பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன். செருக்கன் கிராமங்களின் பொற்காலமும் நீலனாறு, கொல்லனாறுகளால் சூழப்பட்டு பொறிக்கடவை அம்பாளின் அனுக்கிரகத்தால் வாழ்ந்த மக்களின் வரலாறும்.
அருவி வெட்டல், சூடடித்தல்
ஊர் மக்களால் மட்டும் இதனை தனித்து ஒப்பேற்ற முடியாது. ஊரில் இருந்து (மீசாலை, சாவகச்சேரி) உறவு முறையானவர்கள் வந்து மாதக் கணக்கில் தங்கி உதவி செய்வர். போகும்போது நெல்லை வண்டில்களிலேற்றி சுட்ட தீவு போன்ற இடங்களிற்கு கொண்டு சென்று வள்ளங்களில் கச்சாய் துறைமுகம் கொண்டு செல்வர்.
பூநகரி, நல்லூர் போன்ற ஊர்களில் வானம் பார்த்த பூமியை மட்டும் கொண்டுள்ள சிறு விவசாயிகள் அரிவி வெட்டு, சூடடி போன்ற காலத்தில் குஞ்சுப்பரந்தன், பெரியபரந்தன் கிராமங்களிற்கு வண்டில் கட்டி வருவார்கள். இங்கேயே தங்கி அரிவி வெட்டி, சூடடித்து முடிந்த பின்னர் கூலியையும் நெல்லாக வாங்கி வண்டில்களில் ஏற்றிச் செல்வர். அவர்கள் வந்து, வேலை முடித்துத் திரும்பிச் செல்லும் போது உறவினர்களைப் பிரிந்தது போன்ற துக்கம் ஏற்படும்.
“மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் மாமதுரை” என்று மதுரை மாநகரைப் புலவர்கள் புகழ்ந்தனர். பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன் கிராமங்களில் ஆதியில் எருமைமாடுகள் கட்டியே போரடித்தனர். நடுவில் களமரம் நடப்பட்டுச் சூழவும் பாய் அல்லது படங்குகள் விரிக்கப்படும். சூடடிக்கவென ஒவ்வொருவர் காணியிலும் விசேட களங்கள் மேட்டு நிலங்களாகக் காணப்பட்டன. நடுவில் நடப்பட்ட களமரத்தைச் சுற்றி நெல் கட்டுக்களைப் பரவுவார்கள். பின் அனுபவசாலியான பெண் எருமையை முதலாவதாகவும் ஏனைய ஆண் எருமைகளை வரிசையாகவும் பிணைப்பர். எருமைகள் காலத்தைச் சுற்றி வரும். சூடடியில் மட்டும் பெண் எருமையொன்றை ஏனைய எருமைகளை வழி நடத்தும் பொருட்டு பயன்படுத்துவார்கள். சுற்றி வரும் மாடுகள் அடிக்கடி சாணம் போடும். நாங்கள் சிறுவர்கள் வைக்கலில் சாணம் விழாவண்ணம் மிகவும் பவித்திரமாகக் கடகத்தில் ஏந்திக் கொள்வோம்.
ஒவ்வொரு களத்திலும் சூடடிக்க முன்னர் களப் பொங்கல் பொங்கப்படும். நாங்களும், சிறுவர்களும், சூடடிகாரரும் அப் பொங்கலில் பசியாறிக் கொள்வோம். பின் இரவு முழுவதும் கோப்பி, தேநீர், சோற்றுக் குழையல் என்று வயிற்றுக்கு வஞ்சனையின்றி உணவு கிடைக்கும். களைத்து போன எருமைகளுக்கு மாற்று எருமைகள் மாறி மாறிக் கட்டப்படும். சூடடிப்போர் இராகமாகப் பாடுவர். தாம் அனுபவப்பட்ட பேய், பிசாசு கதைகளைக் கூறிச் சிறுவர்களை நடுங்க வைப்பர். நொடிகள் போட்டு அவிழ்ப்பதன் மூலம் நித்திரையை விரட்டுவர். சூடடி என்றபோது இப்போ நினைக்கும் தோறும் ஓர் இனிய அனுபவமாகும்.
நெல்லைச் சேமித்தல்
மூன்று வகையான முறையில் நெல்லைச் சேகரித்து வைப்பர். நெல் சேகரித்து வைப்பதற்கு தனி வீடு அமைக்கப்பட்டிருக்கும். கோற்காலி என்று நான்கு கால்களாலான ஒரு கட்டில் போன்ற அமைப்பு. அதன் மேல் பலகையை அடுக்கி விடுவர்.
1. பாயால் பெரிய கூடை போன்று பின்னி வைத்திருப்பர்.
