தலங்கம மற்றும் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். பத்தரமுல்லை, தலங்கம கொரம்பே பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவர் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாளக்குழுக்களின் தலைவர் – தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பத்தரமுல்லை பண்டி என்பவரின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருக்கும் பாதாள குழுக்களின் செயற்பாட்டாளரான கட்டா என்பவரால் திட்டமிட்டு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டாவின் பாதாளக் குழுக்களின் தரப்பினருக்கும், பண்டியின் பாதாளக் குழுக்களின் தரப்பினருக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பிரதான துப்பாக்கிதாரி கட்டாவின் பிரதான செயற்பாட்டாளர் என்பதுடன் கட்டா மெசன்ஜர் மூலம் இந்த துப்பாக்கி பிரயோகத்தை திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக உள்ள முச்சக்கரவண்டி திருத்தும் நிலையம் ஒன்றுக்குள் இருந்தவர் மீது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் புதிதாக முச்சக்கரவண்டி பழுது பார்க்கும் நிலையத்தை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் வர்த்தக நிலையத்தை திறக்க வேண்டாம் என சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் காயமடைந்த நபர் தனது சகோதரருடன் இணைந்து வர்த்தக நிலையத்தை திறந்துள்ளார். இந்த பின்னணியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த துப்பாக்கி பிரயோகத்தை அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை மறைத்து வைப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 22 வயதுடைய காலி, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.