செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சி

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சி

2 minutes read

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக சில தரப்பினர் செயற்படுவதாகக் கூறிய களுவாஞ்சிகுடி வர்த்தக சமூக நலம்புரிச் சங்கத்தின் தலைவர் மனோரஞ்சிதராஜா ரமணன், இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்காத வகையில் அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று (22) செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடிய களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கத்தினர், சவூதியில் தண்டனைக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அனோஜனின் விடுதலை தொடர்பில் கருத்துகளை வெளியிட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத் தலைவர் மனோரஞ்சிதராஜா ரமணன்,

“எங்களது சகோதரர் அனோஜன் சவூதியில் தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். சமூக ஊடகம் வாயிலாக அவர் தெரிவித்த கருத்து ஒரு மதத்தை இழிவுபடுத்தியதாகக் கருதப்பட்டு, அதனடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

அவர் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவரை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக அறிகின்றோம்.

இலங்கையில் எந்தவிதமான இன, மத முரண்பாடுகளையும் ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை எவரும் முன்வைக்க வேண்டாம் என எமது மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

சமூக வலைத்தளங்களில் மதங்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் வெளியிடப்படுவதும், அதற்கு பதிலளிக்கும் வகையில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய கருத்துகள் முன்வைக்கப்படுவதும் இரண்டுமே தவறான விடயங்களாகும். இவை இன, மதங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தக்கூடியவை.

இதனை ஓர் உதாரணமாகக் கொண்டு, எதிர்கால சந்ததியினரைக் கருத்திற்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் நல்ல விடயங்களை முன்கொண்டு செல்வதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். அவற்றின் ஊடாக மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை வெளியிட்டு முறுகல் நிலையை உருவாக்கக்கூடாது.

அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் செயற்படுவதை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதானிக்க முடிகின்றது. மதங்களைப் புண்படுத்தும் விடயங்களை பெரிதுபடுத்தி, அதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு ஒருபோதும் இடமளிக்காத வகையில் அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அனோஜனின் விடுதலை தொடர்பில் சவூதி அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும் என களுவாஞ்சிகுடி வர்த்தக சங்கம், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பிரதேச மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் அண்மைக்காலமாக நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களின் பணம் பாதிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மனோரஞ்சிதராஜா ரமணன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிலர் தமது வர்த்தக சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் 15 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட ஒருவர், உரிய காலம் நிறைவடைந்த பின்னர் பணத்தை மீளப் பெறச் சென்றபோது, மேலும் மூன்று மாதங்களுக்கு பணத்தை வைப்பில் வைத்திருக்குமாறும், அதன் பின்னர் அரச வங்கி ஒன்றில் தாம் வழங்கும் காசோலையை மாற்றி பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி, குறித்த நபர் மூன்று மாதங்களுக்குப் பின்னர் அரச வங்கிக்குச் சென்று காசோலையை மாற்ற முற்பட்டபோது, அது செல்லுபடியற்ற காசோலை எனத் தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு சம்பவம் மாத்திரமே எனவும், இதுபோன்ற மேலும் பல சம்பவங்கள் பிரதேசத்தில் இடம்பெறுவதாகவும் கூறிய அவர், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.