September 25, 2023 8:28 am

கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிப்பதா இல்லை நடுநிலை வகிப்பதா என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றக் குழு கூடித் தீர்மானிக்கவுள்ளது.

இதேவேளை, குறித்த பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது எதிர்த்துவாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஆறாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எமது பாராளுமன்றக் குழு கூடியே தீர்மானிக்கும். அக்கூட்டம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வு நாட்களில் நடைபெறவுள்ளது என்றார்.

அதேவேளை, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் கருத்து வெளியிட்ட செல்வம் அடைக்கலநாதன், எமது கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதென்று குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்