“பறை என்ற சொல் ஈழத் தமிழர் வாழ்வில் மிக முக்கியமான பேச்சாகும். பெயராகவும் வினையாகவும் அமைந்துவிட்ட பறை சங்க இலக்கியத்தில் வலுவாய் இடம்பெற்றிருக்கிறது. தமிழர் மரபின் பண்டைய இசைக்கருவி பற்றிய ஜெயஸ்ரீ சதானந்தனின் புதிய கட்டுரை சங்க இலக்கியப் பதிவுகளில் 38ஆவது பகுதியாய். வாசித்து பயன்பெறுங்கள்.“ -ஆசிரியர்
பறை என்பது தொன்னெடுங்காலமாக இருந்து வந்த ஒரு இசைக்கருவி ஆகும். பறை என்பதன் இன்னொரு பொருள் சொல்லுதல், அறிவித்தல் அல்லது பறைசாற்றல் எனவும் பொருள்படும். பண்டைய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பறை இசைக்கருவிகள் நம்மவர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன. ஐவகை நிலங்களுக்கும் ஐவகையான பறை இசைக் கருவிகள் இருந்திருக்கின்றன. போர் புரிவதற்கு முன்னால் அறிவிக்கவும், வேறு பல அரசு அறிவித்தல்களையும், வெற்றி வாகை சூடுவதையும் பறை கொண்டே அறிவித்து வந்துள்ளனர். ஆதி முதல் இருந்து வந்த பறையானது எவ்வாறு பெருமை கொண்டு நடம் புரிந்தது என இங்கு காணலாம்.
புறநானூறு 263
“பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண் இரும்பறை இரவல்”
என்ற பாடலில் களிற்று யானையின் காலடி போன்ற பறையை முழக்கிக்கொண்டு உதவுபவரை நாடிச் செல்லும் இரவலனே! வழியில் உள்ள நடுகற்களை தொழாமல் சென்று விடாதே! என்று பெயர் அறியப் படாத புலவர் பாடுகிறார். இங்கு இரவலனான பாணன் காட்டு வழியே வருவதால் பறையை முழக்கி விலங்குகளை விரட்டுவதற்காகவும், தனது பாதுகாப்பிற்காகவும் பறையை இசைத்தபடி வருகின்றான்.
நற்றிணை 58
” பெருமுது செல்வர் பொன்னுடைப்புதல்வர்
சிறுகோட் கோத்த செவ்வரிப் பறையின்” என்று இந்தப் பாடலில் வருகின்றது. சிறுவர்கள் சிறு பறையை தோளில் கோத்துக் கொண்டு பொன் காப்பு அணிந்திருக்கும் கையிலுள்ள கோலால் பறையை அடித்து முழக்கிக் கொண்டு ஆடுவர் என இந்தப் பாடலில் வருகின்றது. அன்று
பல்வேறு பட்ட வாழ்வியல் நிலைகளில் பறை மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றது.
திருமுருகாற்றுப்படையில் பறை
“குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர”
எனப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் எனும் புலவர் “தொண்டகம்” என்ற குறிஞ்சி நிலத்துக்குரிய சிறிய பறைக்கு ஏற்றபடி குன்றக் குரவையாகிய கூத்தைக் குறவர்கள் ஆட, வேலனாட்டம் புரியும் வேலன் கட்டிய கண்ணியை அணிந்து கொண்டு பல மகளிரொடு முருகன் எழுந்தருளுகின்றான் எனப் பாடுகின்றார்.
ஆக இறைவனுக்கு இசைக்கும் இசைக்கருவிகளுள் பறை முதன்மையாக இருந்து வந்தமை புலனாகின்றது.
திருக்குறளில் பறை
“அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்”
என்கிறார் வள்ளுவர் தான் கேட்டறிந்தவரை பிறருக்கு வலியக் கொண்டு போய் சொல்லுவதால் அறியப்படும் பறை போன்றவர் என்கின்றார்.
ஐவகை நிலங்களுக்குரிய பறை
அக்காலத்தில் ஐவகை நிலங்களுக்கும் வெவ்வேறு வடிவம் கொண்ட பறைக் கருவிகளை மக்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.
குறிஞ்சி-தொண்டகப்பறை
முல்லை-ஏறுகோட்பறை
மருதம்-கிளைப்பறை அல்லது நெல்லரிப்பறை
நெய்தல்-நாவாய்ப்பறை அல்லது பம்பை
பாலை -எறிப்பறை எனப் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு தேவைகளுக்காக பறை இசைக்கருவி மக்களோடு வாழ்ந்து வந்திருக்கின்றது.
சங்க இலக்கியங்களில் 400 இடங்களுக்கும் மேல் இந்தப் பறை பற்றியதான செய்தி வருகின்றது. இன்று கிட்டத்தட்ட 30 பறை இசைக் கருவிகளை இனம் கண்டுள்ளனர்.
சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவது போல சிறு பறை, பெரும் பறை என்ற பாகுபாட்டை நாம் ஈழத்தில் காணலாம். குழல், யாழ், முழவு, முரசு போன்ற இசைக்கருவிகளை ஒருங்கிணைந்து வாசிக்க எழும் இன்னிசையை “இன்னியம்” என்று அக்காலத்தில் சொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதே “இன்னியம்” என்ற பெயரில் தமிழ் பாரம்பரிய இசைக் குழு ஈழத்தில் இயங்குகிறது.
பெரும்பறை, தப்பட்டை, உடுக்கு மத்தளம், வணிக்கை, சிலம்பு, சிறுதாளம், பெருதாளம், சங்கு எக்காளம், மற்றும் இன்னும் பல பாரம்பரிய தமிழ் இசைக்கருவிகள் ஒன்று சேர்த்து இசைக்கும் குழுவிற்கு “இன்னிய அணி” எனப் பெயரிட்டுள்ளனர். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இதைத் தோற்றுவித்து மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவின் போது இன்னியம் இசைக்க வைக்க வழி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று ஈழத் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் “இன்னியம்” இசைக்கப்படுகின்றது என்பது பெருமைக்குரியது.
இருப்பினும், ஆங்காங்கே பறை இசையின் தாக்கமும் அதனைப் பயிலும் முயற்சியும், அதற்காகச் சில குழுக்கள் இருந்தாலும் அது எம்மக்கள் மத்தியில் பெருமளவில் முன்னெடுக்கப்படவில்லை.
எப்படி இருந்தாலும், நம்மவர் மத்தியில் கர்நாடக இசையே தமிழரது இசை எனக் கருதிப் பல இசைக்கலைஞர்கள் உள்ளனர். நாமும் கர்நாடக இசை தான் நமது இசை எனக் கூறி நிலத்திலும் புலத்திலும் நமது குழந்தைகளுக்கு கர்நாடக இசையைப் புகட்டிக் கொண்டிருக்கின்றோம்.
அன்று வெற்றிவாகை அறிவிக்க மங்கலத்துக்குப் பயன்பட்ட பறை இன்று அமங்கலத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இறந்தவர் வீட்டில் முழங்கும் பறையாகவும், துக்கத்துக்கு இசைக்கப்படும் இந்த கருவியைப் பயன்படுத்துவோரைத் தாழ்த்தப்பட்ட சமுதாயம் என முத்திரையும் குத்தி விட்டோம்.
நாம் செய்த வரலாற்றுப் பிழைகளை திருத்த வேண்டிய காலத்தில் உள்ளோம். புலத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள், தமிழ் ஆர்வலர்கள், ஈழத்துப் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் தமிழர் இசையான பறையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். பழந்தமிழன் பறை இசையை அதன் பெருமைகளை வெளிக் கொணர வேண்டும். அடுத்து “பறை” எனும் வினைச்சொல்லை ஈழத்தமிழர் பயன்படுத்துகின்றனர். மலையாளத்திலும் இந்த சொல்லைச் சொல்கிறார்கள். எமது பாட்டன், பாட்டி ” என்ன பிள்ளை பறையிறாய்?” எனக் கேட்டது இப்போது ஞாபகத்தில் வருகிறது.
இது ஒரு கிராமப்புறச் சொல்லாக இருக்கின்றது என்று தவிர்த்து விட்ட கதைகளும் எம்மிடம் உண்டு. ஆக இனி நாம் “பறை” என்ற சொல்லை புழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.
பறை வாத்தியத்தைப் பழக வேண்டும் இசைக்க வேண்டும். எம் பாரம்பரிய விழுமியங்களை காப்பாற்றும் பொறுப்பு எம்மிடம் உள்ளது.
இந்தக் கட்டுரையானது பலப் பல பெருமைகளையும் செய்திகளையும் கொண்ட “பறை” பற்றிய தேடல்களுக்கான திறவுகோலாக வாசகர்களுக்கு இருக்கும் என நம்புவோம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-36 | குடவோலை கண்ட தமிழன் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 35 | உள்ளம் நிறையும் உவமைகள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 34 | வேளாண் குடி காத்தல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு – 33 | நீத்தார் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 32 | பழந்தமிழர் பறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 31 | சங்க காலத்தில் மிளகு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 30 | வடக்கிருத்தல் | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 29 | சங்க கால நடுகல் வழிபாடு | ஜெயஶ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 28 | சங்ககாலத்தில் சோறு என்னும் சொற்பதத்தின் பெருமை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 27 | வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு-25 | இரு பெரும் போர்க்களங்கள் | ‘தலையாலங்கானம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 24 | விருந்தினர் வரக் கரைந்த காக்கை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 23 | ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 22 | “புக்கை” என மருவிய “புற்கை” | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 21 | சங்க கால இலுப்பை மரம் | அழிவின் விளிம்பில் இன்று | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 19 | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 18 | சங்க காலத்தில் வேல் வழிபாடு | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 17 | சங்க காலத்தில் பனைமரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 16 | சங்ககாலத்தில் மார்கழித் திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்