இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதள பக்கத்தில் புதிய கணக்கினை தொடங்கிய தளபதி விஜய், மிகக் குறுகிய கால அவகாசத்தில் மூன்று மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறார் என திரையுலகினர் வியந்து பாராட்டுகிறார்கள்.
தளபதி விஜய் – தமிழ் திரையுலகின் வசூல் முகமாகவும், முன்னணி நட்சத்திர படைப்பாளிகளின் முதன்மையான விருப்பத் தெரிவாகவும் திகழ்ந்து வருகிறார்.
இவருக்கு மில்லியன் கணக்கிலான ரசிகர்கள் இருந்தாலும், இவரைப் பற்றி நாளாந்தம் ஏதேனும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தளபதி விஜய் இன்ஸ்டாகிராம் எனும் சமூக வலைதள பக்கத்தில் தன்னைப் பற்றிய சுய விபர குறிப்புகளுடன் பிரத்யேக காணொளிகளையும் பகிர்ந்து கொள்ளும் வகையிலான புதிய கணக்கினை தொடங்கி இருக்கிறார்.
இதற்காக அவர் தற்போது படப்பிடிப்பில் பங்கு பற்றி வரும் ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற புகைப்படத்தை தெரிவு செய்து பதிவேற்றியிருக்கிறார்.
இவரது புதிய கணக்கை மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட இணையவாசிகள் பின் தொடர்கிறார்கள். இந்த சாதனையை குறுகிய காலத்தில் படைத்திருக்கும் தளபதி விஜய்யை இணைய உலகினர் பாராட்டுகிறார்கள்.
அடிப்படையில் அமைதியானவராக இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரசியமான சம்பவங்களை இவரது புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியுடன் பார்வையிடலாம் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதுவும் அவரது சந்தை மதிப்பை உயர்த்தும் ஒரு உத்தி என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.