செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிழக்கு பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தலும் ஆர்ப்பாட்டமும்

கிழக்கு பல்கலையில் நடந்த இனப்படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தலும் ஆர்ப்பாட்டமும்

3 minutes read

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச்சென்று காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டமும் இடம்பெற்றது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முகாமில் தஞ்சமடைந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்.

இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி, கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர் வி.கஜரூபன், சிவில் சமூக செயற்பாட்டாளர் ரஜனி ஜெயபிரகாஸ், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் திட்ட முகாமையாளர் நா.மிருஜா உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்கலைக்கழக வளாகத்தின் முன் பதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டதுடன் உறவுகள் மற்றும் மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம் செலுத்தியும்  மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

1990.09.05 அன்று அகதி முகாமுக்குள் நுழைந்த இராணுவம் தங்களை அறிமுகப்படுத்தி, பின்னர் ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட வயதுடையவர்களை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

மைதானத்தில் வரிசையில் நிறுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட முகமூடி மனிதர்கள் முன் நிறுத்தப்பட்டு, முகமூடி மனிதர்களால் தலையாட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்த சம்பவத்தை வருடங்கள் 34 கடந்தும் தங்கள் அனுபவ ரீதியாக பலரும் நினைவுகூருகிறார்கள்.

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழுவானது பாதுகாப்பு அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்தது.

1990 செப்டம்பர் 5ஆம் திகதி 32 பேரை மட்டுமே விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் 24 மணிநேரத்துக்குள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் எனவும் அவ்வேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த எயர்மார்சல் பெர்னாண்டோ இதற்கான பதிலை அனுப்பியிருந்தார். இந்த பதிலை மட்டக்களப்பு சமாதானக் குழு நிராகரித்தது.

விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாள் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த ஜெரி சில்வா உட்பட பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினரும் சென்றிருந்தனர்.

இராணுவத்தினரே எமது உறவுகளை அழைத்துச் சென்றதாக மக்களும் முகாம் பொறுப்பாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்த வேளை கடும்தொனியில் இராணுவ அதிகாரிகள் பதிலளித்ததாக  கூறப்படுகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்காக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் பலர் சாட்சியமளித்தனர்.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே செப்டெம்பர் 5ஆம் திகதி 158 பேரையும், 23ஆம் திகதி 16 பேரையும் கைது செய்து கொண்டுசென்றனர் என தெரிவித்திருந்தது.

எனினும் இதுவரையில் இவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் 34வது வருடமாக உறவுகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More