2. ஈச்சம் தடியால் பெரிய கூடையும், மூடியும் பின்னி சாணம் கலந்த களிமண் பூசி ஓட்டைகளையடைத்து வைத்துப்பர்.
3. படங்கினால் பெரிய சாக்குப் போல ஒன்றைத் தைத்து வைத்துருப்பர். இந்த மூவகைக் கூடைகளையும் கோற்காலியின் கீழ்ப்புறம் சுத்தமாக வைக்கப்படும். எலி, அகிழானின் அசுமாத்தம் கண்டால் அவை தேடி அழிக்கப்படும். இவற்றிலே உணவைத் தேடும் அணில், எலி, அகிழானைத் தேடி அழையா விருந்தாளிகளாக நாகமும், சாரையும் தேடி வரும். ஊர் நாய்கள் நான்கு, ஐந்து ஒவ்வொரு கமக்காரருக்கும் உற்ற துணையாகும். அவற்றிற்கென ஒவ்வொரு வீட்டிலும் தனி உலை, பாம்பின் நடமாட்டம் கண்டு நாய்கள் கொதித்து எழுந்து விடும். நாகங்களிடம் கடி படாவண்ணம் அவற்றை விரட்டுவதில் ஊர் நாய்கள் திறன் வாய்ந்தவை.
பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், செருக்கன் மக்கள் பெரும்பாலும் மீசாலை, கச்சாய், சாவகச்சேரி போன்ற ஊர்களிலிருந்து கடல்வழியாகச் சுட்ட தீவு ஊடாக வந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்களாகும். போக்குவரத்திற்கு வள்ளங்களையும், எருதுகளால் இழுக்கப்பட்ட வண்டில்களையும் பிரதானமாகப் பாவித்தனர். ஒரு பகுதியினர் நெற்செய்கை, பசுவளர்ப்பு, ஆடு வளர்ப்பிற்கும் இன்னொரு பிரிவினர் மீன்பிடி, கருவாடு போடுதல் போன்ற தொழில்களை நாடியும் இவ்வூர்களுக்கு வந்தனர்.
இம் மக்கள் குடியேறத் தொடங்க முன்னர் இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த பணிக்கர்கள் எனும் மலையாள மொழி பேசுவோர் இங்கு தங்கி யானைகளைப் பிடித்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தனர். அவர்கள் தமது நாட்டிலுள்ள கண்ணகை அம்மனை இங்கு தருவித்து அம்மனை வணங்கிய பின்னர் யானைகளுக்குப் பொறி வைத்துப் பிடித்தனர். அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அம்மனே பொறிக் கடவை அம்மன் என இன்று வரை போற்றப்படும் அம்மன் ஆகும். நேர்த்தியின் பின் அவர்கள் வைத்த பொறியில் பவளக் கொம்பன், முத்துக் கொம்பன் யானைகள் வந்து விழுந்தன.
ஓரிரு பணிக்கர்கள் கிளிநொச்சிப் பெண்களை மணந்து இங்கே தங்கிவிட ஏனையவர்கள் இந்தியா திரும்பி விட்டனர்.
பணிக்கர்களின் பின்னர் கச்சாய்ப் பகுதியிலிருந்து வந்த முக்குவ மக்கள் அம்மனை ஆதரிக்கத் தொடங்கினர்.
பின்னர் குஞ்சுப்பரந்தன் உடையார் குடும்பத்தினரிடம் ஆலய நிர்வாகம் சென்றது. நீண்டகாலம் இவர்களின் நிர்வாகத்திலேயே இயங்கிய கோவில் பின்னர் குஞ்சுப்பரந்தன், பெரிய பரந்தன், செருக்கன் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற அறங்காவல் சபையினரின் நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளது.
உருத்திரபுரம் குடியேற்றத் திட்டம் ஏற்படுமுன் 8ம் வாய்க்கால், 10ம் வாய்க்கால் நீரை பெரிய பரந்தன், குஞ்சுபரந்தன் மக்களே அனுபவித்தனர். இதனால் இக் கிராமங்களில் முப்போகம் நெல் செய்கை பண்ணப்பட்டது.
டி8, டி10 உருத்திரபுரம் குடியேற்றத் திட்டங்கள் முழுமையாகச் செயற்படத் தொடங்கியதும் அந்த இரு வாய்க்கால்களினதும் ஏகபோக உரிமை இல்லாது போயிற்கு. 1964ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கடல் பெருக்கெடுத்து ஊருக்குள் நுழைந்தது. இதனால் நூறு ஆண்டுகளுக்கு மேல் செய்கை பண்ணப்பட்ட பொன் கொழிக்கும் பூமி உவர் நிலமாக மாறியது.
