செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்

ஒரு பத்திரிகையாளரும் பனங்காய்ப் பணியாரமும் | வீ. தனபாலசிங்கம்

1 minutes read

யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பத்திரிகையாளர்.தினமும் இரவில் என்னுடன் கொழும்புக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பலதும் பத்தும் பேசுவார்.இன்றும் பேசினார்.

அவர் வழமையாக செய்தித்துறை மற்றும் நாட்டு நடப்புகள் குறித்தே பேசுவார்.ஆனால், அவர் இன்று வழமைக்கு மாறாக, பனங்காய்ப் பணியாரம் பற்றிப் பேசத்தொடங்கினார். நாங்கள் அதை ஊர்வழக்கில் பனங்காய்க்காய் என்று சொல்வதுண்டு.

என்ன சமாச்சாரம் இன்று பனங்காய்ப் பணியாரத்துடன் கதை தொடங்குகிறது என்று நான் கேட்டேன். தனது இளைய மகள் இன்று அந்தப் பணியாரத்தை சுட்டு தனக்கு தந்ததாகவும் நல்ல சுவையாக இருந்ததாகவும் அதனால்தான் அந்த கதையை எடுத்தேன் என்றார் அவர்.

இந்தக்காலத்து யாழ்ப்பாண இளம் பெண்பிள்ளைகளுக்கு எமது பாரம்பரிய இன்சுவை பலகாரங்களில் ஒன்றான பனங்காய் பணியாரத்தை சுடத்தெரியாது.தனது மகள் சுட்டுவிட்டாள் என்ற பெருமிதத்துடன் கதையைத் தொடர்ந்தார்.

இப்போதைய பிள்ளைகளுக்கு ஒடியல் கூழ் தயாரிக்கத்தெரியாது.ஓடியல் பிட்டு அவிக்கத் தெரியாது.நெத்தலி, இறால் போன்ற மீன் வகைகளுடன் கீரையும் போட்டு ஒடியல் பிட்டு அவித்தால் அதன் சுவையே தனி. பனங்கிழங்கில் ஒரு துவையல் செய்து பின்னேரம் தேநீருடன் சாப்பிட்டால் இரவுச் சாப்பாடே வேண்டாம்…..என்று நண்பர் அடுக்கிக்கொண்டே போனார்.

கொழும்பில் கொரோனா முடக்கத்தினால் உணவுப்பொருட்களுக்கு பெருந்தட்டுப்பாடு நிலவும் வேளையில் சைவக்கடையில் ஓடர் பண்ணி எடுத்துச்சாப்பிட்டுக் கொண்டிருக்கின்ற எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை….பொறுத்துக்கொண்டு பனங்காய்ப் புராணத்தை கேட்டுத் தொலைக்கவேண்டியதாயிற்று.

ஆனால், அவர் சொன்னதில் ஒரு உண்மையிருக்கிறது. எமது மூதாதையர் பாரம்பரியமாக ஒரு செலவும் இல்லாத நல்ல உணவு வகைகளை எம்மைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களில் இருந்து தயாரித்தார்கள்.அவர்கள உடலாரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழவும் செய்தார்கள். இப்போதைய பிள்ளைகள் அந்த பாரம்பரியத்தில் நாட்டம் காட்டுவதில்லை. மறந்தே விட்டார்கள்.

என்றாலும் நண்பரின் பனங்காய்பணியாரக் கதை நீண்டுகொண்டு போவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் யாரோ வாசலில் கூப்பிடுகிறார்கள்…பிறகு தொலைபேசியல் அழைக்கிறேன் என்று சொல்லி வெட்டிவிட்டேன். நண்பர் பனங்காய்ப் பணியாரத்தில் ஒரு பிடி பிடித்திருக்கிறார் போலும்……! அடுத்த தடவை யாழ்ப்பாணம் போனால் நண்பர் வீட்டக்குப் போய் பனங்காய் பணியாரம் சாப்பிட ஆசை.அதற்குள் பனம்பழம் விழுகிற காலம் தாண்டிவிடும் என்றுதான் கவலை.

ஈழத்தின் மூத்த பத்திரிகை ஆசிரியரான வீ. தனபாலசிங்கம் ஊருக்கு நல்லது சொல்வேன் என்ற பத்தி நூலையும் எழுதியவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.