நீதி அமைச்சினால் நீதிக்கான அணுகல் என்ற பெயரில் விசேட நடமாடும் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஊடான சேவை களை பொதுமக்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதற்காக நாடளாவிய ரீதியில் நீதிக்கான அணுகல் (ACCESS TO JUSTICE ) எனும் விசேட நடமாடும் சேவையை ஆரம்பிக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான நிகழ்வு நீதி அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் நேற்று நீதியமைச்சில் இடம்பெற்றது.
இந்த நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.வடமாகாணத்தில் முதலாவது நடமாடும் சேவை ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை வடமாகாணத்தில் நடைபெறும். அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள், சமூக தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, பொது மக்களை பாதிக்கும் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டல், நல்லிணக்கம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துதல், போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தல், வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்காக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுதல் போன்ற வசதிகள் அதே இடத்தில் வழங்கப்பட உள்ளன.
இந்த நடமாடும் சேவைக்காக நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சுக்களின் கீழுள்ள அரச நிறுவனங்களுக்கு மேலதிகமாக பல்வேறு அரச நிறுவனங்களின் உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இளைஞர் சமூகம் எவ்வாறு தொழில் வாய்ப்புக்களை அணுகுவது என்பது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் இந்த நடமாடும் சேவை மேற்கொள்ளப்படும்.