5 மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் 5 மகள்களுடன் 40 வயது பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சேச்சாட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சரோன் கா டேராவைச் சேர்ந்த போர்வை, துணிகள் விற்று வரும் தொழில் செய்து வருபவர் சிவ்லால் பஞ்சாரா. இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள கிராமத்திற்கு தன்னுடைய உறவினர் ஒருவரின் இரங்கல் கூட்டத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் சிவ்லால் பஞ்சாராவின் மனைவி பதாம்தேவி (வயது 40) தன்னுடை மகள்கள் சாவித்திரி (வயது 14), அங்கலி (வயது 8), காஜல் (வயது 6), குஞ்சன் (வயது 4) மற்றும் ஒரு வயதேயான அர்ச்சனா ஆகிய ஐந்து மகள்களுடன் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காலையில் கிணற்றில் சடலங்களை கண்ட கிராமத்து மக்கள் போலீசாருக்கும் அவரது கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொண்ட பிறகு சடலங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த காரணமும் கூறவில்லை. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக அந்த பெண் தற்கொலை செய்திருக்கலாம் என வட்டார அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் காயத்ரி (வயது 15), புனம் (வயது 7) என்ற அவர்களது இரு மகள்களும் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சி.ஆர்.பி.சி-யின் பிரிவு 174-ன் கீழ் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் விதத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆசிரியர்