Sunday, March 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை அகவை அறுபதை எய்திய தாமரைச்செல்வி

அகவை அறுபதை எய்திய தாமரைச்செல்வி

6 minutes read

தாமரைச்செல்வி என்றதும் ‘பச்சை வயல் கனவு’, ‘சுமைகள்’, ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘மழைக்கால இரவு’, ‘அழுவதற்கு நேரமில்லை’ எனும் நீண்ட உன்னதமான நூல்களின் பட்டியலுக்கு அப்பால் கூடவே அவரது எளிமையும், கனிவும் நினைவிற்கு வந்துவிடும். அகதிகள், இடம் பெயர்ந்தவர்களது சொல்லொணாத் துயர் பற்றி எண்பதுகளிலிருந்து எழுத வந்தவர்களுள் அநேகமானவர்கள் தமது எழுத்தில் வடித்திருக்கிறார்கள். அத்தகு அகதிகளுக்கு நேரடியாக உதவிகள் செய்து அவர்களது இன்னல் களைய எத்தனை எழுத்தாளர்கள் தயாராக இருந்தார்கள்? அந்த வகையில்… அர்ப்பணிப்பு மிக்க தாமரைச் செல்வியின் வகிபாகம் மிக முக்கியமானது.

pachai

பரந்தன், குமரபுரத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட தாமரைச் செல்வி விவசாயக் குடும்பம் ஒன்றில்  தலைப்பிள்ளையாக 04.08.1953இல் பிறந்தார். கூட்டுக் குடும்ப முறையில் இயங்கும் அற்புதமான மிக விசாலித்த வம்சப் பின்னணியில் மூத்த பிள்ளையாகத் தோன்றியதால் கனிவும், கருணையும் இயல்பாகவே இவர் வசப்படக் காரணமாயிற்று எனலாம். எழுபதுகளின் பிற்கூற்றில் தாமரைச்செல்வி எழுத ஆரம்பிக்கின்றார். எடுத்த எடுப்பிலேயே வீரகேசரியின் ‘மாதமொரு நாவல் வெளியிடும் திட்டத்தில்’ உள்ளீர்க்கப்படுகிறார். ‘சுமைகள்’ எனும் இவரது நாவல் வீரகேசரி வெளியீடாக வெளிவந்தபோது இவருக்கு வயது 24 மட்டுமே.

மெய்யனுபவங்களையும் பிறர் வாயிலாகக் கேட்டறிந்தவற்றையும் கலாரீதியாகக் கூறி வாசகரிடையே அவற்றினைத் தொற்ற வைப்பதோடு தமிழ்ப் புனைக்கதை இலக்கியத்தில் முகிழ்விடும் நவீன சொல்நெறிகள் பற்றிய பிரக்ஞைக்கு உட்பட்டு எழுதுவதுமே தாமரைச் செல்வியின் வெற்றிக்கான காரணிகள் எனக் கொள்ளலாம்.

என்னைப் பொறுத்தமட்டில் தாமரைச்செல்வியின் எழுத்துக்களை இரண்டாக வகைப்படுத்தலாம். முதலாவது வன்னி மண் பற்றிய அவரது விவரணப் பாசாங்கான எழுத்து, அதற்கு உதாரணமாக ‘பச்சை வயல் கனவு’ எனும் அரச சாகித்ய விருது பெற்ற நாவலையும் ‘சுமைகள்’ என்ற வீரகேசரி பிரசுரத் தொடரில் வெளிவந்த நாவலையும் போராட்ட காலத்தற்கு முந்திய அவரது சிறுகதைகளையும் கொள்ளலாம்.

இரண்டாவது வகை போர்க்காலங்களில் வெளிவந்த அவரது எழுத்துக்கள். ‘வீதியெல்லாம் தோரணங்கள்’ என்ற குறுநாவல். இது வட கிழக்கு மாகாணத்தில் பரிசு பெற்றது. அத்துடன் அக்காலகட்டங்களில் வெளியான ஏராளமான அவரது சிறுகதைகள். ‘ஒரு மழைக்கால இரவு’, ‘அழுவதற்கு நேரமில்லை’, ‘வன்னியாச்சி’ போன்ற இவரது சிறுகதைத் தொகுப்புகளில் இத்தகு கதைகள் உள்ளடக்கம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இந்த இரண்டு வகையான எழுத்துக்களிலும் மேலோங்கி நிற்பது விவரணப் பாங்கான அவரது எழுத்துக்கள் என்பதே எனது கருத்து. பிரசாரத் தொனியற்ற இயல்பான கலையாக்கத்தை இத்தகு படைப்புக்களிலேயே என்னால் தரிசிக்க முடிகின்றது.

