இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இதனை யதார்த்தபூர்வமாக அணுகவேண்டியது அவசியம் எனவும், அரசியலமைப்புசார் மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் எவையும் இல்லாத நிலையில் 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாகத்தை வலியுறுத்துவதே சிறந்தது என்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாரம் வடமாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்திலுள்ள ஃபொக்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகி சுமார் ஒருமணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் சார்பில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாணசபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் பற்றிய நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய அமெரிக்கத்தூதுவருக்குப் பதிலளித்த தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், ‘தமிழர் இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வாக நாம் 13 ஆவது திருத்தத்தைக் கருதவில்லை.
இருப்பினும் தற்போது அதுவே அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அத்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். ஆனால் 13 ஆம் திருத்த அமுலாக்கம் தொடர்பில் இத்தனை பரபரப்பு அவசியமற்றதொன்றாகும்.
இதனை முழுமையாக அமுல்படுத்துவதை இலக்காகக்கொண்டு மாகாணசபைத்தேர்தல்களை நடாத்தவேண்டுமெனில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை நிறைவேற்றினால் போதுமானதாகும். எதுஎவ்வாறெனினும் ஜனாதிபதித்தேர்தல் நடைபெறும் வரை வேறெந்தத் தேர்தலும் நடாத்தப்படமாட்டாது என்றே நாங்கள் கருதுகின்றோம்’ என்று குறிப்பிட்டனர்.
அதனை செவிமடுத்த தூதுவர் ஜுலி சங், இவ்விடயத்தை யதார்த்தபூர்வமாக சிந்தித்து அணுகவேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன் தற்போது அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இல்லை என்றும், எனவே 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்தை வலியுறுத்துவதே சிறந்தது என்றும் தெரிவித்தார்.
அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணி அபகரிப்பு மற்றும் காணி விடுவிப்பு நெருக்கடிகள் குறித்து அமெரிக்கத்தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்த தமிழ்ப்பிரதிநிதிகள், குறிப்பாக குருந்தூர் மலை விவகாரம் உள்ளடங்கலாக வடக்கில் நிகழும் பௌத்த விகாரை கட்டுமானங்கள், சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புக்கள் என்பன பற்றிப் பிரஸ்தாபித்தனர்.
அதுமாத்திரமன்றி இவை சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதுடன் தமிழ்மக்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிக்கும் நோக்கிலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய அவர்கள், இவற்றின் மூலம் மிகமோசமான இனக்கலவரம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாக்கப்படுவதாகவும் அச்சம் வெளியிட்டனர்.
அதற்குப் பதிலளித்த தூதுவர் ஜுலி சங், மதரீதியான அடக்குமுறைகள் மிகவும் தவறானவை என்றும், தவிர்க்கப்படவேண்டியவை என்றும் கூறியதுடன் ‘இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில், இந்தியாவிலிருந்து வருகைதந்த இந்துத்துவக்குழுக்கள் தலையிடுகின்றனவா?’ என்று கேள்வி எழுப்பினார். அதுகுறித்துத் தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என்று பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள், அத்தகைய சம்பவங்கள் இடம்பெறுமாயின் அவை சிங்கள பௌத்த பேரினவாதிகளாலேயே தூண்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
மேலும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ள விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் தட்டிக்கழித்துவருவதாகவும், எனவே இச்செயன்முறையில் தமிழ்மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதாகவும் தூதுவரிடம் தெரிவித்த அவர்கள், எனவே மேற்படி தீர்மானத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு வழங்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.
அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டியதன் அவசியம், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் பாதகமான தன்மை, மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுனர்கள் மற்றும் புத்திசாலிகளின் வெளியேற்றம் போன்ற விடயங்கள் பற்றியும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத்தூதுவருடன் கலந்துரையாடினர்.