தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கதையின் நாயகர்களாக நடிக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்திருப்பதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
‘எஃப் ஐ ஆர்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘மிஸ்டர் எக்ஸ்’.
இதில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அனகா மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பணிகள் நடைபெற்று வரும் தருணத்தில் தற்போது நட்சத்திர பட்டியலில் சரத்குமார் இணைந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.
இதனிடையே சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ ‘பொன்னியின் செல்வன்’, ‘போர் தொழில்’ ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை எட்டியிருப்பதால் அவரது நடிப்பில் தயாராகும் ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் படத்திற்கும் ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.