ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் பிரவேச சீட்டுக்களை தொலைபேசி மூலமாக ஒதுக்கீடு செய்வதற்கான முறைமையொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இச் செயற்றிட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் தனியார் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமொன்றுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், இந்த புதிய முறைமையை அறிமுகப்படுத்தினால் அது எதிர்காலத்திலும் பெரும் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் கடந்த 23 ஆம் திகதி முதல் ஆரம்பமானதுடன் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நேற்றும் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும் ரயில்வே பொதுமுகாமையாளர் தலைமையிலான உயரதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதையடுத்து ரயில்வே தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.