
கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் பருவகால தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் உள்ள பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
அத்துடன் இத்தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் சுரண்டல்களுக்கு உள்ளாவதாகவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை எதிர் கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக பழ மற்றும் காய்கறி பண்ணைகளில் பணியாற்ற பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை ஆஸ்திரேலிய அரசு அனுமதிக்கிறது.
பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை முந்தைய காலங்களில் மிகக்குறைவாகவே இருந்திருக்கிறது. 2018-2019 க்கு இடைப்பட்ட காலத்தில் ஒருவரும் உயிரிழக்கவில்லை. அதே சமயம் 2017-2018 க்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
அந்த வகையில், தற்போதைய உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்கு தேவையான பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படாததே காரணம் எனப்படுகிறது.
இந்த இறப்புகள் தொடர்பான விவரங்களை ஆஸ்திரேலிய அரசு வழங்க மறுத்து வரும் நிலையில், உயிரிழந்த 16 தொழிலாளர்களில் 7 பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக கூறப்படுகிறது.