விவரணப் பாங்கான தாமரைச் செல்வியின் எழுத்துக்களுக்கு அவரது பின்புலமும் வாழ்ந்த சூழலும் காரணமாகின்றன. ஏலவே நான் குறிப்பிட்டது போல் அவரது அடையாளங்களாக விளங்கும் கருணை, கனிவு போன்ற தனிப்பட்ட குணாம்சங்களும் இத்தகு வெற்றிக்கு கைகொடுத்து உதவியிருக்கின்றன என்றால் அக்கூற்று மிகையானதன்று.

ஆயினும் போர்க்காலச் சூழல், போரின் அவலச் சாவுகள், அழிவுகள், பதற்றம் நிறைந்த மனங்கள் ஆகியவற்றை தனது படைப்புக்களில் யதார்த்தமாகச் சித்தரிப்பதில் தாமரைச் செல்வி தனக்கென ஓர் முத்திரை பதித்துள்ளார் என்பதிலும் இரு கருத்திருக்க முடியாது.

thaakam

தாமரைச்செல்வி பற்றிக் கதைக்கும் பொழுது என் நினைவிற்கு எட்டும் இன்னொரு விடயத்தினையும் இங்கு கோடிட்டுக் காட்டுதல் பொருந்தும் என நினைக்கிறேன். சக்தியற்ற பெண்களின் மௌன உணர்வுகளுக்கு வடிவங் கொடுப்பதில் தாமரைச் செல்வி வல்லமையானவர். ஆயினும் பெண்ணுரிமை பற்றிய சர்ச்சைகள் எவற்றிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவே மாட்டார். அவரது இயல்பான சுபாவமும் அதற்குக் காரணமாகின்றது.

1977 இல் தாமரைச் செல்வியின் இலக்கியப் பயணம் ஆரம்பிக்கின்றது. ஏலவே குறித்தது போலவே கன்னி முயற்சியாக சுமைகள் நாவல் வெளியாகின்றது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’(1992), ‘தாகம்’(1993), ‘வேள்வித்தீ’(1994) ஆகிய மூன்று படைப்புக்களும் நாவல்களாகவே அமைகின்றன. அதன் பின்னர் 1998 இல் இவரது முதலாவது சிறுகதை தொகுப்பாக ‘ஒரு மழைக்கால இரவு’ நூல் வெளிக் கொணரப்படுகின்றது. ‘அழுவதற்கு நேரமில்லை’(சிறுகதைத் தொகுப்பு -2002), ‘வீதியெல்லாம் தோரணங்கள்’(நாவல் -2003), ‘வன்னியாச்சி’(சிறுகதைத் தொகுப்பு -2005), ‘பச்சைவயல் கனவு’ (நாவல்) ஆகியன இவரது ஏனைய நூல்களாகும்.

vaniyachi

தாமரைச்செல்வி பற்றி ‘ஈழத்துச் சிறுகதை வரலாறு’ எனும் தனது ஆய்வு நூலில் செங்கை ஆழியான் பின்வருமாறு குறிக்கின்றார். ‘தாமரைச் செல்வியின் சிறுகதைகளில் காணப்படும் தூக்கலான விடயம் கதையம்சமாகும். அகவயப்பட்ட உணர்வுகளிலும் பார்க்க அவரது சிறுகதைகளில் புறவயப்பட்ட அழுத்தங்கள் சிறப்பாக அமைந்திருக்கும்.’(பக்கம்:244).

மு.பொன்னம்பலம் அவர்களின் அண்மைக்கால ஆய்வு ஒன்று பின்வருமாறு கூறுகின்றது. ‘கருபொருள் என்ற மையத்தை வைத்து அதைச் சுற்றி எழுதப்படும் கதைகளை தட்டையான கதைகள் என்கின்றோம். இம்முறை பழைமையானது. தாமரைச் செல்வியின் ‘அழுவதற்கு நேரமில்லை’ தொகுப்பில் உள்ள சிலகதைகளில் அவற்றிலிருந்து விடுபட்ட நவீன போக்கினைக் காண முடிகின்றது.’

தாமரைச்செல்வியின் கதைகள் திரைப் படங்களுக்குரிய கட்டமைப்பினையும் கதை சொல்லும் முறையினையும் கொண்டு விளங்குவதால் இவரது சில கதைகள் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ள செய்தியினையும் இவ்விடத்தே பகிர்தல் பொருத்தமானதாகும். இந்த வகையில் உதிரிப்பூக்கள் மகேந்திரன் தயாரித்த ‘இடைவெளி’, செ.தே.இமயவர்மன் தயாரித்தளித்த ‘பசி’ போன்ற கதைகள் உடன் நினைவிற்கு வருகின்றன.

