ஜோர்ஜ் புயல் :70 மைல் வேகத்தில்…..

பல வாரங்களாக, கடும்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இங்கிலாந்தின் பல பகுதிகள் பேரழிவுக்குள்ளாகியுள்ள நிலையில் இந்த வார இறுதியில் ஜோர்ஜ் புயல் தாக்கவுள்ளது.

இந்த வார இறுதியில் தாக்கவுள்ள ஜோர்ஜ் புயலினால் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் 70 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

70 மைல் வேகத்தில் வீசும் காற்று கடலோரப் பகுதிகளைத் தாக்குவதுடன் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 80-100 மிமீ வரை மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் சனிக்கிழமை நண்பகல் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை இருக்கும் எனவும் வேல்ஸ் மற்றும் வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு 60-80 மி.மீ கடும் மழை பெய்யும் எனவும் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வெள்ளம் நிறைந்துள்ள பகுதிகளில் மழை பெய்யும் நிலையில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

வடக்கு அயர்லாந்து, வேல்ஸ், தெற்கு ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் பெரும்பகுதிகளுக்கு காற்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

கடலோரப் பகுதிகளில் 65-70 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும். இருப்பினும் அயர்லாந்து குடியரசு முழுவதும் வலுவான மற்றும் மிகவும் தீங்கு விளைவிக்கும் காற்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு ஐரோப்பாவில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் குழுவிலுள்ள ஸ்பானிஷ் வானிலை சேவை இந்தப் புயலுக்கு பெயரிட்டுள்ளது.

மற்றைய நாடுகளின் வானிலை சேவைகளும் அந்தப் பெயரைப் பயன்படுத்துவது வழக்கமாகும்.

ஆசிரியர்