தென்னிந்திய திரையுலகின் தன்னிகரற்ற குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் சமுத்திரகனியும், ‘பரியேறும் பெருமாள்’ பட புகழ் நடிகர் கதிரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘தலைக்கூத்தல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படத்தின் வெளியீட்டுத் திகதியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘லென்ஸ்’ திரைப்பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘தலைக்கூத்தல்’.
மார்ட்டின் தொன்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ், த்ரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை வை நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தின் வெளியீட்டுத் திகதியும் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் புகைப்படங்களோ கதாபாத்திரத்தின் தோற்றப் புகைப்படங்களோ வெளியிடாமல், சூரியகாந்திப்பூ ஒன்றின் புகைப்படத்தை மட்டும் படத்தின் தலைப்புடன் வெளியிட்டிருக்கிறார்கள். இதனுடன் இந்த திரைப்படம் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
‘தலைக்கூத்தல்’ என்பது கடந்த தசாப்தங்களில் கிராமிய பகுதிகளில் கருணைக்கொலை செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஒருவித சொல்வாடை என்பதாலும், வித்தியாசமான படங்களை தயாரித்து வழங்கி வரும் வை நாட் ஸ்டூடியோஸின் தயாரிப்பு என்பதாலும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.