கருணாகரன் ‘எதுவரை’ எனும் சஞ்சிகையில் சில காலங்களுக்கு முன்பு தாமரைச் செல்வி பற்றிச் செய்த ஆய்வு ஒன்றில் ‘தாமரைச் செல்வியின் பெரும்பாலான கதைகளில் அவருள் ஓடிக்கொண்டிருக்கும் ‘கனிவு’ என்ற குருதி தான் எளிமையான கூறுமுறையில் அவர் உணர்த்த முனையும் சங்கதியான ‘அறம்’ என்ற அடையாளத்தை முன்னிறுத்தத் துடிக்கின்றது எனக் குறிக்கின்றார். இந்த அறம் எதன்பாற்பட்டது என்றால், வாழ்க்கையின் சவால்களை எய்துவதற்கு சமனிலையற்ற முறையில் மனிதரை மனிதர் பயன்படுத்தும் அரசியலையும் அந்தச் செல் முறையையும் எதிர்க்கும் அறம் இது என்பது தாமரைச் செல்வியின் நிலைப்பாடு’ எனவும் கூறுகின்றார் கருணாகரன்.

எந்த இலக்கிய இயக்கங்களுடனும் அல்லது இலக்கியப் போக்கிலும் தன்னைப் பிணைத்துக் கொள்ளாது சுயமாக இலக்கிய உலகில் நின்று வெற்றி பெற்ற பெருமை தாமரைச் செல்விக்கே உரியது. உள்நாட்டிலும் தற்போது அடிக்கடி அவுஸ்திரேலியா சென்று வரும் போதும் தொடர்ந்தும் அதனைப் பேணி வருவது அவருக்கே உரித்தான இயல்பாகவே அமைகின்றது.

acca5

தாமரைச்செல்வியின் வெற்றிக்குப் பின்னால் அவரது குடும்பத்தினரின் பங்களிப்பு ஆரம்பகாலம் முதல் இருந்து வந்திருக்கின்றது. முதலில் பெற்றோர், உடன்பிறந்தவர்களும் இடைக்காலத்தில் அவரது துணைவர் கந்தசாமியும், பிற்காலங்களில் மருத்துவர்களாகக் கடமை புரியும் அவரது இரு புதல்விகளும், குடும்பத்தினரும் அவருக்குப் பெரும் ஆதரவினை வழங்கியிருக்கின்றார்கள். இதனை பல இடங்களில் பெருமையுடன் அவர் சொல்லி மகிழ்ந்திருக்கின்றார்.

தாமரைச் செல்வியுடனான எனது இலக்கியத் தொடர்பு முப்பது வருடங்கள் பழைமை வாய்ந்தது. ஆயினும் குடும்ப நண்பர்களாக அது பரிணமித்து பத்து ஆண்டுகளுள் தான். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவரது புதல்விகள் மருத்துவக் கற்கையினை மேற்கொண்ட புத்தாயிரமாண்டின் முற்கூற்றில் தான் அவரையும் அவரது குடும்பத்தினரையும் நான் முதன்முதலாக நேரில் சந்தித்ததாக ஞாபகம். அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை ஒரு உடன்பிறந்த மூத்த சகோதரியாக நின்று பழகி வரும் அவரது உயர்ந்த பண்பு உண்மையில் வியக்க வைப்பது.

தொலைபேசியின் மறுமுனையில் இருந்து ‘நான் அக்கா கதைக்கிறன்’ என்று கூறும் அவரது வார்த்தைகள் வெறும் உதட்டளவில் இருந்து வருவதாக நான் உணர்வதில்லை. இத்தகு கருணை உள்ளமே அவரது இலக்கிய வெற்றியை இந்தளவிற்கு இலகுவாக்கியிருக்கின்றதோ என நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு.

தேசிய சாகித்திய மற்றும் வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் தனது படைப்பிலக்கியங்களுக்காக சர்வதேச ரீதியிலும், அகில இலங்கை ரீதியிலும் முதற் பரிசுகளையும் தட்டிக் கொண்ட ரதி கந்தசாமி எனும் இயற்பெயரைக் கொண்ட தாமரைச்செல்வி வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநர் விருதினையும் இளவயதிலேயே பெற்ற பெருமைக்குரிய ஒருவராவார்;.

ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்கள் என வகைப்படுத்துகையில் தாமரைச் செல்வியின் பெயருடனேயே பெரும்பாலும் எம் பெருவிரல் மடிகின்றது. அத்தகு அதிர்வை ஏற்படுத்திய சகோதரி தாமரைச் செல்வி மென்மேலும் பல்லாண்டு நீடு வாழ்ந்து இலக்கிய உலகிற்கு இன்னும் கனதிமிக்க பல பனுவல்களைத் தர வேண்டும் என, அகவை அறுபதில் கால் பதிக்கும் இன்றைய தினத்தில் அவரை மனதார வாழ்த்துவோமாக.

velon   புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் | எழுத்தாளர்

நன்றி | ஞாயிறு தினக்குரல் | 04/08/2013

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More