நீலனாறு, கொல்லனாரு போன்றவற்றை தூய்மைப்படுத்தி ஆழப்படுத்துவதன் மூலம் இந்த உவர் தன்மையை இல்லாது போக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீர் தட்டுப்பாட்டுடன் எருமைகளின் தேவை குன்றியது. அகப்பட்ட விலைக்கு விவசாயிகள் எருமைகளை விற்றனர். ஓரிருவர் தமது எருமைகளைக் காப்பாற்ற ஸ்கந்தபுரம், கோணாவில், முறிப்பு, அக்கராயன் குளம், வன்னேரி என இடம்பெயர்ந்தனர்.
உழவு இயந்திரங்களின் வரவுடன் எருமைகளின் தேவை முற்றாக இல்லாது போய்ற்று. விவசாயிகளிடையே காணப்பட்ட அன்பு, பாசம், நட்பு, விட்டுக் கொடுத்தல், கூட்டுறவுப் பண்பாடு யாவும் அற்றுப் போயின. ஓர் இயந்திரத்தனமாக வாழ்வு ஆரம்பமாகியது.
எனினும் பொறிக்கடவை அம்மன் மட்டும் இம்மக்களை இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தார். இக்கிராம மக்கள் தீபாவளி, புதுவருடத்தை விட அம்மனின் பங்குனி வேள்வியையே பிரதானமாகக் கொண்டாடுவர். புத்தாடை அணிந்து காவடி, பாற்செம்பு எடுத்து மிகக் குதூகலமாகக் கொண்டாடுவர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பங்குனி வேள்விக்கு ஊருக்கு வந்து விடுவர்.
கல்வி
பெரிய பரந்தன் மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் கிளி/பரந்தன் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை 1925ம் ஆண்டு அமைக்கப்பட்டு உருத்திரபுரம், குஞ்சுப்பரந்தன், செருக்கன், நீவில், 05ம் வாய்க்கால், பெரிய பரந்தன் காடு, பரந்தன் சந்தி முதலிய இடங்களிலிருந்து வந்த மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்கியது. 1954ம் ஆண்டு கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்படும் வரை இப் பாடசாலையே இப்பகுதிக் கல்விக்குப் பொறுப்பாக இருந்தது.
பெரும் புலப்பெயர்வு
கனகாம்பிகைக் குளம் என்னும் இடத்தில் அரை ஏக்கர் காணியை அரசாங்கம் வழங்கும்போது பெரிய பரந்தன் கமக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் பெரிய பரந்தன் மக்கள் பெருமளவில் கனகாம்பிகைக் குளத்தில் குடியேறினர். இப்போது குஞ்சுப்பரந்தன், பெரிய பரந்தனில் குறைந்த எண்ணிக்கையானவர்களே வாழ்கின்றனர். குஞ்சுப்பரந்தன் மக்களில் பலர் மீண்டும் மீசாலை, சாவகச்சேரி போன்ற இடங்களில் மீளக் குடியேறிவிட்டனர். இவர்களும் நீவில் கமக்காரர்களும் கலபோகச் செய்கைக்கு மட்டுமே வந்து போகின்றனர். செருக்கன் மக்கள் மீட்சியின்றி கவனிப்பாரற்று செருக்கன் பிள்ளையாரை மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். அரசினர் இவர்கள் மீது கரிசனை காட்டுவது அவசியம். பெரிய பரந்தனில் தற்போது வசிக்கும் மக்களில் மூன்று குடும்பத்தவரை தவிர ஏனையவர்கள் வீட்டுத்திட்டங்கள் பெற்று, சுயமுயற்சியாலும் அரசின் ஆதரவாலும் வீடு கட்டி வாழ்கின்றனர். கிளி/பரந்தன் அ.த.க பாடசாலையும் புதிய கட்டிடங்களுடன் சிறப்பாக இயங்குகின்றது. காஞ்சிபுரம் என்னும் கிராமம் பெரிய பரந்தன் கிராமத்திற்கு மிக அருகே உள்ளது. நீலனாறு இரு கிராமங்களையும் பிரிக்கின்றது. நீலன் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைக்கப்படும் ஆயின் காஞ்சிபுரம் மாணவர்கள் நூறு பேர் வரை கிளி/பரந்தன் அ.த.க பாடசாலைக்கு வந்து தமது கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யலாம். எண்பத்தைந்து குடும்பங்களுக்கு மேலே வாழும் காஞ்சிபுரம் கிராமத்திற்கு என ஒரு பாடசாலை இல்லை. சுமார் ஐந்து கிலோமீற்றர் நடந்து சென்று கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலேயே கல்வி கற்கின்றனர்.
