கு வந்தார்கள் என்பதில் இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளூடாக வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆயினும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சில ஆதிவாசிகளின் மரபணுக்களில் தென்இந்திய ஆதிவாசிகளின் அடையாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

60000 ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் இந்த மரபணுக்கள் புகுந்திருக்க (தென் இந்தியர்கள் குடியேறியிருக்க) வேண்டும் என்று தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த மரபணுக்கள்

திராவிட மொழிகளைப் பேசுவோருடையதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

திராவிட மொழி பிணைப்பு :

இந்த இனக்கலப்பு 60000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய தென் இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

அத்துடன் 141 தலைமுறைக்கு முன்

இந்த மரபியல் இனக்கலப்பு

நடந்திருப்பதையும் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த காலகட்டத்தில் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினர் கற்களால் ஆன கருவிகளை செய்யும் தொழில்நுட்பத்தையும் அறிந்தனர். இதனால் இந்தக் கலையும் தென் இந்திய பழங்குடியினரால் தான் இங்கே அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

களவாடப்பட்ட தலைமுறை‘ – stolen generation :

ஐரோப்பியரால் ஆக்கிரமிக்கப்பட்ட அபரோஜின பழங்குடியினரின் பூர்வீக

அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் பரவிய அம்மை, சின்னம்மை, காசநோய், இருமல், மற்றும் சுவாச நோய்த் தாக்குதலுக்கு அதிகளவில் இப்பூர்வீக

மக்கள் பாதிக்கப்பட்டு அதிகளவில் இறந்தார்கள். அதே வேளை வெள்ளையர்களாலும் இந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். குறிப்பாக ‘வேட்டையாடி’யதில் ரஸ்மேனியாவிலிருந்த (Tasmania) ஒரு பழங்குடி இனமே முழுமையாக அழிக்கப்பட்டது.

1950ம் ஆண்டு வரை பெற்றோரில் ஒருவர் வெள்ளையராயும் மற்றவர் பழங்குடியினராயும் இருந்து பிறக்கும் கலப்புப் பிள்ளைகளை பலவந்தமாக இதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட நிலையங்களில் அரசே சேர்த்துவிடுமபழங்குடியினரில் இப்படிக் கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் ‘களவாடப்பட்ட தலைமுறை’ (stolen generation) என அறியப்படுகின்றனர். இதனைப் பற்றிய அயர வைக்கும் உண்மைக்கதை சொல்லும் படம் “Rabbit Proof Fence” துயர வரலாற்றின் முக்கியமான சான்றாகும்.

அபரோஜின மண்ணில் அத்துமீறிய ஆக்க்கிரமிப்பு:

காலனித்துவ அந்நியர்களின் ஆக்கிரமிப்பு இல்லாமல், அமைதிப் பூங்காவாவாக இருந்த ஆஸ்திரேலியா கண்டத்திற்கு 1770-ல் காப்டன் குக் (Captain Cook) என்பவர்தான் ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டு பிடித்து உலகிற்கு அறிமுகம் செய்தார் என ஆங்கிலேயர் வரலாற்று ஏடுகளில் பறை சாற்றுகின்றனர்.

அதன் பின்னரே ஆஸ்திரேலியா கண்டத்தை பிரித்தானியர்கள் சொந்தம் கொண்டாடி முழுமையாக ஆக்கிரமித்தனர். இதனை உறுதி செய்யும் விதமாக ஆஸ்திரேலிய நிலப்பரப்பை “யாருமற்ற இடம் (Terra Nullium)” என பிரகப்படுத்தினார்கள்.

ஆயினும் 1770-ல், ஆஸ்திரேலியா கண்டறியப்பட்டாலும், 1829-லிருந்துதான் ஆஸ்திரேலியாவில் அந்நியர்களின் குடியேற்றம்

நிகழ்ந்தது. 1829-க்கு பின்னரே அந்நியர்களின் குடியேற்றம் நிகழ்ந்தபிறகே, வன்முறையையே அறியாத ஆஸ்திரேலிய பழங்குடியினரான அபரோஜினியரை அழிக்கத் தொடங்கினர்.

கறுப்பு யுத்தமும் இனப்படுகொலையும்:

1834 –ல் பிஞ்சாரா என்ற இடத்தில் இனப்படுகொலையின் ஆரம்பமாக

80 க்கும் மேற்பட்ட அபரோஜினியரை

சுட்டுக்கொன்றனர். தாஸ்மானியா மாநிலத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் 10,000 க்கும் மேற்பட்ட அபரோஜினியரை கொன்று குவித்தனர்.

கொடூரமாக நீர் நிலைகளில் நஞ்சை கலந்து வைத்தனர்.ஆங்கிலேயர்களால் மாவில் விஷம் வைத்து அபரோஜினியருக்கு விநியோகித்து அவர்களை அழித்தனர். இதனை சரித்திர ஆசிரியர்கள் “கறுப்பு யுத்தம்(Black War)” என பதிவு செய்துள்ளனர்.

நட்டஈடு கோரிய பழங்குடி மக்களின் வழக்கு :

பூர்வீகமான தங்களது தலைமுறை வாழ்ந்த நிலத்தை அரசு சுவீகரித்துக்கொண்டதாகவும் இதற்கு நட்டஈடு தரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள்அவுஸ்திரேலியாவிலேயே அதிகூடிய நட்ட ஈட்டினை கோரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பூர்வீக குடிமக்களுக்கு வெற்றியாக அமையுமானால் உலகின் அதிகூடிய நட்ட ஈடு செலுத்தப்பட்ட வழக்குகளில் ஒன்றாக வரலாற்றில் பதிவுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுவீகரித்து வைத்துள்ள – கிட்டத்தட்ட – இரண்டுகோடி ஹெக்டயர் பரப்பளவு கொண்ட நிலம் மேற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கனியவள அகழ்வு – விவசாயம் – வர்த்தகம் – பொதுமக்கள் குடியிருப்பு போன்ற வருவாய் ஈட்டும் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அதில் தமக்குரிய உரிமைகள் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக

இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ள பூர்வீக குடிமக்கள் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தங்களுக்கு தமது பூர்வீக நிலத்திலுள்ள பண்பாட்டு – கலாச்சார உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இழப்புக்கு அரசாங்கம் தங்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என்று

குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கின் மூலம் கோரப்பட்டுள்ள நட்ட ஈட்டுத்தொகை 29 ஆயிரம் கோடி டொலர்கள் ஆகும்.

அரசின்மன்னிப்புகோரல்:

களவாடப்பட்ட தலைமுறையினர் குறித்தும், அபரோஜின பழங்குடியின மக்கள் மீதான படுகொலைக்காக அன்றைய ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரெட்டு (Kevin Rudd), 13.02.2008 அன்று கான்பெரா தலைநகர் பாராளமன்றில் தனது உரை மூலமாக பொது மக்களிடம், பொது மன்னிப்பு கேட்டு இருபது நிமிடங்கள் உரையாற்றினார். இதுவே முதன்முறையாக பழங்குடி பொது மக்களிடம் கேட்ட பொது மன்னிப்பாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More