சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிப்பதற்கும், இவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மிகவும் வெளிப்படையான அணுகுமுறையில் கட்டுப்படுத்துவதற்கும் ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளரும், ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டங்களை மதித்து நடக்கும் சமூகம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் சிறைச்சாலை நடைமுறையில் மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ என்ற கருத்தாக்கம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு பாதுகாப்பான நாடு, ஒழுக்கம், மற்றும் சட்டத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’ யில் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறும் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வில் ஜெனரல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான ஜெனரல் கமல் குணரத்னவை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய வரவேற்றார். ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறும் 194பேரினால் பாதுகாப்புச் செயலாளருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் அங்கு மேலும் உரையாற்றுகையில் “இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் 500வீரர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் 194 படைவீரர்கள் தனது பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.