கலை
பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தனில் காத்தான் சிந்து நடைக் கூத்து, கண்ணகி கோவலன் கூத்து என்பன சிறந்து விளங்கின. கிளி/பரந்தன் அ.த.க பாடசாலை மாணவர்கள் பலமுறை கோட்ட மட்ட, மாவட்ட மட்டப் போட்டிகளில் முதலாவதாக வந்து தமது பாரம்பரியத்தை நிலை நாட்டினர்.
சமய நம்பிக்கை
பொறிக்கடவை அம்மன் கோவிலைத் தவிர பெரிய பரந்தனில் பள்ளமோட்டைப் பிள்ளையார், குழந்தையன் மோட்டைப் பிள்ளையார், பாடசாலையடிப் பிள்ளையார் என மூன்று பிள்ளையார் கோவில்கள் சிறிய அளவில் கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன. குஞ்சுப்பரந்தனில் ஒன்று, செருக்கனில் ஒன்று எனப் பிள்ளையார் கோவில்கள் உண்டு. இவை தவிர காட்டுக் கரைகளில் காளி கோவில், வைரவர், வீரபத்திரர், ஐயன் கோவில்கள் அமைக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி வழிபாடும் பொங்கலும் மடையும் இடம்பெறுகின்றன. இக் கோவில்களில் பறைமேளம் அடித்தலும், கலை ஆடுதலும் இடம்பெறுகின்றன. நோய்களுக்கு கலையாடி திருநீறு போடும் வழக்கம் இன்றும் வழக்கில் உள்ளன.
ஒரு காலத்தில் சுய நிறைவு பெற்று செல்வத்தில் கொழித்த பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், செருக்கன் கிராமம் இன்று கவனிப்பாரற்று கிளிநொச்சி மாவட்டத்தில் ஓர் மூலையில் உள்ளன. இக்கிராமங்கள் மீது அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும். நீலனாறு, கொல்லனாறு ஆழப்படுத்தப்பட வேண்டும். காஞ்சிபுரத்திற்கும் பெரிய பரந்தனுக்குமிடையே நீலனாற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட வேண்டும். இது வரை எவ்வித உதவியும் இன்றி வாழும் செருக்கன் கிராம மக்கள் மீது அரசு கூடுதல் கரிசனை காட்ட வேண்டும்.
பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், செருக்கன் மக்களின் வேறு வருமானங்கள்
1. சித்திரை மாதம் காட்டில் ஈச்சம்பழம் பறித்தல்.
2. வைகாசி மாதம் காட்டில் பாலப்பழம் பறித்தல். பாலப்பழம் சாவகச்சேரி, யாழ்ப்பாணம், சுன்னாகம் சந்தை வரை சந்தைப்படுத்தப்படும். பாலப்பழப் பாணி காய்ச்சுதல் உபதொழிலாகும்.
3. அரசினால் தடை செய்யப்படும்வரை இயற்கையாய் விளைந்த உப்பை அள்ளல்.
4. தாராளமான விறகு
5. விளாங்காய், புளியங்காய்களையும், பழங்களையும் வனத்திலிருந்து பெறல்.
6. தூதுவளை முதலிய பலவகைக் கீரைகளையும், மூலிகைகளையும் வனத்திலிருந்து பெறல்.
கிளி/பரந்தன் அ.த.க பாடசாலையில் கற்று அரச உத்தியோகம் பார்த்தோர்விபரம்
1. திரு.த.க.மகாலிங்கம் – பரந்தன் கிராம விதானையாகவும், பரந்தன் கிராம சேவையாளராகவும் கடமை புரிந்தவர். கிளிநொச்சி நகர கிராம சேவையாளராகக் கடமை புரியும் போது உயிர் துறந்தவர்.
2. திரு.வே.பாலசுந்தரம் – கிளி/உருத்திரபுரம் ம.வி யின் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்த ஆசிரியர். இலங்கைத் தமிழாசிரியர் சங்க நீண்டநாள் உறுப்பினர். பொறிக்கடவை அம்மன் அறங்காவல் குழு முன்நாள் பொருளாளர்.
3. திரு.க.ம.பத்மநாதன் – ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர். கிளிநொச்சி கல்வி அறக்கட்டளை தலைவர். பொறிக்கடவை அம்மன் அறங்காவல் குழுத்தலைவர்.
4. திரு. பேரம்பலம் சச்சிதானந்த சுந்தரம் – ஓய்வுநிலை அதிபர். ஓய்வு பெறும் போது கிளி/புன்னை நீராவி அ.த.க.பாடசாலை அதிபர். சமாதான நீதவான்.
5. திரு.ம.பத்மநாபன் – ஓய்வுநிலை அதிபர். கடைசியாகக் கடமையாற்றிய பாடசாலை கிளி/பரந்தன் இந்து ம.வி.
இப்பட்டியல் மேலும் தொடரும்.
தொடரும்…
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்