September 25, 2023 5:46 am

ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் யார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் நாட்டுக்குள் உள்ளார்கள் என ஜனாதிபதிக்கு நெருக்கமானவரான வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இது சாதாரணமானதொரு கருத்தல்ல, யார் அந்த 25 பேர் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பினார்கள். இவ்விடயம் குறித்து ஆளும் தரப்பின் உறுப்பினர்களில் பொறுப்பான தரப்பினர் எவரும் பதிலளிக்கவில்லை.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

விசேட கேள்வியை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐ.எஸ்.ஐ.எஸ்.குண்டுத்தாக்குதல்தாரிகள் நாட்டில் உள்ளார்கள் என ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார். நாட்டை மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் திட்டமா இது என்றார்.

விவாதத்தில் உரையாற்றிய  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண ஊழல் மோசடியால் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை முழு உலகமும் நன்கு அறியும். ஊழலை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் இன்றும் அரச நிர்வாகத்தில் ஊழல் மிதமிஞ்சியுள்ளது.

இனவாத கருத்துக்கள் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது.இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெற்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சுற்றுலா பிரயாணிகள் எவ்வாறு நாட்டுக்கு வருவார்கள். ஜனாதிபதிக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் கருத்து பாரதூரமானது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் நாட்டில் உள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அலட்சியப்படுத்த முடியாது. இந்த கருத்து குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன பயிற்சிப் பெற்றுள்ள அந்த 25 பேர் யார் என கேள்வி எழுப்பினார்.

விவாதத்தில்  உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வேலுகுமார் , ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பில் பயிற்சிப் பெற்றவர்கள் நாட்டில் உள்ளார்கள் என அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். குருந்தூர் மலை விவகாரத்தால் இலங்கையில் மீண்டும் இனவாத கலவரம் தோற்றம் பெறும் சூழல் காணப்படுவதாக இந்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ? ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற மக்களை பலியாக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்