விஜய் டிவி புகழ் நடிகர் அஸார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ஆனந்தராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’. இந்தப்படத்தில் விஜய் டிவி புகழ் நடிகரும், ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தின் நாயகனுமான அசார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் நடிகை மனிஷா ஜித், யோகி பாபு, மது, ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிபின் இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீடு விழாவில் மூத்த தயாரிப்பாளர்கள் கே. டி குஞ்சுமோன், ஜே எம் பஷீர், கே. ராஜன், நடிகர் ராதாரவி, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோருடன் படக்குழுவினரும் பங்குபற்றினர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஒரு இளைஞனின் காதல் தேடலாகவும், இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் அழகான காதல் கதையாகவும், ஒரு இரவில் நடக்கும் திரைக்கதையாகவும் உருவாகியிருக்கிறது.
‘கடலை போட பொண்ணு வேணும்’ என படத்தின் தலைப்பை சொன்னவுடன் தயாரிப்பாளர் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். நகைச்சுவை நிறைந்த கமர்சியல் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும் திரைப்படமாகவும் இருக்கும்.” என்றார்.
‘கடலை போட பொண்ணு வேணும்’ படத்தின் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்றிருப்பதால் இந்தப் படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.