செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

1 minutes read

ஹூஸ்டன் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற 32 அணிகள் சுற்று போட்டியில் ஜப்பானிடம் கடும் சவாலை எதிர்கொண்ட பிரேஸில், மாற்றுவீரர் கேப்றியல் மார்ட்டினெலி, உபாதையீடு நேரத்தில் (90+5 நி.) போட்ட கோலின் உதவியுடன் 2 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று முன்னோடி கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கு இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால், தோல்வியைத் தாங்க முடியாதவர்களாக ஜப்பானியர்கள் (வீரர்கள் மற்றும் ரசிகர்கள்) கண்ணீர் சிந்தி வேதனையில் மூழ்கினர்.

அதேவேளை, பிரேஸிலின் நட்சத்திர வீரர் நேமார், வீரர்கள் ஆசனத்தில் இருந்தவாறு பிரேஸிலின் வெற்றியைக் கொண்டாடினார். அவரை மாற்று வீரராக பயிற்றுநர் கார்லோ அன்சிலோட்டி பயன்படுத்த முன்வரவில்லை.

போட்டியின் 29ஆவது நிமிடத்தில் பிரேஸில் பின்களத்தில் ஏற்பட்ட இடைவெளியை நன்கு பயன்படுத்திக்கொண்ட மத்திய கள வீரர் கய்ஷூ சானோ மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு கோல் ஒன்றைப் போட்டு ஜப்பானை முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து இடைவேளையின்போது ஜப்பான் 1 – 0 என முன்னிலையில் இருந்தது.

இதன் காரணமாக இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியும் என்ற கனவில் ஜப்பானியர்கள் திளைத்தனர்.

ஆனால், இடைவேளையின்  பின்னர் பிரேஸில் அணியினர் விவேகத்துடனும்   வேகத்துடனும் விளையாடி ஜப்பானை பிரமிக்க வைத்தனர்.

பத்து நிமிட இடைவெளியில் கோல் போடுவதற்கான இரண்டு முயற்சிகளில் ஈடுபட்ட பிரேஸில் மூன்றாவது முயற்சியில் கோல் நிலையை சமப்படுத்தியது.

போட்டியின் 56ஆவது நிமிடத்தில் பின்கள வீரர் கேப்றியல் மெகோல்ஹேஸ் பரிமாறிய பந்தை நொக்கி உயரே தாவிய மத்திய கள வீரர் கெஸ்மிரோ தனது தலையால் முட்டி கோல் நிலையை சமப்படுத்தி பிரேஸிலுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.

சில நிமிடங்கள் கழித்து வினிசியஸ் ஜூனியர் கோல் போட எடுத்த முயற்சியை ஜப்பான் கோல்காப்பாளர் ஸியோன் சுஸூக்கி மிக வேகமாக செயல்பட்டு தடுத்தார்.

இதனைத் தொடர்ந்து போட்டி சூடு பிடித்ததுடன் இரண்டு அணியினரும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.

 

போட்டி 90ஆவது நிமிடத்தைக் கடந்து உபாதையீடு நேரத்திற்குள் புகுந்ததும் இரண்டு அணியினரும் இயல்பாகவே பதட்டம் அடையத்  தொடங்கினர்.

ஆனால், 90+5ஆவது நிமிடத்தில் மத்திய கள வீரர் ப்ரூணோ கிமாரேஸ் பரிமாறிய பந்தை மாற்று வீரர் கேப்றியல் மார்ட்டினெலி கோலாக்கி பிரேஸிலை 2 – 1 முன்னிலையில் இட்டார்.

ஆட்டத்தில் உபாதையீடு நேரம் 11ஆவது நிமிடத்தைத் தொட்டபோது போட்டியை நிறைவு செய்யுமாறு மத்தியஸ்தருக்கு பிரேஸில் பயிற்றுநர் கார்லோ அன்சிலோட்டி சைகை செய்தார். ஆனால் மேலும் ஒரு நிமிடம் கழித்தே ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போதுதான்  பிரேஸில்   பயிற்றுநருக்கு உயிர்வந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.