இத்தாலியின் பல்வேறு பிராந்தியங்களிலும் அரசாங்கத்தின் கொள்கைகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் இராணுவச் செலவீனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்களின் போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 370 இற்கும் மேற்பட்டோர் தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் ரோமில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தீவிர ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் பெருமளவிலான இளைஞர்கள் கலந்துகொண்டதுடன், சிலர் பலஸ்தீனக் கொடிகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இதன்போது அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் தண்ணீர்ப் பீய்ச்சி அடித்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதேவேளை, டியூரின் நகரிலும் ஆர்ப்பாட்டங்களின் போது அமைதியின்மை மற்றும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்துக் களமிறக்கப்பட்ட கலகத் தடுப்புப் பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டு நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும், மிலான் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் காரணமாக அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை. மிலான் நகரின் பாதுகாப்பிற்காக 500 இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.